ஏழைகளின் சிறு உழைப்பை சாராயக் கடைக்காரர்கள் சுருட்டிக் கொண்டு போகின்றார்கள். ஆனால், இனத்துவேசம் காட்டி கொக்கரிக்கும் எந்த அரசியல்வாதியும்
இதனைக் கண்டுகொள்வதில்லை என கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீரலி தெரிவித்தார்.
பிரதியமைச்சர் அமீரலியின் நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு, ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொம்மாதுறைக் கிராமத்தில் சுமார் எட்டரை மில்லியன் ரூபாய் செலவில் மக்கள் போக்குவரத்துக்காக புனரமைக்கப்பட்ட பாலத்தை மக்கள் பாவினைக்காக ஒப்படைக்கும் நிகழ்வு செவ்வாய்க் கிழமை இடம்பெற்றது.
பிரதி அமைச்சரின் இணைப்பாளர் என். ரவி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமீரலி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இங்கு தொடர்ந்து உரை நிகழ்த்திய பிரதியமைச்சர் அமீரலி அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்தும்போதும் மக்களின் தேவைகளை நிறைவேற்றும்போதும் நான் தமிழ் முஸ்லிம் சிங்களம் என்று ஒருபோதும் பாகுபாடு காட்டி பிரித்துப் பார்ப்பதில்லை.
எங்கு பிரச்சினைகள் உள்ளதோ அது தீர்த்து வைக்கப்பட வேண்டும், எந்த மக்களுக்குத் தேவைகள் உள்ளதோ அது நிறைவேற்றிக் கொடுக்கப்பட வேண்டும். இதுவே எனது கொள்கை.
வாக்குப் பெறுவதற்காக நான் முதலீடு செய்வதில்லை. இறைவன் எனக்குத் தந்திருக்கின்ற அறிவு, ஆரோக்கியம், மற்றும் அரசியல் பலத்தைக் கொண்டு எந்த சமூக மக்களுக்காயினும் சேவை செய்து விட்டுப் போக வேண்டும் என்பதே எனது அவா.
நான் தேர்தல் காலங்களிலும் தேர்தல் நடைபெறாத வேளைகளிலும் ஒரே மாதிரியாகத்தான் பேசுவேன். தமிழ் மக்கள் மத்தியிலும், முஸ்லிம் மக்களிடத்திலும் சிங்கள சமூகத்திடமும் ஒரே மாதிரியாகத்தான் பேசுவேன்.
இடத்துக்கிடம் நேரத்துக்கு நேரம் சமூகத்துக்குச் சமூகம் நான் ஒருபோதும் மாற்றி மாற்றிப் பேசியது கிடையாது.
இந்த மாவட்டத்திலே தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் என்ற பேதங்களை இனியும் வளர்ப்பதற்கு இப்பொழுது இருக்கின்ற இளைஞர் சமுதாயம் இனி இடமளிக்க மாட்டார்கள் என்கின்ற அசையாத நம்பிக்கை எனக்குண்டு.
இந்த மாவட்டத்திலே பாதிக்கப்பட்டவர் ஒரு முஸ்லிமா, தமிழரா அல்லது சிங்களவரா என்பது கிடையாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வேண்டும் என்பதில் உறுதியுடன் செயற்படுபவர்கள் நாங்கள்.
இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் என். ரவி உட்பட ஊர்ப் பிரமுகர்கள், கிராம மக்கள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
0 Comments:
Post a Comment