27 Apr 2016

ஏறாவூர் நகர சபையில் தேவைக்கதிகமான நியமனங்களை வழங்கி நகரசபை நிதியை முதலமைச்சர் வீண் விரயம் செய்யவில்லை முதலமைச்சரின் இணைப்பாளர் ஏ. அப்துல் நாஸர்

SHARE
கிழக்கு மாகாண முதலமைச்சரால் ஏறாவூர் நகர சபையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேவைக்கு அதிகமாக நியமனங்கள் வழங்கப்படவில்லை என முதலமைச்சரின் இணைப்பாளர் ஏ. அப்துல் நாஸர் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் நகர சபையில் அளவுக்கதிகமான ஆளணி உள்ளதன் காரணமாக நகர சபையின் வருமானத்திலிருந்து மாதாந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதனால் நகரசபை நிதி தீர்ந்து விட்டதாக குற்றஞ்சாட்டப்படுவது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஏறாவூர் நகர சபை ஆட்சேர்ப்பு விடயம் தொடர்பில் உண்மைக்கு புறம்பானதும், வீண் பழி சுமத்துகின்ற விதத்திலான கருத்துகள் தொடர்பில், உண்மையான விடயங்களை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

ஏறாவூர் நகர சபையை 01.04.2011 ல் பொறுப்பெடுத்த ஐக்கிய மக்கள் சுகந்திர கூட்டமைப்பின் ஆட்சியாளர்கள்; அவர்களின் ஆதரவாளர்கள் 70 பேருக்கு பதிலீட்டு சிற்றூழியர் நியமனங்களை வழங்கினர். 

இது ஏற்கனவே இருந்த மேலதிக ஆளணிக்கு மேலதிகமாக வழங்கப்பட்ட நியமனமாகும்.

மார்ச் 2015 இல் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் பதவியேற்று, அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் 180 நாட்களைப் பூர்த்தி செய்தவர்களுக்கு வழங்கப்பட்ட நிரந்தர நியமனத்தின் அடிப்படையில் பல சவால்களுக்கு மத்தியில் 25.06.2015 இல் முதலமைச்சிரின் சிரத்தையான முயற்சியினால் 40 பேருக்கு நிரந்தர நியமனம் பெற்றுக் கொடுக்கப்பட்டது.

இந்த ஆட்சேர்ப்பு இதற்கு முன்னர் ஏறாவூர் பிரதேச சபையாகவும் அதன் பின்னர் நகர சபையாக மாற்றப்பட்ட வேளையிலும் ஆட்சி செய்த நிருவாகத்தினரால் குறைவான அடிப்படைத் தகுதிகளோடு செயலாளரின் சிபாரிசின் அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டிருந்தவர்களாகும்.
இவர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் முதலமைச்சரின் ஆதரவாளர்கள் என்று கூறுவதற்கு இல்லை.

எல்லா நியமனங்களும் முதலமைச்சரின் அழுத்தத்தினாலேயே செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டு முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயற்பாடாகும்.
ஆக 14 பேருக்கு மாத்திரமே இதுவரை முதலமைச்சரின் சிபாரிசின் பேரில் பதிலீட்டு சிற்றூழியர் நியனம் வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுள் 07 பேர் திண்மக் கழிவு அகற்றும் பணிக்கு மேற்பார்வையாளர்களாகவும், 5 பேர் சபைக்கு வரி வருமானத்தை வசூலித்துக் கொடுப்பவர்களாகவும், 02 பேர் நூலக பனியாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த காலத்தில் ஏறாவூர் நகர சபையின் அங்கீகரிக்கப்பட்ட சிற்றூழியர் ஆளணி 78 பேர் ஆகும்.

இதில் 30 பேர் மாத்திரமே அந்தத் தொழிலை செய்கின்றவர்கள். மிகுதி 48 பேரும் வாசிகசாலை, அலுவலகம் ஆகியவற்றில் பணிபுரிகின்றனர்.
இவ்வாறான ஆட்சேர்ப்பை ஏறாவூர் நகர சபையாக மாற்றம் பெற்றதன் பிற்பாடு ஆட்சி செய்த அரசியல் தலைமைகளே மேற்கொண்டனர். இதுதான் இங்கு இடம்பெற்ற மிக மோசமான நிதி வீண்விரயமாகும்.
உள்ளுராட்சி நிருவாகம் 15.05.2015 ல் கலைக்கப்பட்டபோது வங்கிக் கூற்றின் படி ஏறாவூர் நகர சபையின் இருப்பில் மிகுதியாக இருந்தது 5,52,099.30 (ஐந்து இலட்சத்து ஐம்பத்து இரண்டாயிரத்து தொண்ணூற்று ஒன்பது ரூபா முப்பது சதம்) இதற்கு முதல் பல கோடி ரூபாய் இருப்பில் இருந்து அவர்களின் இவ்வாறான மேலதிக நியமனங்களினால் சபை நிதி தீர்ந்துள்ளமை இதன் மூலம் தெளிவாகின்றது.

அரசியல் நாகரீகமற்று காழ்ப்புணர்ச்சி கொண்டு மற்றவர்கள் மீது பழியை போடவேண்டும் என்பதற்காக தாங்கள் செய்த பிழையை அப்படியே குத்துக்கரணம் அடித்து மாற்றுவது யதார்த்தத்துக்கு முரணான அசிங்கமான செயல்.

இந்த பரவணி அரசியல் மாறவேண்டும். தானே எல்லாவற்றையும் செய்து விட்டு கடைசித் தறுவாயில் வேஷம் போடக் கூடாது.

இவர்கள் முதலமைச்சரின் மீது விரல் நீட்டுவதற்கு முதலமைச்சர் நகர சபையின் தவிசாளரோ, உறுப்பினரோ, செயலாளரோ அல்;ல அவர் உள்ளுராட்சி மன்றங்களுக்கு பொறுப்பான அமைச்சரே ஆகும்.

தற்போது ஏறாவூர் நகர சபையில் மேலதிகமாக 60 பேர் உள்ளனர் இவர்களுள் முதலமைச்சரினால் வழங்கப்பட்ட 14 பேர் தவிர, மற்றைய 46 பேரும் முன்பிருந்த ஆட்சியாளர்களால் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டு கைவிடப்பட்டவர்களாகும். 

எனவே இவர்களை நிறுத்துவதா? அல்லது அவர்களுடைய சுகாதாரத் தொழிலாளி நியமன வேலைக்கே அனுப்புவதா? என்பதை முன்பு அளவுக்கதிகமாக அட்சேர்ப்புச் செய்த அரசியல் தலைமைகளே பதில் கூற வேண்டும்.

இது பற்றிய தகவல்களை ஆதரபூர்வமாக அறிய விரும்பும் வரி செலுத்துபவர்கள் ஏறாவூர் நகர சபையின் செயலாளரைத் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும். 

SHARE

Author: verified_user

0 Comments: