முன்னாள் சபாநாயகரும், அமைச்சருமான எம்.எச். மொஹமட் தனது 95ஆவது வயதில் காலமான செய்தி கேட்டு மிகவும் கவலையடைகிறேன். இவரது மறைவு குறிப்பாக முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை பேரிழப்பாகும். முஸ்லிம்
சமூகத்திற்காக தன்னுடைய சிறு வயதிலிருந்து மிகப் பாரிய சேவைகளை சமூகத்திற்காகவும், மார்க்க விடயங்களுக்காகவும் ஆற்றிய ஒரு மிகப் பெரிய ஒரு தலைமைத்துவத்தை நாம் இன்று இழந்திருக்கின்றோம். என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது…
மூத்த முஸ்லிம் அரசியல் வாதியான எம்.எச். மொஹமட் தனது அரசியல் வாழ்வில் ஏராளமான சேவைகளை மக்களுக்கு செய்துள்ளார்.
கொழும்பின் அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்புக்களை செய்துள்ள இவர், முஸ்லிம் சமூகத்தின் கல்வி, பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமான சேவைகளை ஆற்றியுள்ளார்.
நூற்றுக்கணக்கான பள்ளிவாயல்கள், மதரஸாக்கள், நிறுவனங்களை உருவாக்கி இலங்கையிலே வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு மாத்திரமல்ல ஏனைய சமூகங்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையிலே ஒரு புரிந்துணர்வை ஒற்றுமையை ஏற்படுத்துகின்ற மிகப் பெரும் பாலமாக எம்.எச். மொஹமட் திகழ்ந்தார்.
அவர் தன்னுடைய இறுதி மூச்சு வரையும் முஸ்லீம் சமூகத்திற்காக மிகப் பெரும் பணியாற்றியவர்கள்.
குறிப்பாக இன்று உலகம் முழுவதும் உலக முஸ்லீம்களுக்காக பணிபுரிகின்ற “றாபியதுல் ஆலமி இஸ்லாமி” என்ற நிறுவனத்தை உருவாக்கிய ஆரம்பகால 11 உறுப்பினர்களில் 10 பேர் இது வரை மரணித்து இவர் மாத்திரம் இறுதியாக உயிரோடு இருந்த ஸ்தாபக அங்கத்தவர். இன்றுடன் அதை உருவாக்கிய 11 பேரும் மறைந்து விட்டார்கள்.
அவ்வாறு உலகம் முழுவதும் பணியாற்றிய மிகப் பெரிய நிறுவனத்தை உருவாக்கிய பாக்கியத்தை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியிருந்தான். அல்லாஹ் அவர்களின் நல்லமல்களை அங்கீகரித்து அவர்களின் கப்றை சுவர்க்கப் பூஞ்சோலையாக ஆக்கவேண்டும் என நாம் எல்லோரும் பிரார்த்திப்போமாக. என அதில் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment