22 Feb 2016

மனிதர்கள் நோய்நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு சுத்தமான குடிநீரும் அவசியம்-வசந்தராஜா

SHARE
மனிதர்கள் நோய்நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு சுத்தமான குடிநீரும் அவசியம். வரட்சி நிலவுகின்ற காலத்தில் மக்கள் குளங்கள் குட்டைகள் ஆறுகளுக்கு அருகாமையில் பூவல்களை (குழி) கிண்டி அவற்றலிருந்து வரும், ஊறும் நீரினையே பருகி வருகின்றார்கள். அந்நீர் சுகாதாரத்துக்கு ஏற்ற நீராக இருக்காது. இன்று கிராமங்களில் ஏற்படுகின்ற அதிகளவான நோய்களுக்கு சுத்தமற்ற குடிநீரும் பெரியதோர் காரணமாக அமைந்து விடுகின்றது.
என இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக்கிளைத் தலைவர் த.வசந்தராஜா தெரிவித்துள்ளார்.

பன்சேனைக் கிராமத்தில் கற்களினால் அமைக்கப்பட்ட நிரந்தர குடிநீர்த் தாங்கிகளை மண்முனை மேற்கு பிரதேச சபையிடம் ஒப்படைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (21) நடைபெற்றது. இதன்போது கலந்து  கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார். இந்நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்…

இலங்கை செஞ்சிலுவைச் சங்கமும் ஒக்ஸ்பாம் அமைப்பும், இணைந்து மண்முனை மேற்குப் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 19 கிராம சேவகர் பிரிவுகளில் கடந்த ஒரு வருடகாலமாக அனர்த்த ஆபத்துக் குறைப்பு திட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்தி வருகின்றது. 

அத்திட்டத்தின் கீழ் பன்சேனைக் கிராம மக்களினால் உணரப்பட்டதும் மண்முனை மேற்கு பிரதேச சபையினால் சிபார்சு செய்யப்பட்டதுமான வரட்சிக் காலத்தில் நீர் வினியோகத்துக்குத் தேவையான நிரந்தர நிர்த்தாங்கிகள் இரண்டினை இலங்கை செஞ்சிலுவைச் சங்கமும் ஒகஸ்பாமும் இணைந்து அமைத்துள்ளன.

இத்தாங்கிகளை பராமரித்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பினைக் கொண்டிருப்போர் பன்சேனை மக்களேயாவர். இப்பிரதேச சபை வரட்சிக் காலத்தில் நீரினை தாங்கிகளில் நிரப்புவர். அந்நீரினை முறையாகப் பாதுகாத்து பாவிக்க வேண்டியதுமான பொறுப்பினையும் கொண்டிருப்போர் மக்களேயாவர். பொதுவாக பொதுச் சொத்துக்களை அல்லது பொது நிறுவனங்களினால் வழங்கப்படுகின்ற உதவிகளை மக்கள் பெறுமதிவாய்ந்ததாக கருதுவதில்லை ஏதோ இலவசமாகக் கிடைத்தவை இது போனால் இன்னுமொன்று என்கின்ற மனப்பாங்கில் மக்கள் நடந்து கொள்ளுகின்றமை எதிர்கால நலன்களுக்கு உகந்ததாக அமையாது. 

அரசினாலோ அல்லது அரச சார்பற்ற அமைப்புக்களினாலோ தரப்படுகின்ற உதவிகளை முறையாகப்பாவிக்கின்ற மக்களுக்கே பொது நிறுவனங்கள் உதவ விரும்புகின்றன. எனவே பன்சேனை மக்கள் இதனை மனதில் கொண்டு தரப்பட்டுள்ள பெறுமதியான இந்ந நீர்த்தாங்கிகளை பாதுகாத்து பராமரித்துக் கொள்ள வேண்டும்

இத்தாங்கிகளை இக்கிராமத்திலே அமைப்பதற்கான சிபார்சினை மிகவும் விருப்போடு செய்து கட்டட அமைப்பின் போது அடிக்கடி இக்கிராமத்திற்கு வருகை தந்து அதனை சரியாக அமைத்திட தக்க ஆலோசனைகளை நல்கிவந்த மண்முனை மேற்கு பிரதேச சபையின் செயலாளர் செல்வி. ரி.புத்திரசிகாமணி அவர்களுக்கும் அவ்வப்போது உரிய உதவிகளையும் ஒத்தாசைகளையும் செஞ்சிலுவைச் சங்க பணியாளர்களுக்கும் ஒக்ஸ்பாம் பணியாளர்களுக்கும் வழங்கி வந்த பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ச.விஜயகுமாhர் அவர்களுக்கும் அனர்த்த ஆபத்துக் குறைப்பு திட்டத்தினை மண்முனை மேற்குப் பிரதேச செயலகப் பிரிவிலே அமுல் செய்வதற்கான நிதியுதவியை வழங்கி வருகின்ற ஒக்ஸபாம் நிறுவன அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றியுடையவர்களாக இருத்தல் வேண்டும் என அவர் தெரிவித்தார். 

SHARE

Author: verified_user

0 Comments: