15 Mar 2016

சிலுவையின் பாதையில் இசை இறுவட்டு வெளியீடு

SHARE
தவக்கால சிலுவைப் பாடுகளைப் பக்தியுடன் தியானிக்கும் வகையிலான “சிலுவையின் பாதையில்”என்னும் ஜூட் திலீபன் பிரான்சிஸின் இசை இறுவட்டு ஒன்று வியாழக்கிழமை (10) மட்டக்களப்பில்; வெளியிட்டு வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் கிழக்குப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் அருட்தந்தை ஏ.ஏ.நவரட்ணம் அடிகளின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மறைமாநில ஆயர் பேரருட் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார்.

மட்டக்களப்பு மறைமாநில குருமுதல்வரும் மட்டக்களப்பு புளியந்தீவு புனிதமரியாள் பேராலய பங்குத் தந்தையுமான அருட்தந்தை ஏ.தேவதாசன் அடிகள், இயேசுசபையைச் சேர்ந்த அருட்தந்தை ஜே. ஜோசப்மேரி அடிகள், கல்முனை பற்றிமா கல்லூரியின் முன்னாள் அதிபர் அருட்சகோதரர் ஸ்ரீபன் மத்தியூ எஸ்.எஸ்.ஜே ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், திருமலை பிரபல ஓகன் வாத்தியக் கலைஞர் அன்ரனி ஜஸ்டின்,கவிஞர் வாகரை வாணன், பிரபல பாடகர் எஸ். ஞானப்பிரகாசம் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

முதல் இறுவட்டுப் பிரதியினை வாழைச்சேனை புனித திரேசம்மாள் ஆலயப் பங்குத்தந்தை அருட் தந்தை ம. ஸ்ரனிஸ்லாஸ் அடிகள் ஆயரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

மதிப்பீட்டுரையினை புனிதமிக்கேல் கல்லூரியின் ஆசிரியரும்,வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலயப் பங்குத் தந்தையுமான அருட்தந்தை எக்ஸ்.ஐ ரஜீவன் அடிகள் நிகழ்த்தினார்.

வரவேற்புரையினை ஆ.கிபிரான்சிஸம், நன்றியுரையினை திருமதி றூபிவலன்ரீனா பிரான்சிஸ_ம் நிகழ்த்தினர்.

இவ்விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்ட ஆயர் அவர்கள், ‘இறை இரக்கத்தின் ஆண்டாகப்’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இவ்வாண்டில் இத்தகைய முயற்சிகள் இறைவனின் ஆசீரால் நடந்தேறுகின்றன என்றும், இளைஞர்கள் இத்தகைய முயற்சியில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது என்றும் குறிப்பிட்டார்.

ஜே.ஜொக்ஸ்,செல்வி. ஜே.யேசுனிதா, செல்வி. பி. சப்திகா, பி.எம்.எஸ். ரஞ்சித் ஆகியோர் பாடல்களைப் பாடியிருந்தனர். ஏ.நேசதுரை(தபேலா), எஸ்.பாஸ்கரன் (புல்லாங்குழல்) ஆகியோர் வாத்தியங்களை இசைத்திருந்தனர். பாடல்களுக்கு இடையில் குரல்வழி ஒருங்கிணைப்பினை அருட்தந்தை ஏ.ஏ. நவரட்ணம் அடிகள் வழங்கியிருந்தார். 

மட்டக்களப்பு இருதயபுரத்தைச் சேர்ந்த ஜூட் திலீபன், புனிதமிக்கேல் கல்லூரியின் பழையமாணவர் என்பதும், தனது நான்கு வயதிலேயே ஓகன் வாத்தியத்தை இசைக்கும் திறமை பெற்றிருந்தவர் என்பதும், தற்போது பல்வேறு வாத்தியங்களை வாசிக்கக் கூடியவர் என்பதும் பாடல்களை இயற்றுவதும் இசையமைப்பதும் அவருக்கு மிகவும் விருப்பமானவை என்பதும் குறிப்பிடத்தக்கவை.

SHARE

Author: verified_user

0 Comments: