22 Feb 2016

வரட்சினால் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கு பன்சேனை மக்களுக்கு கற்களாலான நீர்த்தாங்கிகள் நிருமாணிப்பு

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின், படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள, மண்முனை மேற்குப் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள பன்சேனை இக்கிராமத்தில் 200 குடும்பங்களுக்குமேல் வசித்து வருகின்றனர்.
இக்கிராமத்து மக்கள் மத்தியில், மே அல்லது ஜூன் மாதம் முதல் செப்ரம்பர் அல்லது ஒக்ரோபர் வரை உள்ள காலப்பகுதி கடும் வரட்சி நிலவுகின்ற காலப்பகுதியாகும். இக்காலப்பகுதியில் மக்கள் குடிதண்ணீர் இன்றி சொல்லொணாத் துயரப்படுகின்றார்கள். குறிப்பாக சிறுவர்கள் குழந்தைகள் அதிகளவு பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்.

அத்தோடு, அக்கிராமத்தில், காட்டு யானைகளின் தொல்லைகளும் அதிகரித்து வருகின்றன. சென்ற வருடம்; யானையினால் தாக்கப்பட்டு ஒருவர் இறந்து போயுள்ளார். இவற்றை விட அண்மையில் குடிதண்ணீர் எடுப்பதற்காக ஆற்றோரத்துக்கு சென்ற இளைஞன் ஒருவன் யானையின் தாக்கத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பியுள்ளான். 

இரவில் நிம்மதியான நித்திரை மக்களுக்கு இல்லை யானை வந்துவிடுமோ வந்து விடுமோ என்ற பயம். மனித உயிருக்கு ஆபத்து நிலவுவதோடு வாழ்வாதாரத்துக்கு தேவையான பயிரினங்களைக்கூட நம்பிக்கையோடு மேற்கொள்ள, முடியாத நிலையும் காணப்பட்டு வருகின்றன.  இதனால் வர்த்தகத்துக்கான தோட்டங்களையோ, வீட்டுத் தோட்டங்களையோ, மக்களால் செய்யமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. விவசாயச் செய்கையிலேயே அனுபவமுள்ள இங்கு வாழும் மக்கள் காட்டு யானைகளின் அச்சத்தினால், விவசாயத்தை நம்பிக்கையோடு செய்ய முடியாதுள்ளனர். 

இந்நிலையில், இக்கிராம மக்களிடையே இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஒக்ஸ்பாம் ஆகிய அமைப்புக்களினால், மேற்கொள்ளப்பட்ட தேவைகளையும் பிரச்சினைகளையும் அடையாளம் காண்பதற்கான  மதிப்பீட்டிலிருந்து மேற்குறிப்பிடப்பட்ட இரண்டு பிரச்சினைகளும் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளாக இனங்காணப்பட்டுள்ளன. 

இம்மதிப்பீட்டின் அடிப்படையில் பன்சேனை மக்கள், மண்முனை மேற்கு பிரதேச சபை மற்றும் மண்முனை மேற்கு பிரதேச செயலக அதிகாரிகளுடனான கலந்துரையாடலினூடாக எட்டப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் கிராமத்தின் மக்கள் செறிந்து வாழும் இரு வெவ்வேறு இடங்களில் இரண்டு நீர்த்தாங்கிகளை இலங்கை செஞ்சிலுவைச் சங்கமும் ஒக்ஸபாமும்;  ஆகிய அமைப்புக்கள், இணைந்து அமைத்துள்ளன.

இந்நீர்த் தாங்கிகளை மண்முனை மேற்கு பிரதேச சபையிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (21) பன்சேனை கிராமத்தில் இடம் பெற்றது. இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளைத் தலைவர் த.வசந்தராஜா மண்முனை மேற்குப்பிரதேச சபை செயலாளர் ரி.புத்திரசிகாமணி மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ச.விஜயகுமார் ஆகியோரிடம் உரிய ஆவணங்களை கையளித்தார்.

வரட்சிக்காலத்தில் மண்முனை மேற்கு பிரதேச சபையினால் இத்தாங்கிகளில் குடிநீர் நிரப்பப்பட்டு மக்களுக்கு வினியோகிக்கும் ஏற்பாடுகள் நடைபெறும். இக்கிராமத்தின் கிராம முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகக் குழுவினர் இத்தாங்கிகளை பராமரிக்கின்ற அதே வேளை பிரதேச சபை அதிகாரிகள் மேற்பார்வை செய்து தொழில் நுட்ப ஆலோசனைகளை வழங்கி வருவார்கள். அதே நேரம் இப்பகுதியின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரும், இத்தாங்கிகளின் பராமரிப்பை கண்காணித்து மக்களுக்குரிய ஆலோசனைகளை வழங்கவுள்ளனர். 

இந்நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச சபையின் செயலாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஒக்ஸ்பாம் நிறுவண பணியாளர்கள் பன்சேனை கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகத்தினர், கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

காட்டு யானைகளின் தொல்லை விடயமாக மக்களுக்கான விழிப்புட்டல் நடவடிக்கைகளை மட்டுமே அடிப்படை அனர்த்த குறைப்பு பயிற்சியினூடாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கமும் ஒக்ஸ்பாமும் மேற்கொள்ளக்கூடியதாக அமைந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது





SHARE

Author: verified_user

0 Comments: