காத்தான்குடியில் 10 வயது சிறுமி ஒருவரை சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த சிறுமியின் தந்தை மற்றும் தந்தையின் இரண்டாவது மனைவி ஆகியோரை பொலிஸார் மீண்டும் திங்களன்று 28.03.2016 நீதிமன்றில்
ஆஜர்படுத்தியபோது இருவரையும் ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி கண்ணன் உத்தரவிட்டார்.
காத்தான்குடி ஆறாம் குறிச்சியில் வசிக்கும் சிறுமியொருவருக்கு அவளது தந்தையின் இரண்டாந் தாரமான பெண் நெருப்பால் சூடு வைத்ததாகவும் இதனால், சிறுமியின் உடம்பில் எரிகாயம் காணப்படுவதாகவும் காத்தான்குடி பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்புப் பிரிவுக்கு கடந்த 11.03.2016 அன்று தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, காத்தான்குடி பிரதேச செயலக சிறுவர் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் சிறுமியின் வீட்டுக்குச் சென்று சிறுமியின் தந்தை மற்றும் தந்தையின் இரண்டாவது மனைவியிடமும் விசாரணை செய்தனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியையும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த காத்தான்குடிப் பொலிஸார் மேற்படி இருவரையும் 13.03.2016 அன்று ளகைது செய்திருந்தனர்.
சித்திரவதைக்குள்ளானதாகக் கூறப்பட்டுள்ள சிறுமியின் தாய் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.
இதன் பின்னர், சிறுமியின் தந்தை மற்றுமொரு திருமணம் செய்த நிலையில் முதல் மனைவியின் இரண்டு பிள்ளைகளும் தந்தையின் இரண்டாவது மனைவியிடமே இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 14.03.2016 அன்று நீதிமன்றின் முன் நிறுத்தப்பட்ட சந்தேக நபர்களை மார்ச் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராசா சிகிச்சைக்காக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அங்கு சட்ட வைத்திய நிபுணரின் ஆலோசனையின் பேரிலும் அவரின் கண்காணிப்பிலும் சிகிச்சை அளிக்குமாறும் நீதிவான் பணித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
0 Comments:
Post a Comment