3 Mar 2016

பேரினவாதம் இந்த நாட்டை ஆட்சி செய்யும் என்கின்ற நிலைமைமாறி இந்த நாட்டில் பண்மைத்துவம் ஓங்கிட வேண்டும் - கிழக்கு அமைச்சர்

SHARE
நாம் எல்லோரும் சேர்ந்து ஆட்சி மாற்றம் என்கின்ற ஒருவிடயத்தை ஏற்படுத்தியிருக்கின்றோம். அந்த நல்ல சூழ்நிலைதான் இப்போது இவ்வாறு நாங்களும் நீங்களும் சேர்ந்து ஒருவிரிந்த மனத்துடன் மகிழ்ந்த மனத்துடன் இவ்வாறான விளையாட்டுப் போட்டிகளைநடத்திக் கொண்டிருக்கின்றோம்.
அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலினைஅமைதிப் புரட்சிஎனப் பலரும் சொல்லுகின்றார்கள் ஏனெனில் கடந்த இரண்டு தடவைகள் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களும் ஜனநாயக முறைமைக்குப் புறம்பான முறையில் இடம்பெற்றவை.

முதலாவது தடைவயில் தமிழ் மக்களினுடையகை களைக் கட்டிப் போடுவதற்குரிய கைங்கரியத்தைச் செய்துவிட்டுத் தான் மஹிந்த ஜனாதிபதியாக வந்தார். அதற்கு அடுத்த முறையும் வெவ்வேறு விதமான பயமுறுத்தல்களைச் செய்து ஜனாதிபதியாகவந்தார். ஆனால் கடந்தமுறை இடம்பெற்றதேர்தலின் போது இந்த நாட்டில் உள்ள ஜனநாயகவிரும்பிகளெல்லாம் நூதனமாகக் கையாண்டதன் பயனாக இவ்வாறானதொரு ஆட்சிமாற்றம் இடம்பெற்றுள்ளது.

என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். 

ஏறாவூர் விபுலானந்தா வித்தியாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த இல்லவிளையாட்டுப் போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறுதெரிவித்தார்.

இதன் போதுஅவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைமையும் இந்த விடயத்தில் மிகவும் சாதுரியமாகச் செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைத்த இரண்டு தேர்களிலும் இருந்து ஜனநாயகத்தைப் புத்துணர்ச்சிபெறச் செய்யும் ஒருதேர்தலை நாம் நடாத்திக் காட்டியிருக்கின்றோம்.
அவற்றோடு மட்டும் நாம் நின்றுவிடாது தற்போது நாடாளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு ஒன்றினை ஆக்குவதற்கான பிரேரணை முன்வைக்கப் பட்டுள்ளது. உண்மையிலேயே மஹிந்த ராஜகப்ஸ மக்களின் ஆணையினைக் கௌரவிப்பவராக இருந்தால் அமைதியாக ஜனநாயகமுறையில் அரசியலில் செயற்பட வேண்டும் இல்லையெனில் பெரும் அரசியற் தலைவர்களைப் பின்பற்றி அவர் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் பேரினவாதம் இந்த நாட்டை ஆட்சி செய்யும் என்கின்ற நிலைமைமாறி இந்த நாட்டில் பண்மைத்துவம் ஓங்கிட வேண்டும் ஒளிர்ந்திட வேண்டும் என்கின்ற நிலைமை செயற்பாட்டிற்கு வந்திருக்கின்ற இந்த நேரத்தில் மஹிந்தராஜபக்ஸ  தன்னுடைய பிடிவாதமான ஜனநாயக முரணான செயற்பாடுகளைச் செய்வார் என்றால் நிச்சயமாக அவர் இந்தநாட்டின் அரசியல் வரலாற்றில் மட்டுமல்ல உலக அரசியல் வரலாற்றில் கூட ஒருகரும்புள்ளியாகத் தான் பார்க்கப்படுவார்.

நல்லாட்சி என்று சொல்லப் படுகின்ற இந்த ஆட்சியில் இந்த நாட்டினுடைய பன்மைத்துவத்தை அங்கீகரித்து எழுதப்படுகின்ற அரசியல் தீர்வுத் திட்டத்தில் கூட்டு எதிர்க் கட்சி என்கின்ற பெயரில் குழப்பம் விளைவிக்கின்ற செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். அப்போதுதான் உலக அரங்கில் நிகழ் நிரல் படுத்தப்பட்டமக்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கக் கூடிய ஒருஅரசியல் அமைப்பினை உருவாக்கிட முடியும்.

எனவே இப்போது இருக்கின்ற நிலைமைகளைக் குழப்பாது உண்மையான ஜனநாயகத்தை இந்தநாட்டில் வேர்விடச் செய்ய வேண்டும். அந்த வகையில் ஜனநாயக எதிர் நடவடிக்கைகளை விட்டுவிட்டு இப்போது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப் பட்டிருக்கின்ற புதிய அரசியல் அமைப்பை ஆக்குகின்ற நடவடிக்கைக்கு ஒத்துழைக்கா விட்டாலும் பரவாயில்லை உபத்திரவம் செய்யாமல் எமது அடுத்த சந்ததியினர் வெறுமனே பெரும்பாண்மை சிறுபாண்மை என பிரிந்து நிற்காது, இன்னும் இன்னும் தேர்தல் களத்தில் வருகின்றவர்கள் இன அடிப்படையில் வாக்குகளுக்கான வலைவீசுகின்ற செயற்பாடு இல்லாது இந்த நாட்டுமக்களுடைய முழுமையான பங்களிப்பை பெறக் கூடியவிதத்திலும், இந்தநாட்டில் நாங்கள் தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டிருக்கும் பிராந்தியங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து கொடுப்பதான அரசியற் திட்டம் ஒன்றை ஆக்குகின்ற வகையில் செயற்பட ஒத்துழைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஜனநாயகத்தின் பால் அக்கறையுள்ள எல்லோராலும் இந்த கூட்டு எதிர்க்கட்சியினரை நோக்கி தொடுக்கப்பட வேண்டும் என்கின்ற செய்தியையும் எமதுமக்கள் சார்பாக நான் முன்வைக்க விரும்புகின்றேன்.

எல்லோரும் எல்லா இடத்திற்கும் செல்லலாம் ஒருவருக்கொருவர் வாஞ்சையுடன் அளவலாவிக் கொள்ளலாம் ஆனால் ஒவ்வொருவருக்கும் உள்ளதனித்துவம் பேணப்படவேண்டும். வடக்குகிழக்கில் வரலாற்று ரீதியாகவாழ்ந்த இந்த வாழ்விடம் அங்கீகரிக்கப்பட வேண்டும். 

எங்களுடைய மொழி சமத்துவமானதாக அங்கீகரிக்கப்பட வேண்டும். மத்திக்கு இருக்கும் அதிகாரங்கள் சிலதவிர்ந்து மற்றையவை மாகாணங்களுக்கும் வழங்கப்பட வேண்டும். 

இந்த நாட்டினுடைய வளத்தை நாங்களே எடுத்து நாங்களே திட்டமிட்டு செயற்படுத்த வேண்டும். கொழும்பில் இருந்து திட்டமிட்டு இங்கே அனுப்புகின்ற அல்லது அவர்கள் ஏதோ இரக்கத்தின் மூலம் போடுகிறன்ற பிச்சை என்கின்ற அளவில் இருக்கின்ற ஒற்றையாட்சித் தண்மை மாற்றப்பட வேண்டும்.

தமிழர்களினுடைய தாய்நிலம் வடக்கு கிழக்கு என்பதை 1956 தொடக்கம் நடைபெற்ற எல்லா இனக்கலவரங்களும் வெளிப்படையாக வெளிக்காட்டியுள்ளன. எனவே வடக்கு கிழக்கு தமிழர்களுக்குரிய நிலம் அல்ல என்றுயாரும் சொல்ல முடியாது. வடக்கு கிழக்கு தமிழர்களுடைய தாயகம் என்பதால் தான் ஒவ்வொருகலவரத்தின் போதும் தென்னகத்தில் இருந்துதமிழர்கள் வடக்கு கிழக்கிற்கு அனுப்பப்பட்டனர். 

எனவே எமதுநிலம் வடக்கு கிழக்கு, எமதுமொழிதமிழ் மொழி, எமக்கு சமஷ்டி முறையிலான ஆட்சிமுறை வேண்டும். உறவுக்குக் கைகொடுப்போம் உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்கின்றகோசத்தோடு இருக்கின்ற அத்தகைய அரசியல் அமைப்பை ஆக்குவதற்கு கூட்டு எதிர்க் கட்சியினரும் கைகோர்த்திட வேண்டும் எனத் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: