அரசிலமைப்பு சட்டம் உருவாக்கத்தில் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் எனத்தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,
அதில் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதித்துவம், உரிமைகள்
பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன், இனங்களுக்கிடையில் கசப்புணர்வினை ஏற்படாத வகையில் அது உருவாக்கம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய உரை தொடர்பில் புதன் கிழமை (23) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது:-
இனவாத அடிப்படையில் சிந்திப்பதை முதலில் நாங்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும். ‘இது எனது நாடு’ ‘இது எனது தாய்ப் பூமி’ என்கின்ற உணர்வோடு ஒவ்வொருவரும் சிந்திக்கும் நிலைமை ஏற்பட வேண்டும். நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்ப வேண்டும். இதற்கு இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரும் ஒன்றினைய வேண்டும்.
இனப்பிரச்சினைக்கு அரசிமைப்பு சட்ட உருவாக்கத்தில் நிர்ந்தர தீர்வு காணப்படுவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்படும் அதேவேளை, வடக்கு கிழக்கு இணைப்பு அதற்கு தீர்வாக அமையாது. அதிகாரங்கள் பகிரப்படுவதனூடாக சலக சமூகங்களுக்கும் தங்களுடைய அதிகாரங்களைப் பெற்றுக் கொண்டு இந்த மண்ணிலே வாழ்வதற்காக சூழ்நிலைகள் உருவாக்கப்பட வேண்டும்.
இன்று சிலர் வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என்ற கோஷத்தை எழுப்பி இனங்களுக்கு இடையில் மீண்டும் பிரச்சினைகளை உண்டுபண்ண விரும்புகிறார்கள். ஆகவே, நாங்கள் வடக்கை கிழக்கு இணைப்புக்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.
இன்று இந்த நாட்டில் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக அரசிலமைப்பு சபை உருவாக்கப்பட்டிருக்கின்றது. மக்கள் அனைவரினதும் பிரதிநித்துவம் பாதுகாக்கப்படக்கூடிய வகையில், அவர்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்படக்கூடிய வகையில், இந்த சபையிலே அவர்களுடைய பிரதிநித்துவம் விகிதாசார அடிப்படையில் இடம்பெறக்கூடிய வகையில், இனங்களுக்கிடையிலான கசப்புணர்வு ஏற்படாத வகையில் புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். அதற்கு நாங்கள் எல்லோரும் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு செயற்பட முன்வர வேண்டும்.- எனத் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment