20 Mar 2016

எமது நிலங்களை படையினருக்கு வழங்குவதற்கு அரச அதிகாரிகள் துணைநிற்கின்றார்கள் – கிழக்கு பிரதித் தவிசாளர் பிரசன்னா

SHARE
எமது தேசிய விடுதலைப் போராட்டம் நகர் புறத்திலிருந்து பிறந்ததல்ல கிராமங்களிலுள்ள மக்கள் எங்களை அரவணைத்து பாதுகாத்து வழிசமைத்துக் கொடுத்ததினால்தான்
தேசிய விடுதலைப் போராட்டம் மாபெரும் சகத்தியாக மாறி உருவெடுத்தது. இவ்வாறான கிராமங்களை நாம் எப்போதும் மறந்துவிட முடியாது.

என தமிழ்  தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட களுமுந்தன்வெளிக் கிராமத்தில் வெள்ளிக் கிழமை (18) இடம்பெற்ற ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…. 

வடக்கு மாகாணத்திலே எமது மக்களுடைய காணிகள் அபகரிக்கப்பட்டுள்ள இந்நிலையில் அக்காணிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெரும் பிரயத்தனத்தின் மத்தியில் பகுதி பகுதியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் எமது மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்டபட்ட காணி ஒன்றை விசேட அதிரடிப்படையினருக்கு வழங்குவதற்காக அதிகாரிகள் மாறி மாறி போட்டிபோட்டுக் கொண்டு செயற்படுகின்றார்கள். அதிகாரத்தில் நிலைத்து நிற்கவேண்டும், பதவியுயர்வுகள் கிடைக்க வேண்டும், என்ற நோக்கத்தோடு மத்திய அரசுடன் ஊடலாடிக் கொண்டு எமது நிலங்களைக் கொடுப்பதற்கு அதிகாரிகள் ஒத்துழைத்துக் கொண்டு செயற்படுகின்றார்கள்.

எமது நிலங்கைள பறிகொடுப்பதற்குத் துணைநிற்கின்ற அரச அதிகாரிகளை எமது மக்கள் அடையாளம் கண்டு செயற்பட வேண்டும். எமது மண்ணைக் காப்பாற்றுவதற்காக நாம் தேசியப் போராட்டத்தை முன்நெடுத்திருந்த போதிலும், தற்போதுள்ள அரச அதிகாரிகள் அவர்களது சுய இலாபங்களுக்காக எமது நிலங்களைப் படையினருக்கும், ஏனையவர்களு வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான அதிகாரிகளின் வெட்கக்கேடான செயற்பாடுகளை நாம் மக்கள் மத்தியில் சுட்டிக்காட்டக் கடைமைப்பட்டுள்ளளோம் என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: