வறுமையினை காரணமாகக் கொண்டு பிள்ளைகளின் கல்வியினை இடை நடுவே நிறுத்துவதற்கு பெற்றோர் ஒரு போதும் துணைபோகக் கூடாது. பிறக்கும் தருணத்தில் நாம் அனைவரும் ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இன்றித்தான் படைக்கப் படுகின்றோம்
இதே போன்றுதான் ஏனைய உயிரினங்களும் படைக்கப் படுகின்றன. எம்மைப் படைத்த இறைவனின் துணையுடன் ஏதோ ஒரு வகையில் நாம் வாழ்கின்ற நிலையில் எமக்குள் எதுவிதமான பாகுபாடுகளும் கிடையாது. நிலையானது உலகில் ஏதும் கிடையாது. ஒரே மொழியினை நேசிக்கின்ற தமிழ் முஸ்லிம் இனங்களுக்கிடையில் ஒற்றுமை கட்டியெழுப்பப்பட வேண்டும். இதற்கான அரசியல் சூழல் நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்தின் மூலமாக கிடைக்கப் பெற்றுள்ளது.
இவ்வாறு துறைநீலாவணைக் கிராமத்தில் தையல் பயிற்சியினை பூர்த்தி செய்த 10 யுவதிகளுக்கு கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தனது பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் ஊடாக கொள்வனவு செய்யப்பட்ட தையல் இயந்திரங்களை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (24) துறைநீலாவணை கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் தலைவர் கா.கைலாசபதி தலைமையில் நடைபெற்ற போது நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்… அபிவிருத்தி வேலைத் திட்டமானது அன்று முதல் இன்று வரைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரைப் பிரதேசம் தொடக்கம் துறைநீலாவணை கிராமம் வரைக்கும் என்னால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் சில இன மதவாதம் பேசுகின்ற அரசியல் கட்சிகளின் தலையீடு காரணமாக எனது அபிவிருத்தி தடைப்படுமோ என்று பயப்பட்;டவன் கிடையாது.
நாங்கள் எங்களுக்குள் இன மத வாதத்துடன் பழகுவதனால் எதனையும் சாதித்து விட முடியாது. இதனை சிலர் இன்றும் உணராமல் இருக்கின்றனர்.
கடந்த காலங்களில் தேர்தலில் தோல்வியினை சந்தித்த பலர் இன்று என்னுடன் நாடாளுமன்றத்தில் இருந்திருக்கின்றார்கள். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இம் மாவட்டத்தில் இருந்தும் ஒன்றையும் சாதிக்க வில்லை.தேர்தல் ஒன்று நடைபெறுமானால் ஒன்றில் நான் இருக்கின்றேனோ அல்லது மதவாதம் பேசுகின்றவர்கள் இருக்கின்றார்களோ தெரியாது. தீர்ப்பினை வழங்குபவர்கள் மக்களாக இருந்தாலும் எமக்கு மேலாக படைத்த கடவுள் இருக்கின்றார். ஒரு அரசியல் வாதியின் தெரிவுக்கு நிற, பால், வேறுபாடு கிடையாது. மக்களின் கரங்களினால் இடப்படுகின்ற புள்ளடி ஒரு வேட்பாளரை மக்கள் பிரதி நிதியாக மேலோங்கச் செய்கிறது.
கடந்த காலங்களில் எமது நாட்டில் இருக்கக் கூடிய இரு பெரும் கட்சிகளும் மாறி மாறி ஆட்சி அதிகாரங்களை பெற்றுக் கொண்ட போதிலும் சிறுபான்மை இனங்களுக்கு எதுவிதமான உரிமைகளும் கிடைக்க வில்லை ஆனால் இன்று இரு பெரும் கட்சிகளும் ஒன்றிணைந்து நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்தினை உருவாக்கியுள்ளன.அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள சலுகையினை விழிப்பாக இருந்துதான் பார்க்க வேண்டும்.
அண்மையில் நடைபெற்ற பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுடனான சந்திப்பின் போது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களின் உண்மையான நிலையினை தெளிவாக கூறியிருக்கின்றேன். அதற்கு அவர் சாதகமான பதிலை வழங்கியிருக்கின்றார். எது எப்படியாக இருந்தாலும் என்னை நேசிக்கின்ற மக்களுக்காக என்னால் செய்யக் கூடிய அனைத்து உதவிகளையும் வழங்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment