மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பலாச்சோலைக் கிராமத்தினுள் திங்கட் கிழமை (28) அதிகாலை புகுந்த 6 காட்டு யானைகளைக் கொண்ட கூட்டத்தினால் அக்கிராம மக்கள அல்லோல கல்லேலப் பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது… திங்கட் கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இக்கிராமத்தினுள் புகுந்த காட்டு யானைக் கூட்டத்தினால் அக்கிராம மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டு விடிய விடிய விழித்திருந்துள்ளனர்.
பின்னர் தீப்பந்தம் ஏந்தியும், பட்டாசு கொழுத்தியும், சத்தமிட்டும், ஒருவாறு கிராமத்தை விட்டு யானைக் கூட்டத்தை வெளியேற்றியுள்ளனர். இந்நிலையில் இக்கிராமத்திலிருந்த வீடு ஒன்றை முற்றாக உடைத்துச் சேதப்படுத்தியுள்ளதுடன், 25 இற்கு மேற்பட்ட நெல் மூட்டைகளையும், சேதப்படுத்தியதோடு பயன்தரும், தென்னை, வாழைகளையும், அழித்துவிட்டு காட்டு யானைகள் சென்றுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் அக்கிராமவாசிகள், அப்பகுதி கிராமசேவை உத்தியோகஸ்தர், மற்றும், வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளனர். இவ்விடத்திற்கு திங்கட் கிழமை காலை விரைந்த கிராமசேவை உத்தியோகஸ்தர், மற்றும், வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளும், நிலமையினைப் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.
இப்பிரதேசத்தில் மிக அண்மைக்காலமாக காட்டுயானைகளின் தொல்லைகளும், அட்டகாசங்களும், அதிகரித்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment