12 Mar 2016

மயிலவெட்டுவானில் காட்டுயானை தாக்கி வீட்டுச்சுவர் சேதம். மக்கள் அச்சத்தில்

SHARE
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் மயிலவெட்டுவான் என்பது ஒரு சிறிய கிராமமாகும். 30 ஆண்டுகால யுத்தத்தில் பெருமளவு பாதிக்கப்பட்ட இக்கிராமம்   ஒவ்வொரு வருடமும் வெள்ள அபாயத்துக்கும் முகம் கொடுத்து வருகின்ற ஒரு துர்ப்பாக்கியமான கிராமமாகும்.
வருடாந்தம்; பெய்யும் பெருமழை காரணமாக மயிலவெட்டுவான் ஆறு பெருக்கெடுப்பதனால் இக்கிராம மக்கள்; இடம் பெயர்ந்து வெள்ளம் வடியும்வரை அயற் கிராமங்களில் ஏற்படுத்தப்படும் நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்து வெள்ள அபாயம் நீங்கிய பின்னரே கிராமத்தை வந்தடைவர்.

இப்படி இம்மக்கள் துயரப்படுகின்ற நிலை  ஒருபுறம் இருக்க இங்கு அடிக்கடி காட்டு யானைகள் கிராமத்தினுள் நுழைந்து இம்மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு ஊறு விழைவித்து வருகின்றன. 

இங்கு வாழும் மக்கள் விவசாயக்கூலிகளாக இருக்கின்ற போதிலும் தங்களுக்கு சொந்தமாக இருக்கின்ற சிறிய பரப்புடைய நிலங்களில் மரக்கறிச் செய்கையும் கச்சான், சோழம், வாழை தென்னை  போன்ற பயிர்ச் செய்கைகளையும் செய்து மற்றவர்களிடம் கையேந்தாத அளவிற்கு வாழ்க்கையை ஒருவாறு நடாத்தி வருகின்றனர். 

ஆனால் அடிக்கடி கிராமத்தினுள் நுழையும் யானைகளினால் இப்பயிர்கள் அடிக்கடி அழிக்கப்பட்டு வருகின்றதைப் பொறுக்க முடியாத இம்மக்கள் நீண்ட காலமாக பலரிடம் முறையிட்டு வந்ததன் விழைவாக ‘யானை பாதுகாப்புக்கான மையம்’ என்ற  அமைப்பு பாதுகாப்பு வேலி அமைப்பதற்கு முன்வந்ததோடு மக்களின் பங்களிப்போடு கடந்த பத்து முதல் பதினைந்து நாட்களாக முயற்சி செய்து கிராமத்தைச் சுற்றி பாதுகாப்பு வேலியுமிடப்பட்டது. 

இவ்வேலியிடலுக்காக கிராமத்து மக்கள் அனைவரும் அப்பகுதியின் கிராம உத்தியோகத்தரும் பதினைந்து நாட்களாக கடுமையான சிரமதானத்தை உற்சாகத்தோடு மேற்கொண்டிருந்தனர். ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் முட்புதர்களையும் முள்மரங்களையும் வெட்டியகற்றி நிலத்தை சமப்படுத்தி வேலியிடக்கூடிய வசதியை ஏற்படுத்தினர். மக்களால் மிக உணரப்பட்ட தேவை என்பதனால் அங்கு இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் 66 குடும்பங்களைச் சோந்த அனைவரும்; முழுமையான பங்களிப்பினைச் செய்திருந்தனர். 

ஆனால் வேலியிட்டு ஒருவாரகாலம் முடிவதற்குள்ளே கிராமத்தினுள் நுழைந்த யானைகள் இரண்டு செய்கை பண்ணப்பட்டிருந்த பயிர்களையும் அழித்து தெய்வநாயகம் லோகநாதன் என்பவருடைய வீட்டையும் சேதப்படுத்தி வீட்டினுள் இருந்த ஏழு மூடை நெல், ஒரு மூடை கச்சான் விதை, அரை மூடை சோழம் விதை ஆகியவற்றையும் தின்று வீட்டில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளன. 10ந்தேதி அதிகாலை இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. அதிஷ்டவசமாக யானைகள் வீட்டினை சேதப்படுத்திய வேளையில் வீட்டில் யாரும் தங்கியிருந்திருக்கவில்லை.

இதுவரையில் யானைகள் பயிர்களைத்தான் அழித்து வந்திருந்தன. வீடுகளை உடைத்திருக்கவில்லை. ஆனால் யானை வேலி போட்டதைத் தொடர்ந்து இருப்பிடங்களையும் யானை தாக்கத் தொடங்கியிருப்பதானது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 

கிராமத்தை யானைகளின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு தங்களது கிராமத்தைச் சுற்றி யானைப்பாதுகாப்பு வேலியை அமைத்துத் தந்திருக்கின்ற ‘யானைப் பாதுகாப்புக்கான மையத்தினருக்கும் அதனை அமைப்பதற்காக இரவு பகலாக தங்களோடு சேந்திருந்து முயற்சித்த தங்களது கிராம உத்தியோகத்தர் எஸ். கோகுலனுக்கும் தங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்ற இக்கிராமத்து மக்கள் அமைக்கப்பட்டுள்ள யானை வேலியை மேலும் பலப்படுத்தித் தருமாறு குறிப்பிட்ட நிறுவனத்தினரையும் சம்பந்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களையும் மக்கள் வினயமாகக் கேட்டக் கொள்கின்றார்கள். 

மயிலவெட்டுவானுக்கு அயல்க்கிராமங்களில் ஒன்றான  கூமாச்சோலை எனும் கிராமத்தில் 9ந் தேதி இரவு நுழைந்த காட்டு யானைகள் அங்கு உள்ள தென்னை மற்றும் வாழை மரங்களை அடித்து உடைத்துள்ள சம்பவமும்; இங்கு குறிப்பிடத்தக்கது. 









SHARE

Author: verified_user

0 Comments: