கிழக்கு மாகாண முன்பள்ளிகளில் கடமையாற்றும் 2126 ஆசிரியர்களுக்கான 3 மாதக் கொடுப்பனவு வியாழக்கிழமை (28.04.2016) மட்டக்களப்பு மற்றும் சாய்ந்தமருது ஆகிய இடங்களில் வைத்து வழங்கப்படவுள்ளதாக
கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு இடம்பெறும் இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 1153 ஆசிரியைகளுக்கு இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.
இதேவேளை, அம்பாறை மாவட்டம் கல்முனை கல்விப் பிரிவைச் சேர்ந்த 973 ஆசிரியைகளுக்கான கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு சாய்ந்தமருது மெரிடியன் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளதாக கிழக்கு மாகாண பாலர்பாடசாலை பணியகத்தின் தவிசாளர் பொன். செல்வநாயகம் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆசிரியையும் கடந்த ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதக் கொடுப்பனவாக சேர்த்து 9000 ஆயிரம் ரூபாவைப் பெறுகின்றார்கள்.
ஒட்டு மொத்தமாக ஒரு கோடி 91 இலட்சத்து, 34 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு இதன்போது வழங்கப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றிவரும் முன்பள்ளி ஆசிரியர்களின் நீண்டகால பிரச்சினையாக இருந்து வந்த மாதாந்த கொடுப்பனவினை வழங்க கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தலைமையிலான அமைச்சரவைக்கு கடந்த வருடம் (2015-06-17) முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு அனுமதிகோரி அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டிருந்தது.
கிழக்கு மாகாணத்தில் ஒட்டு மொத்தமாக 3537 முன்பள்ளி ஆசிரியைகள் கிழக்கு மாகாண சபை மாதாந்தம் வழங்கும் 3000 ரூபாய் கொடுப்பனவைப் பெறத் தகுதி பெற்றுள்ளதாக பொன். செல்வநாயகம் மேலும் தெரிவித்தார்.
வருடாந்தம் இந்தக் கொடுப்பனவை வழங்குவதற்கு மாகாண சபைக்கு 14 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment