24 Mar 2016

கிழக்கு மாகாண சபை அமர்வு அறிக்கைகள் முதன்முறையாக பொதுமக்களின் பார்வைக்காக தமிழ் சிங்கள மொழிகளில் உள்ளுராட்சி மன்ற நூலகங்களுக்கு அனுப்பப்படுகின்றன.-ஷர்மிலா

SHARE
கிழக்கு மாகாண சபை அமர்வு அறிக்கைகள் முதன்முறையாக பொதுமக்களின் பார்வைக்காக தமிழ் சிங்கள மொழிகளில் தொகுக்கப்பட்டு கிழக்கு மாகாணத்திலுள்ள 45 உள்ளுராட்சி மன்ற நூலகங்களுக்கும்
அனுப்பப்பட்டு வருவதாக சபை நடவடிக்களுக்குப் பொறுப்பான முகாமைத்துவ உதவியாளர் ஜே. ஷர்மிலா புதனன்று தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை அமர்வுகளில் இடம்பெறுகின்ற விவாதங்கள், அங்கு எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் பிரேரணைகள் உள்ளிட்டவை மக்களது பார்வைக்குக் கிட்ட வேண்டும் என்ற முதலமைச்சரின் ஆலோசனைக்கமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையின் மூலம் கிழக்கு மாகாண சபையில் என்ன நடைபெறுகிறது என்பதை மக்கள் வெளிப்படையாக அறிந்து கொள்ள வழியேற்படும் என்றும் அவர் கூறினார்.

இதன்படி கடந்த ஜனவரி மாத சபை அமர்வுகளில் இடம்பெற்ற விடயங்கள் தமிழ் சிங்கள மொழிகளில் தொகுக்கப்பட்டு இந்த வாரம் முதல் கிழக்கு மாகாணத்திலுள்ள 45 உள்ளுராட்சி மன்றங்களுக்கும் அவற்றின் பராமரிப்பிலுள்ள நூலகங்களில் பொது மக்களின் பார்வைக்கு வைப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள 45 உள்ளுராட்சி மன்றங்களில் மட்டக்களப்பு, கல்முனை, அக்கரைப்பற்று ஆகியவை மாநகர சபைகளாகவும், திருகோணமலை, கிண்ணியா, ஏறாவூர், காத்தான்குடி, அம்பாறை ஆகியவை நகர சபைகளாகவும் ஏனைய 37 உள்ளுராட்சி மன்றங்கள் பிரதேச சபைகளாகவும் உள்ளன.
இவற்றில் திருகோணமலை மாவட்டத்தில் 5 பிரதேச சபைகளும், அம்பாறை மாவட்டத்தில் 8 பிரதேச சபைகளும் தனிச் சிங்கள மொழிமூல  நிருவாகத்திற்குட்பட்டவை.

அதேவேளை ஏனைய 32 உள்ளுராட்சி நிருவாக சபைகளில் 90 வீதமானவை தனித் தமிழ் மொழிமூல நிருவாகத்திலும் மீதமுள்ள 10 வீதமானவை சிங்களம், தமிழ் ஆகிய இருமொழிக் கலப்பு நிருவாகத்திற்குட்பட்டவையாகும்.

SHARE

Author: verified_user

0 Comments: