22 Feb 2016

30 வருட கால அழிவுகளை ஈடுசெய்வதாயின் தமிழ் பேசும் சமூகங்கள் அறிவின் சிகரத்தைத் தொடவேண்டும் - கருணாகரம்

SHARE
30 வருட காலம் இடம்பெற்ற ஆயுத வன்முறை அழிவுகளை ஈடுசெய்வதாயின் தமிழ் பேசும் சமூகங்கள் இணைந்து அறிவின் சிகரத்தைத் தொடவேண்டும் எனகிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரவித்தார்.
மட்டக்களப்பு, ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு கலைமகள் வித்தியாலத்தில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த 13 மணாவர்களையும் பாராட்டும் நிகழ்வும் ஓய்வு பெற்றுச் செல்லும் ஆசிரியை ஒருவருக்கான பிரியாவிடை நிகழ்வும் திங்கட்கிழமை இடம்பெற்ற பாடசாலை இடம்பெற்ற போது அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய கருணாகரம் மேலும் தெரிவித்ததாவது, கடந்த 30 வருடகாலமாக இடம்பெற்ற வன்முறைகள், போராட்டங்கள், எதிர்ப்புகளின் காரணமாக தமிழ் பேசும் சமூகங்கள் கல்வி உட்பட இழந்தவைகள் ஏராளம்.

உயிரிழப்பைத் தவிர மற்றைய எல்லா இழப்புக்களையும் ஈடுசெய்வதாயின் நாம் உள்நாட்டுப் போரின் விளைவாக இழந்த கல்வியை முழுமூச்சாக நின்று மறுசீரமைக்க வேண்டும்.

எங்களுக்குக் கிடைக்க வேண்டிய அபிவிருத்திகளை தென்பகுதிக்கு அபகரிப்பதுதான் நாம் போர் முடிந்த பின்னரும் பின்னடைவு கண்டதற்கான காரணமாகும்.

வடகிழக்கு மாகாணத்தின் பொருளாதார, கல்வி, உட்கட்டமைப்பு என சகல அபிவிருத்த  வளங்களும் இனவாதிகளால் திட்டமிட்டு சூறையாடப்பட்டு வந்துள்ளன.
போர், சூறாவளி, சுனாமி, இன்னும் வறட்சி, பெருவெள்ளம் போன்றவற்றுக்காக வடக்கு கிழக்கிலுள்ள எமக்கு உலக நாடுகளிடம் இருந்து கிடைத்த உதவிகளை தென்பகுதி சுயநலமி அரசியல்வாதிகள் சுருட்டிக் கொண்டு தமது பகுதிகளை அபிவிருத்தி செய்த காலம் கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் மாறிவிட்டிருக்கின்றது.

இப்பொழுது எங்களையும் ஏறெடுத்துப் பார்க்கத் துவங்கியிருக்கின்றார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக எமது போராட்டத்திற்கான ஒரு நிரந்தரத் தீர்வை நாடி நகர்வுகள் இடம்பெறுகின்றன.

அதனை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம். எமது நாட்டிலே சிறுபான்மை இனங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டு சமஸ்டி முறையினூடான நல்லாட்சி ஏற்படுத்தப்பட வேண்டும்.

அதனூடாக எங்களை நாங்களே ஆட்சி செய்து எங்களது பிரதேசத்தை நாங்களே அபிவிருத்தி செய்யக் கூடிய ஒரு நிலைமை ஏற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு அதற்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம் என்றார்.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் எஸ். தில்லைநாதன், பிரதி அதிபர் என். இராஜதுரை, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.என். நைறூஸ் உட்பட ஆசியர்கள், மாணவர்கள். பெற்றோர், இளைஞர் கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.









SHARE

Author: verified_user

0 Comments: