2 Mar 2016

கிழக்கு மாகாணத்தில் மனநிலை பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்புக் காப்பகத்தை நிறுவ உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ். அருள்மொழி

SHARE
கிழக்கு மாகாணத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட மனநிலை பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்புக் காப்பகம் ஒன்று இல்லாதது ஒரு மனிதாபிமான நெருக்கடியாக உருவெடுத்துள்ளது. அதனால் அத்தகைய ஒரு நிலையத்தை நிறுவ உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ். அருள்மொழி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,

பார்வைப் புலனற்றோரையும், காது கேளாத வாய்பேச முடியாதவர்களையும் பராமரித்து கல்வியூட்ட அவர்களுக்கென்று காப்பகங்களும் பராமரிப்புப் பாடசாலைகளும் உள்ளன.

அதேபோன்று கைவிடப்பட்ட வயோதிபர்களைப் பராமரிப்பதற்காகவும் அவர்களது நலனோம்பு விடயங்களைக் கவனிப்பதற்காகவும் முதியோர் இல்லங்கள் உள்ளன,
கிழக்கு மாகாணத்திலே உள்ள பிரதான பிரச்சினை இப்பிராந்தியத்தில் 18 வயதிற்கு மேல் மன நிலை பாதிக்கப்பட்டவர்களை வைத்துப் பராமரி;ப்பதற்கு ஒரு நிலையம் இல்லாதிருப்பதாகும்.

அத்தகைய மனநிலைப் பாதிப்புக்குள்ளானவர்கள் இன்றளவும் தெருக்களில் நடமாடுவதற்கே நாம் விட்டு வைத்திருக்கின்றோம்.

இது ஒரு மனிதாபிமான மனித நேயப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
எனவே இதன்பால் இந்த நல்லாட்சி அரசாங்க நிருவாகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை எங்கு வைத்துப் பராமரிப்பது என்பதில் சமூக சேவைப் பிரிவில் கடமையாற்றும் எங்களுக்கும் தடுமாற்றம் இருக்கிறது.
இதற்கென ஒரு நிலையம் இருந்தால் அவர்களை அங்கு வைத்துப் பராமரித்து விடலாம்.

மனநிலை பாதிக்கப்பட்டவர்களை தெருக்களில் நடமாட விடுவதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இத்தகைய மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் இளஞ் சிறார்களின் கண்களில் படும்பொழுது இதனூடாக சிறுவர்களுக்கு என்ன விழுமியங்களை நாம் வெளிப்படுத்துகின்றோம் என்பதும் அவர்கள் எதனைக் கற்றுக் கொள்வார்கள் என்பதும் மனதை நெகிழ வைக்கின்றது.

இன்று சுக தேகியாகவும் புத்திஜீவியாகவும் இருக்கும் ஒருவர் விபத்தின் காரணமாக தலை அடிபட்டு பாதிப்பை எதிர் கொண்டால் அவரும் மனநோயாளிகலாம் அப்பொழுது அவரைப் பராமரிப்பதற்கு இடம் இல்லாததால் அவரும் தெருவிலேதான் அலைய வேண்டியிருக்கும்.

எனவே, அரசும், அரச சார்பற்ற நிறுவனங்களும் அரசியல்வாதிகளும், புத்திஜீவிகளும், மனிதநேய செயற்பாட்டாளர்களும் இந்த விடயத்தில் துரிதமாகச் சிந்தித்து கிழக்கு மாகாணத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்புக் காப்பகத்தை நிறுவ முழு முயற்சி எடுக்க வேண்;டும்.” என்றார்

SHARE

Author: verified_user

0 Comments: