19 Apr 2016

திருமணத்திற்கு தேதி குறிக்கப்பட்ட யுவதி விபத்தில் சிக்கி மரணம்

SHARE
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு புதூர் வீச்சுக்கல்முனை வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கிய யுவதி ஒருவர் செவ்வாய் அதிகாலை மரணித்து விட்டதாக மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

வீச்சுக்கல்முனை பிரதான வீதியைச் சேர்ந்த விமலநாதன் விநோதினி (வயது 24) என்பவரே விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தவராகும்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த யுவதி வீட்டிலிருந்து கடைக்கு பொருட்கள் வாங்க தெருவுக்குச் சென்று கொண்டிருக்கும்போது உன்னிச்சைக் குளத்திற்கு நீராடச் சென்று திரும்பிக் கொண்டிருந்தவர்கள் பயணித்த வேன் யுவதி மீது மோதி அவரை அருகிலிருந்த மின்சாரக் கம்பத்தில் கொண்டுபோய் நெருக்கியுள்ளது.

படுகாயமடைந்த யுவதி உதவிக்கு விரைந்தவர்களால் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். உட்காயங்கள் காரணமாக பின்னர் அவர் அங்கிருந்து அம்பாறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
எனினும், அங்கு சிகிச்சையளிக்கப்படடு வந்த நிலையில் செவ்வாய் அதிகாலை மரணித்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் பற்றி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 19 வருடங்களாக தனது 3 பெண் மக்களின் நல்வாழ்வுக்காக வெளிநாட்டில் தொழில் புரிந்து வந்த தந்தை மூத்த மகளின் திருமணத்திற்காக நாடு திரும்பிய அன்றைய தினமே மகள் விபத்தில் சிக்கிய நிலையில் மரணமடைந்த செய்தி ஊர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விபத்தில் சிக்கி மரணித்த யுவதிக்கு மே 17 ஆம் திகதி திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, கடந்த ஜனவரி மாதம் 11 ஆந் திகதி புதூரில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் சிக்கி காயமடைந்திருந்த தங்கத்துரை நல்லம்மா ( வயது 76) என்பவர் செவ்வாய்க்கிழமை காலமானார். 




SHARE

Author: verified_user

0 Comments: