திருகோணமலை சம்பூர் மக்களின் இடப்பெயர்வைத் தொடர்ந்து கடந்த 10 வருடங்களாக கடற்படையினர் வசமிருந்த சம்பூர் மகாவித்தியாலயத்தில் மாணவர்கள் திங்களன்று 28.03.2016 தமது
கல்வி நடவடிக்கைகளை துவங்கியுள்ளதாக கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம் பொதுச் செயலாளர் எஸ். ஜெயராஜா தெரிவித்தார்.
திங்கள் காலை முன்னதாக அங்குள்ள காளி கோயிலில் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்ட பெற்றோரும் மாணவர்களும் ஆசிரியர்களும் முதலாம் தவணைப் பரீட்சைக்காக பத்து வருடங்களுக்குப் பின்னர் அந்தப் பாடசாலையில் காலடி எடுத்து வைத்ததாக பாட்சாலையின் அதிபர் எஸ். பாக்கியசீலன் தெரிவித்தார்.
2006ம் ஆண்டு மூதூர் கிழக்குப் பிரதேசத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக, சம்பூர் பிரதேச மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர்.
அதன் பின்னர் இந்தப் பாடசாலையை கடற்படையினர் தம்வசமாக்கிக் கொண்டனர்.
கடந்த 10 வருடங்களாக படையினரின் பராமரிப்பில் இருந்த இந்தப் பாடசாலையும் அதன் வளாகமும் நல்ல நிலையிலிருப்பதாகத் தெரிவித்த பாடசாலை அதிபர் அந்தப் பாடசாலைக்கு மின்சார வசதி இல்லாதிருப்பதாகவும் கூறினார்.
ஆண்டு ஒன்று தொடக்கம் ஆண்டு 13 வரைக் கற்கின்ற 411 மாணவர்களுடன் 21 ஆசியர்களும் திங்களன்று பாடசாலைக்குச் சமூகமளித்ததோடு முதலாம் தவணைப் பரீட்சைகள் ஆரம்பமாகின. அத்துடன் திங்களன்று புதிதாக 11 மாணவர்கள் மீளக்குடியேறிய குடும்பங்களிலிருந்து பாடசாலைக்குச் சேர்ந்துள்ளதாகவும் அதிபர் தெரிவித்தார்.
மேலும் கட்டிடம் சேதப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் சம்பூர் ஸ்ரீ முருகன் வித்தியாலய ஆரம்பப் பிரிவைச் சேர்ந்த சுமார் 75 மாணவர்களும் தற்போது சம்பூர் மகா வித்தியாலயக் கட்டிடத்தின் ஒருபகுதியில் தமது கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்கள்.
கடந்த 25.03.2016 அன்றைய தினம் சம்பூர் மகாவித்தியாலயம் உட்பட சம்பூரில் கடற்படையினர் வசமிருந்த 177 ஏக்கர் காணியும் இடம்பெயர்ந்த மக்களிடம் கையளிக்கப்பட்டது.
காணிகளை மக்களுக்கு கையளிக்கும் வைபவத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், மற்றும் இந்து மத அலுவல்கள் விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் உட்பட அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரச உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment