3 Mar 2016

கிழக்கு மாகாணத்தில் கல்வியறிவில் மறுமலர்ச்சி காண பாரிய முயற்சிகள் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்.

SHARE
கிழக்கு மாகாணத்தில் கல்வி அறிவில் பாரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின் கல்வி நிலை தொடர்பாக வியாழக்கிழமை 03.03.2016 கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது,

கிழக்கு மாகாணத்தில் ஆங்கிலப் பயிற்சி தேர்ச்சி நிலையங்களை அமைத்து மாணவர்களையும் உத்தியோகத்தர்களையும் பயிற்றுவிப்பதன் மூலம் மொழிக் கல்வியிலும் சர்வதேசக் கல்விலும் பாரிய முன்னேற்றத்தை அடைய முடியும்;.
இதற்கான வேண்டுகோள் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சர்வதேச மொழியான ஆங்கிலக் கல்வி முறைமையில் தேர்ச்சி பெறுவதன் மூலம் கிழக்கு மாகாணத்தின் கல்வித் துறையை வேறு ஒரு முன்னேற்றகரமான நகர்வுக்கு இட்டுச் செல்லும் வாய்ப்புக் கிட்டும்.
தற்பொழுது கிழக்கு மாகாணத்தில் கல்வி சம்பந்தமான பல சிக்கல்களுக்கு நாங்கள் முகங்கொடுத்து வருகின்றோம்.

பல பாடசாலைகளில் பாடவிதானங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை. கட்டிடங்கள், தளவாடங்கள் குடிநீர், மலசல கூடம், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை.ஆசிரியர்கள் இடமாற்றம் போன்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டியுள்ளது.

ஆளுநர் அதிகாரத்தின் மூலம் எங்களுக்கு ஏற்படுத்தப்படுகின்ற இடையீடுகளை நாங்கள் முறியடித்துத் தீர்வு காண செயலாற்றிக் கொண்டு வருகின்றோம்.
கல்வி முடக்கப்படுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
எந்தத் தடையையும் உடைத்தெறிய நாங்கள் தயங்கப் போவதில்லை.
அரசியலமைப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ள அதிகாரம் மாகாண சபைகளுக்குக் வழங்கப்படுமாக இருந்தால் மாகாண சபையால் பரிபாலிக்கப்படும் 95 சதவீதமான பாடசாலைகளிலுள்ள பிரச்சினைகளை சொற்ப காலத்தில், ஒரு வட்ட மேசையில் இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க முடியும்.

தொழினுட்ப அறிவு சிறந்த மாகாணமாக கிழக்கை மாற்ற இந்தியாவின் பெங்களுர் தொழினுட்ப நிறுவனத்தின் உதவி பெற்றுக் கொள்ளப்படும். எனத் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: