20 Apr 2016

கிழக்கு மாகாண கல்விப் பின்னடைவிற்கு மாகாண கல்வி அமைச்சர் பொறுப்புக்கூறல் வேண்டும் இலங்கை ஆசிரியர் சங்கம்

SHARE
தேசிய ரீதியிலான கல்வி மட்ட அடைவில் ஒப்பீட்டளவில் கிழக்கு மாகாணம் 8வது  இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளமைக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் பொறுப்புக்கூறல் வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கல்வி மட்டப் பின்னடைவு சம்பந்தமாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பொ. உதயரூபன் புதன்கிழமை (20) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 2015ம் ஆண்டுக்குரிய 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த (சா த) பரீட்சைப் பெறுபேறுகள் மாகாண மட்டத்தில் பின்னடைவை அடைந்துள்ளதோடு வலய மட்ட ரீதியில் பெரும் அதிர்ச்சிப் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளமை தொடர்பாக மாகாண கல்வி அமைச்சர் பொறுப்புக்கூறல் வேண்டும்.
கடந்த காலங்களில் வினைத்திறனற்ற ஆசிரிய ஆலோசகர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், அசிரியல் வாதிகளின் சிபார்சுகளில் நியமிப்புச் செய்யப்பட்டமையும் பல கல்வி வலயங்கள் அரசியல் மயமாக்கப்பட்டமையுமே மாகாணக் கல்வி பின்னோக்கி சென்றுள்ளதற்கான பிரதான காரணங்களாகும்.
கல்வி வளர்ச்சியில் அக்கறையில்லாத சில அரசியல்வாதிகள் சட்டத்திற்கு முரணான இடம்மாற்றங்கள், நியமிப்புக்கள், நடமாடும் சேவைகளில் இடமாற்ற சபையின் அனுமதியின்றி தன்னிச்சையாக இடம்மாற்றங்களை வழங்கியமை அர்ப்பணிப்பான அரசசேவையில் உள்ள கல்வி நிர்வாகங்களில் தலையிட்டமை, சேவைப் பிரமாண நிபந்தனைகளுக்கு முரணாக அதிபர்களை நியமிப்புச் செய்தமை போன்றவற்றால் மாகாணக் கல்விப் புலம் குழப்பப்பட்டுள்ளது.
அதன் காரணமாக சுதந்திரமான வினைத்திறன் மற்றும் விளைதிறனுள்ள கல்வி என்பது கைக்கூலிகளின் அராஜக செயல்களாலும்; வெளிப்படைத் தன்மையற்ற நிர்வாகச் சீர்குலைவாலும் பின்னடைவைக் கண்டுள்ளது.
மேலும் வலயங்களில் நியமிப்புச் செய்யப்பட்டுள்ள ஆசிரிய ஆலோசகர்கள் உதவிக்கல்விப் பணிப்பாளர்கள் கல்வித் திட்டம் தொடர்பான மறுசீரமைப்பு தொடர்பாக தூரநோக்கு அற்றவர்களாக இருப்பதனால் கிழக்கு மாகாண தவணைப் பரீட்சைகள் குழறுபடி நிறைந்ததாக காணப்படுகிறது.
தேசிய மட்டத்தில் நடைபெறும் பரீட்சை வினாத்தாள்களுக்கு முற்றிலும் முரணான வினாத்தாள்கள் வலய மட்டங்களிலும் மாகாண மட்டங்களிலும் தயாரிக்கப்படுகின்றன.
கிழக்கு மாகாணத்தில் பெரும்தொகையான பணம் செலவிடப்பட்டு நடைபெறும் கல்விச் செயலமர்வு மற்றும் முன்னோடிக் கருத்தரங்குகள் வினைத்திறனற்றதாக இடம்பெறுகின்றன.
மேலும் அது வலயக் கல்விப் பணிப்பாளர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் நடைபெறுவதுமில்லை.
தற்போது வெளியிடப்பட்டுள்ள இலங்கை கல்வி நிர்வாக சேவையின் பிரமாணக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சேவைப் பணிக்கு முரணாக இச்செயலமர்வுகள் இடம்பெறுகின்றன.
கல்வி அதிகாரிகள் இதனை மேற்பார்வை செய்வதில்லை.
மேலும் ஓய்வு பெற்ற முன்னாள் மாகாணக் கல்விப் பணிப்பாளரும் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சரும் மாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பாக நேரடியான கண்கானிப்பின் கீழ் இது வரை செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தவில்லலை.
ஓய்வு பெற்ற முன்னாள் மாகாணக் கல்விப் பணிப்பாளர் பிரத்தியேக செயலாளராக நியமிப்புச் செய்யப்பட்டிருந்தும் இதுவரை ஆக்கபூர்வமான கல்வி தொடர்பான நடவடிக்கை எதனையும் நடைமுறைப்படுத்தவில்லை.
அத்துடன், பொதுமக்களின் பணம் மாகாணக் கல்வி அமைச்சில் வீண்விரயம் செய்யப்படுவதையும் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதோடு மாகாணத்தின் கல்வி பின்னடைவதற்கான முழுப்பொறுப்புக் கூறலையும் ஜனநாயகப் பண்புகளுக்கு மதிப்பளித்து மாகாணக் கல்வி அமைச்சர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தனது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: