3 Feb 2016

நமது கல்விச் செயற்பாடுகள் நமது இனம், மொழி, சமுக, உயர்வுக்காக அமைய வேண்டும் - கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராசசிங்கம்

SHARE
தற்போதைய நிலையில் எமது சமுகத்தின் மூச்சாக இருப்பது கல்வியே இதனை உயர்த்துவதற்கு சமுகத்துடன் இணைந்து பெற்றோர்களும் அதிக அக்கறை செலுத்த வேண்டும். நமது கல்விச் செயற்பாடுகள் நமது இனம், மொழி, சமுக, உயர்வுக்காக அமைந்திட வேண்டும் என கிழக்கு மாகாண விவசய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

செவ்யாக் கிழமை (02) சித்தாண்டி நடராஜானந்தா புனர்வாழ்வு மன்றக் கல்லூரி இளம் சைவ மாணவர் மன்றத்தினால் நடாத்தப்படும் பிரத்தியேக வகுப்பு மாணவர்களுக்கு அப்பியாசப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண விவசாய அமைச்சரின் பிரத்தியேக நிதியின் மூலம் மேற்படி அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க வறிய மாணவர்களுக்கான அப்பிசாயப் புத்தகங்கள் வழங்கப்பட்டது இதனை மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வு அமைப்பின் தலைவர் எஸ்.சிவபாலன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது அவர் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்…

அக்காலத்தில் பாடசாலை இருக்கின்றது என்பதற்காக கற்கவேண்டும் என நாம் பாடசாலை சென்றோமே தவிர தொழில் தேட வேண்டும் என வாழ்வாதார நோக்கில் கற்கவில்லை ஏனைய பிரதேசங்களை விட எங்களுக்கு வயிற்றுக்கு எவ்வித பங்கமும் வந்தது இல்லை ஆனால் தற்போது அவ்வாறான நிலை இல்லை. கல்வியே அனைத்தையும் தீர்மானிக்கின்றது.

நாம் எம்மைப் பற்றிச் சிந்திப்பதுடன் எமது சமுகம் சார்ந்தும் சிந்தித்து கல்வி கற்ற வேண்டும். எமது கல்வியின் தரப்படுத்தல் காரமாணத்தான் இத்தனை பெரும் ஆயுதப் போராட்டம் உருவாக்கப்பட்டது. அந்தளவிற்கு கல்விக்காகப் பாடுபட்டவர்கள் நாம். அவற்றையெல்லாம் உணர்ந்து கற்க வேண்டும்.

அன்றைய காலத்தில் வழிகாட்டுதல் இல்லாமலேயே எமது சமுகம் கல்வியில் முன்னேறி இருந்தது தற்போது அனைத்து வழிகளிலும் வழிகாட்டுதல்கள் இருந்தும் எம்மால் முன்னேற முடியாமல் இருக்கின்றது என்றால் இது தொடர்பில் அனைத்து தரப்பினரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எம்முடைய சமுதாயத்தினை முன்னேற்றுவதற்கான வழி கல்வி அதனை ஊக்குவிப்பது அனைவரின் கடமையுமாகும். நாம் கல்வியில் மட்டுமல்ல எமது மொழி தொடர்பிலும் அக்கறை செலுத்த வேண்டும்.

இந்தியாவின் தமிழ் நாட்டை விட எமது நாட்டில் தான் சுத்தத் தமிழ் பேசுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. ஆனால் தற்போதைய தொலைக்காட்சிகளும் குறிப்பாக தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் தான் இதனைக் குழப்புகின்றன.

நாம் தமிழை தமிழாக உச்சரிக்கப் பழக வேண்டும். எமது நாட்டில் ஏனைய பிரதேசங்களை விட மட்டக்களப்பு தமிழுக்கு அதிக சிறப்பு உண்டு இதனை எமது மாணவர்கள் மத்தியில் உட்புகுத்த வேண்டும்.

கடந்த காலங்களுடன் ஒப்பிட்டு பாhக்கும் போது எமது பரதேசத்தில் தற்போது கல்வி அலை ஒன்று மெல்ல மெல்ல அசையத் தொடங்கியிருக்கின்றது. இதற்கு சமுக ரீதியில் செயற்படும் நாம் ஏணியாக இருந்து எமது சிறுவர்களின் கல்வி நிலையினை உயர்த்த வேண்டும். இதற்கு சமுக ஆர்வலர்கள் தயாராக இருக்கின்ற அதே வேளை பிள்ளைகளின் பெற்றோர்களும் துணையாக இருந்து செயற்பட வேண்டும். 

நீரில் அமிழ்ந்து கிடக்கும் ஒருவன் மூச்சு விடுவதற்கு எவ்வாறு மேல் எழுந்து வருவானே அதே போல் எமது சமுகமும் கல்விக்காக மேலெழுந்து வர வேண்டும். ஏனெனில் தற்போதைய நிலையில் எமது சமுகத்தின் மூச்சாக கல்வி இருக்கின்றது. கிணற்றுத் தவளைகள் என்கின்ற வட்டத்திற்குள் இருந்து நாம் வெளியில் சென்று அனுபவமுள்ள, மனம் விரிந்தவர்களாக மாற வேண்டும் நமது கல்விச் செயற்பாடுகள் நமது சமுகத்தையும் பிரதேசத்தையும் நமது மொழியையும் இனத்தையும் உயர்த்துவதாக அமைய வேண்டும் என்று தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: