(டிலா)
கல்முனையில் விளையாட்டு கழகங்களின் சம்மேளனம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் கூறினார்.
கல்முனை பிரதேச விளையாட்டுக் கழகங்களின் தேவைப்பாடுகளை கேட்டறியும் கலந்துரையாடல் (2) இரவு கல்முனை அல்-அஸ்கர் வித்தியாலயத்தில் பிரதி அமைச்சர் தலைமையில் இடம்பெற்றது. இங்கு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது பிரதி அமைச்சர் ஹரீஸ் மேலும் தெரிவிக்கையில்,
கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானம் சகல வசதிகளுடன் கூடிய மைதானமாக விரைவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதன் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டதும் வீரர்கள் விளையாடுவதற்கு மாற்று மைதானம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என தெரிவித்தார்.
விளையாட்டுக்கழகங்களில் விசேட திறமை காட்டும் வீரர்களுக்கு மேலதிக பயிற்சிகளை கொழும்பு மற்றும் இதர பிரதேசங்களில் சர்வதேச தர பயிற்சியாளர்களைக் கொண்டு வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றேன். அத்தோடு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் அமைச்சு மட்டத்தில் நடைபெற்று வருகின்றது. அவ் உபகரணங்கள் விரைவில் வழங்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.
விளையாட்டுக்கழகங்களின் பிரதிநிதிகள் கல்முனை பிரதேச கழகங்களை உள்ளடக்கிய சம்மேளனம் ஒன்றினை அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்றுக் கொண்ட அமைச்சர்,
இதற்கு ஓய்வுபெற்ற அட்டாளைச்சேனை கல்வியற் கல்லூரியின் உடற்கல்வி விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா மற்றும் ஓய்வு பெற்ற அம்பாறை மாவட்ட விளையாட்டு அதிகாரி எம்.ஏ.நபார் ஆகியோரை உள்வாங்கி சகல கழகங்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய சம்மேளனத்தினை அமைக்குமாறு ஆலோசனை வழங்கினார்.
இதில் கல்முனை பிரதேச விளையாட்டுக்கழகங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment