2 Apr 2016

இரட்டை வேடம் போடுபவர்கள் யார் என்பதை அமீர் அலி சிந்திக்க வேண்டும்; ஸ்ரீநேசன் பதிலடி

SHARE
பிரதியமைச்சர் அமீரலி அவர்களே நாம் இரட்டை வேடம் போடுவதாக கூறியுள்ளீர்கள் நாம் கொள்கையோடு கூடிய அரசியலை செய்கின்றோம். நாங்கள் பதவிக்காக, பணத்திற்காக, படாபடோபங்களுக்காக கொள்கைகளை விற்கவில்லை. நேற்று, இன்று, நாளை என்ற போக்கில் அரசியல் கட்சிகளை மாற்றி இரட்டை வேடம் போடும் போக்கு எங்களிடம்
இல்லையே..
தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கும் போது ஒரு வேடத்தையும், வென்று விட்டால் செருக்குத்தனமான  வேடத்தையும் நாங்கள் போட்டதில்லையே..  இரட்டை வேடம் என்பது யாருக்குப் பொருந்தும் என்பதை அமீரலி அவர்களே சிந்திக்க வேண்டும்.

என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், அண்மையில் பிரதியமைச்சர் அமீர் அலி தெரிவித்த கருத்துக்கு பதிலடி வழங்கி சனிக்கிழமை (02) விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவ்வறிக்கையினூடாக அதரிவித்துள்ள அவர்,


பிரதியமைச்சர் அமீர் அலியின் காணொளிப்பதிவொன்று அண்மையில் சமூக வலைத்தளங்கள் மூலமாக வெளியாகியிருந்தது. அதில் தமிழ் மக்களின் நிலை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சக நாடாளுமன்ற உறுப்பினர் போன்ற  விடயங்கள் தொடர்பாக மலினமான வாக்குப்பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இவ்வாக்குப் பிரயோகங்கள் பற்றிய யதார்த்தமான பதில் விளக்கங்களை நான் ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தியிருந்தேன். ஆனால் 31.03.2016 இல் வெளியாகிய ஊடகப் பதிவுகள் மூலமாக பொருத்தமற்ற பதில்களும், தப்பான விளக்கங்களும் அமீர் அலி மூலமாக வெளியிடப்பட்டிருந்தன. இதனால் மீண்டும் மக்களுக்கு உண்மைகளைச் சுட்டிக்காட்ட வேண்டிய நிலையில் நான் உள்ளேன்.


அவரது காணொளிப்பதிவில் இடம்பெற்றவற்றை இன்றும் எவராலும் மீட்டுப்பார்க்க முடியும். அதில் உள்ளவற்றை அமீர் அலி அமைதியாக இருந்து, சுயவிமர்சன அடிப்படையில் உள்வாங்கிக் கொண்டால் இனியும் பொருத்தமற்ற விளக்கங்களையும்,தப்பான கருத்துகளையும் விதண்டாவாதங்களையும் தவிர்த்துக்கொள்ள முடியும். இல்லாது விட்டால் முற்போக்கான சிந்தனையாளர்கள் இவரது கருத்துகளை மட்டுக்கட்டி விடுவார்கள் .

உங்களது வார்த்தை பதிவுகளை மீண்டும் நினைவூட்டுகிறேன்.


1. தமிழர்களின் போராட்டம்  சைபரில்  ஆரம்பித்து  சைபரில்  முடிந்துள்ளது.


2. தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் அரசியல் தமிழர்களைப் பிச்சைக் காரர்களாக்கியுள்ளது. மேலும் தமிழர்களை பிச்சைக்காறர்களாக்கி தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் அரசியல் செய்கிறார்கள்.

3. தமிழர்களை ஏமாற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் செய்கிறது.

4. அபிவிருத்திக்குழுத் தலைமைக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் நாக்கு வழித்துத் திரிந்தார்கள். 


மேற்படி வார்த்தைகளை மையப்பொருளாக கொண்டுதான் நான் பதில்களை அமீரலிக்கு வளங்கி இருந்தேன். ஆனால் நான் குறிப்பிட்ட கேள்விகளுக்கும்,  விளக்கங்களுக்கும் எந்த வகையிலும் முறையான பதில்களை அளிக்காமல் விதண்டாவாதத்தினை அல்லது குதர்க்கத்தினை முன்வைத்திருந்தார். எனவே மீண்டும் எனது அருமையான நேரத்தினை விரயம் செய்து பொருத்தமற்ற உங்கள் கருத்துக்களுக்கு விளக்கங்களை அளிக்கின்றேன். இனிமேலாவது அறிவியல் ரீதியாக சிந்தித்து பதிலளியுங்கள். இனிமேலும் குதர்க்கப்பதில்கள் கிடைத்தால் எனது நேரத்தை வீணாக்கிக்கொள்ள நான் விரும்பவில்லை.


நான் கூறாத கருத்துக்கள் பற்றியும், என்னிடம் இல்லாத இயல்புகள் பற்றியும் தாறுமாறாக கருத்துக்களை கூறுவதால் புண்பட்ட தமிழ் இதயங்களை பண்படுத்திவிட முடியாது.

இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லிம்களுக்கு தனி அலகு என்ற தமிழரசுக்கட்சியின் உறுதி மொழியினை நாம் தவிடு பொடியாக்கி விட்டதாக  அபாண்டப் பழி சுமத்தியுள்ளீர்கள் அப்படி எதுவும் எமது பதிவில் இடம்பெறவில்லையே.. வாதம் செய்ய முடியாது விட்டால் விதண்டாவாதத்தையா செய்வது..?


தமிழரசுக்கட்சியின் தலைமை எம்மைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு இருந்தீர்கள். சொல், செயல்,  கொள்கை போன்ற சுய கட்டுப்பாடுகள் எம்மவரிடம் உண்டு.ஆயின் யார், யாரைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நாங்கள் மனிதநேயம் அற்றவர்கள், கொக்கரிக்கின்றவர்கள் என்று இன்னும் வார்த்தைகளைப் பிரயோகித்திருந்தீர்கள். பதவி, மோகம், பண மோகம், அதிகார வெறி காணப்படுகின்றவர்களிடந்தான் மனித நேயம்
இருக்குமா..? பதவிச் செருக்கு, பணத்திமிர், அதிகாரவெறி கொண்டவர்கள் தான் கொக்கரிப்பார்கள். பதவி இழந்தால் மயங்கி வீழ்ந்தும் விடுவார்கள். பதவி இருந்தால் கொக்கரிப்பது, பதவி இழந்தால் பெட்டிப்பாம்பாகி அடங்குவது போன்ற பண்புகள் எங்களிடம் இல்லையே.

எனது கருத்தினைத் தான்தோன்றித்தனமானது, அரசியல் ஞானமற்றது, குரோதமானது என்றெல்லாம் கூறியிருந்தீர்கள். தயவு செய்து உங்களது கருத்துக்களையும், எனது கருத்துகளையும் அரசியல் ஞானம் உள்ளவர்களிடம் கொடுத்து கருத்துகளின் தரத்தினை எடை போட்டுக்கொள்ள முயற்சி எடுங்கள். எனது கருத்துக்கள் அடக்கமாகவும், அறிவு பூர்வமாகவும் இருந்ததாக ஞானமுள்ள முஸ்லிம் சகோதர்கள் கூட என்னிடம் கூறியுள்ளார்கள்.

நான் கற்கும் காலத்திலிருந்து இன்றுவரை முஸ்லிங்களை சகோதர்களாகவும், நண்பர்களாகவுமே கருதுகிறேன். எனக்கு கண்ணியமான பல முஸ்லிம் நண்பர்கள் இப்போதும் இருக்கின்றார்கள் என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அப்படி இருக்க, காரண காரியமற்ற கருத்துக்களைக் கொட்டியுள்ளீர்களே.

நண்பர்களின் உயர் பதவிகளைத் துறக்க வைத்து அரசியலுக்கு இழுத்து விட்டு அவர்களின் காலை வாரி விட்டு கழுத்தறுப்பு அரசியல் செய்கின்றவர்கள் நாம் அல்லர். அரசியல் கர்வத்தினால் தகுதியான கல்வி அதிகாரியினை ஓரங்கட்டி விட்டு ஓரவஞ்சனை செய்யும் போக்கு எம்மிடமில்லை சுயநல அரசியலுக்காக பிரித்தாளும் தந்திரத்தினைப் பயன்படுத்தி தமிழ் பேசும் கல்விச்சமுகத்தினை துருவங்களாக்கி அரசியல் செய்யும் விசமத்தனமான சிந்தனை எமக்கு இல்லை.

கேட்கப்பட்ட ஐய்ய வினாக்களுக்கு விடையளிக்காமல் விடுத்து, கேட்கப்படாத அல்லது எழுத்தப்படாத விடயங்களுக்கு குதர்க்கமாக பேசுகின்ற, எழுதுகின்ற போக்கு என்னிடமில்லை. நான் உங்களது கருத்துக்களுக்கு மாத்திரம் அன்றும் விடையளித்தேன், இன்றும் விடையளிக்கிறேன். ஆனால் நீங்களோ மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போன்று குதர்க்கமான கருத்துகளையே வெளிப்படுத்துகின்றீர்கள்.

இனிமேலாவது விதண்டாவாதங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். நாகரிகமாக பேசவும் நாகரிகமாக எழுதவும் பழகிக்கொள்வோம். சில மலீனமான தரக்குறைவான சொற்களை வைத்து வார்த்தைகளை பேசுவதையும்,வாக்கியங்களை  எழுதுவதையும் தயவு செய்து தவிர்த்து விடுங்கள். இப்போதாவது அறிவு என்னும் அங்குசத்தால் ஆத்திரமென்னும் மதயானையை அடக்கி கொள்ளுங்கள்.

வாய்க்குள் இருக்கும் வரை வார்த்தைகள் எமக்கு சொந்தமானவை, வார்த்தைகளைக் கொட்டி விட்டால் அவ்வார்த்தைகளுக்கே நாம் சொந்தமானவர்கள் ஆகி விடுவோம். பேச வேண்டும் என்பதற்காக பேசாமல் பேச வேண்டியதைப் பேசுவோம். எழுத வேண்டும் என்பதற்காக எழுதாமல் எழுத வேண்டியதை எழுதுவோம். உங்களைப் பற்றிய விமர்சனங்கள் என்னிடம் அதிகமுள்ளன. நாகரிகம் கருதி வார்த்தைகளையும் சொற்களையும் வலிந்து கட்டுப்படுத்துகிறேன். நல்லாட்சி மலர இடமளிப்போம் காட்டாட்சி மறைய வழிவகுப்போம். என மேலும் தெரிவித்துள்ளார்
SHARE

Author: verified_user

0 Comments: