மட்டக்களப்பில்தான் இலங்கையில் வெற்றிகரமாக இயங்கும் மாற்றுத் திறனாளி அமைப்புக்கள் உள்ளன. மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ். அருள்மொழி
மட்டக்களப்பில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சமூக சேவைத் திணைக்களத்தினால் அமைக்கப்பட்ட மாற்றுத் திறனாளி அமைப்புக்கள் Disabled Persons
Organization வெற்றிகரமாக இயங்குவதாக மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ். அருள்மொழி தெரிவித்தார்.
இது தொடர்பாக திங்களன்று (22) கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது, பெருஞ் சிரமத்தின் மத்தியில் இந்த மாற்றுத் திறனாளி அமைப்புக்களை உருவாக்கி அவற்றை இயங்க வைத்துக் கொண்டு வருகின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும்தான் இவ்வாறான ஒரு அமைப்பு இலங்கையில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
இதற்குக் காரணம் அதனை வழிநடத்துகின்ற தலைமைத்துவங்களும் சிறந்த நிருவாக சபையும்தான். தமிழ் முஸ்லிம் வேறுபாடு என்றில்லாமல் அனைத்து பிரதேசங்களிலும் இதன் செயற்பாடுகள் திருப்திகரமாக உள்ளன.
இந்த நிருவாகத்தைச் சீரழிக்க வெளியிலிருந்து எவராவது முயற்சி செய்தால் அதற்கு ஒரு போதும் இடமளிக்க வேண்டாம் என்று மாற்றுத் திறனாளிகளுக்கு அறிவுறுத்தியிருக்கின்றேன்.
வாழ்வாதார உதவிகள் தொடக்கம் இன்னபிற நலனோம்பு விடயங்கள் வரை மாற்றுத் திறனாளிகளுக்குரிய சகல வசதி வாய்ப்புக்களையும் நாம் முடிந்தவரை ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றோம்.
அவ்வாறான பலர் எமது உதவிகளைப் பெற்று நல்ல முன்னேற்றம் கண்டுள்ளார்கள்.
ஆனால், கவலையளிக்கும் ஒரு சில சம்பவங்களை தொடர்ந்து அவதானித்தும் வருகின்றோம். மாற்றுத் திறனாளிகளான ஒரு சிலர் தமக்கு எதுவுமே உதவி ஒத்தாசைகள் கிடைக்கவில்லை என்று பிரசங்கம் செய்து பிழைப்பு நடத்தி வருவதை காணக்கூடியதாகவுள்ளது.
இத்தகையவர்கள் தொடர்ந்தும் எதிர்பார்ப்புடன் கையேந்தி வாழப் பழக்கப்பட்டுவிட்டார்கள். அவர்கள் இந்தப் போக்கை மாற்றி தங்களது குடும்பத்தையும் அவர்களது கௌரவத்தையும் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
எமது முழு முயற்சியால் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பரா ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றுவதற்குத் தயார்படுத்திய மாற்றுத் திறனாளிகள் 21 பதக்கங்களை ஈட்டி வந்து மட்டக்களப்பு மாவட்டத்துக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளார்கள்.
இதுவும் ஒரு சாதனைதான். இவ்வாறெல்லாம் இருக்கும் போது ஒரு சில மாற்றுத் திறனாளிகள் தமது அங்கவீனங்களைக் காட்டி தொடர்ந்து கையேந்தியே வாழ வேண்டும் என்று பழக்கப்பட்டிருப்பதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார்
0 Comments:
Post a Comment