நிலைமாறு கால நீதியை வலியுறுத்தும் வகையில், மட்டக்களப்பு விழுது
ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் நிகழ்வு
நிலைமாறு கால நீதியை வலியுறுத்தும் வகையில், மட்டக்களப்பு விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் சர்வதேச உண்மைக்கான உரிமைக்கான சர்வதேச தின நிகழ்வு அதன் அலுவலகத்தில் நடைபெற்றது.
வியாழக்கிழமை (24) பகல் நடைபெற்ற இந்த நிகழ்வில், விழுதின் மட்டக்களப்பு மாவட்ட திட்ட உத்தியோகத்தர் பி.முரளிதரன், மற்றும் மட்டக்களப்பு அலுவலக நிருவாக உத்தியோகத்தர் திருமதி சுபாசினி பார்த்தீபன் ஆகியோர் நிலைமாறு நீதி தொடர்பான விளக்கங்களை வழங்கினர்.
இதில், மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் மாதர் சங்கம், ஓட்டமாவடி அமரா பெண்கள் சங்கம், கல்லடி மாதர் சங்கம், மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் சமாசம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும், விழுது உத்தியோகத்தர்களும் பங்கு கொண்டனர்.
நிலைமாறுகால நீதியினை வலியுறுத்தியும், நல்லிணக்க பொறி முறையினை உறுதிப்படுத்துமாறு கோரியும் இந்த சர்வதேச உண்மைக்கான உரிமைக்கான சர்வதேச தின நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சர்வதேச ரீதியில் அனுஸ்டிக்கப்படும் சர்வதேச உண்மைக்கான உரிமைக்கான சர்வதேச தினத்தில் நிலைமாறு கால நீதிக்கான செயற்பாட்டின் நம்பிக்கையினை மீள கட்டியெழுப்பல், மௌனத்தினை உடைத்தல், உண்மையினை வெளிப்படுத்தல், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை பொறுப்புகூற வைத்தல், பாதிக்கப்பட்டவர்களை அங்கீகரித்தல், நிலையான சமாதானமான சமூகத்தினை கட்டியெழுப்பல் என்பவற்றின் முக்கியத்துவம் பற்றி விளக்கங்கள் வழங்கப்பட்டன.
அத்துடன், நிலைமாறு கால நீதிக்கான தூண்களாக விளங்கும் உண்மையை அறிந்து கொள்ளும் உரிமை, நிறுவன ரீதியிலான சீர் திருத்தம், குற்ற வழக்கு தொடர்தலுடன் சம்பந்தப்பட்ட நீதியினைக் கண்டறியும் உரிமை, இழப்பீடு வழங்குதல் என்பனவற்றுக்கான தேவை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் விளக்கங்களும் வழங்கப்பட்டன.
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையமானது, நிலைமாறு கால நிதி தொடர்பில் கற்றுக் கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள் சம்பந்தமாக தெற்கு, வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் அனுபவப் பகிர்வுச் செயற்பாடுகளைக் கடந்த காலங்களில் மேற்கொண்டிருந்தது.
அதே போன்று கடத்தப்பட்டுக் காணாமல் போனவர்களுடைய விபரங்கள் திரட்டுதல், பரிந்துரைச் செயற்பாடுகள், கருத்தரங்குகள் நடத்துதல், உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
0 Comments:
Post a Comment