24 Feb 2016

பிள்ளையானுக்கு 14 நாட்கள் மீண்டும் விளக்கமறியல் உத்தரவு

SHARE
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேருக்கான விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இவர்களை எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசா இன்று உத்தரவிட்டுள்ளார். 
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான்,  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவ புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல் ஆகியோருக்கே இன்றைய தினம் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. 
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கடந்த 2005ஆம் ஆண்டில் மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். 
இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸார்  கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் 11 ஆம் திகதி சிவநேசதுரை சந்திரகாந்தனை கைதுசெய்திருந்தனர். 
இதேவேளை பிள்ளையான் பிணை கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை விசாரணை செய்த மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி சந்திராணி விஸ்வலிங்கம் எதிர்வரும் 18ஆம் திகதி வரை வழக்கினை ஒத்திவைத்துள்ளார்.  
SHARE

Author: verified_user

0 Comments: