24 Jan 2016

ஊடகவியலாளர்களின் சமூகப்பொறுப்பும் பணியும் - பாரதி இராஜநாயகம்.

SHARE
தமிழ் இலக்கியத்துறையைப் போலவே தமிழ் ஊடகத்துறையிலும், ஆற்றலும், துணிச்சலும் மிக்க படைப்பாளிகள் பலரை கிழக்கிலங்கை உருவாக்கியிருக்கின்றது. தமிழுலகுக்கு வழங்கியிருக்கின்றது. அந்த வகையில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஊடகவியலாளர் வரிசையில் சுகிர்தராஜன் பெயரைத் தவிர்த்துவிட முடியாது. தராகி என அறியப்படும் த.சிவராம், ஜி.நடேசன் போன்ற பத்திரிகையாளர்களும் கிழக்கிலங்கையிலிருந்து உருவாக்கப்பட்டவர்கள்தான். நடேசனின் சொந்த இடமாக கிழக்கு மாகாணம் இல்லாத போதிலும் நீண்டகாலமாக அவர் கிழக்கு மாகாணத்திலேயே வாழ்ந்தவர். கிழக்கு மாகாண மக்களுக்காக எழுதியவர். இறுதியில் நடுவீதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். சிவராம் கொழும்பில் வைத்து கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்பட்டார். இந்த மூன்று பத்திரிகையாளர்களுமே தாம் சார்ந்த சமூகத்துக்காக, அந்த சமூகத்துக்கு நடைபெற்ற கொடுமைகளை அம்பலப்படுத்த வேண்டும் எனச் செயற்பட்டமைக்காக தமது உயிர்களையே பலியாகக் கொடுத்தவர்கள்.


என இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரும், ஞாயிறு தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியருமான பாரதி இராஜநாயகம் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக் கிழமை (24) கல்முனை வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் நடைபெற்ற காலம்சென்ற ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 10 வது ஆண்டு நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் சமூகப்பொறுப்பும் பணியும் எனும் தலைப்பில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…

உங்களுக்குத் தெரியும், சிவராம் மற்றும் நடேசனின் படுகொலைகளைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் பணியாற்றிய பல ஊடகவியலாளர்கள் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். அவர்களுடைய உயிர்களுக்கு கடுமையான அச்சுறுத்தல் இருந்தது. அனுபவமும், ஆற்றலும் வாய்ந்த பல தமிழ் ஊடகவியலாளர்கள் திடீரென வெளியேறியபோது பாரிய வெற்றிடம் ஒன்று கிழக்கிலங்கையில் ஏற்பட்டது. கிழக்கு மாகாணத்தின் பிரச்சினைகள், அந்த மாகாணத்துக்குள்ள தேவைகள் பெருமளவுக்கு வெளிப்படுத்தப்படாமலிருந்தமைக்கு அல்லது போதிய கவனத்தைப் பெற்றுக்கொள்ளாமைக்கு அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். வுட மாகாணத்தைப் போலவே கிழக்கு மாகாணமும் நில ஆக்கிரமிப்பு, படையினரின் அத்துமீறல்கள், மீள்குடியேற்றத்தில் உள்ள நெருக்கடிகள் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்கவேண்டியிருக்கின்றது. இருந்தபோதிலும், அவை தொடர்பான செய்திகள் பெருமளவுக்கு வெளிப்படுத்தப்படுவதில்லை. இந்த இடத்தில் கிழக்கிலங்கையிலுள்ள ஊடகவியலாளர்களின் பணி முக்கியமானதாக இருக்க வேண்டும்.
இன்று எம்மால் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் மட்டக்களப்புக்கு 

வரமுடிகின்றது. இது போன்ற ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்ற முடிகின்றது. அரசாங்கத்தையோ அல்லது அதன் படைகளையோ விமர்சிக்க முடிகின்றது. ஆனால், கடுமையான கட்டுப்பாடுகளும் அடக்குமுறையும் தலைவிரித்தாடிய ஒரு காலகட்டத்தில்தான் சுகிர்தராஜன் தன்னுடைய ஊடகத்துறை வாழ்க்கையில் துணிச்சலான ஒரு காரியத்தைச் செய்தார். கிழக்கு மாகாணத்திலிருந்து பெருமளவு ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியிருந்தார்கள், அல்லது மௌனித்திருந்தார்கள். இந்த நிலையில்கூட துணிச்சலுடன் உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்ற தன்னுடைய சமூகப் பொறுப்பை சுகிர்தராஜன் செய்தார். அதற்காக தன்னுடைய உயிரையே விலையாகக்கொடுக்க வேண்டியநிலை வரும் என அவர் நினைத்தும் இருக்கமாட்டார்.

திருகோணமலை கடற்கரையில் 5 மாணவர்கள் மிகவும் பரிதாபகரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் திருமலையை மட்டுமன்றி முழு இலங்கையையும் அதிர வைத்தது. மாணவர்களிடமிருந்த கைக்குண்டு வெடித்ததால்தான் மாணவர்கள் மரணமடைந்ததாக அரச தரப்பு அப்போது கூறியது. உண்மையை வெளிப்படுத்த வேண்டிய ஆபத்தான பொறுப்பு பத்திரிகையாளர்களுக்குள்ளது. இது ஒரு சமூகம் சார்ந்த பொறுப்பு. ஊடகவியலாளர்களை ஒரு காவல்நாய் அதாவது றுயவஉh னழப என்று சொல்வார்கள். வெறுமனே செய்திகளை வெளிடுவதை விட, புகைப்பட ஆதாரத்துடன் அதனை வெளியிடுவதே அதன் நம்பகத் தன்மையை அதிகரிக்கும். திருமலை வைத்தியசாலை பிரேத அறைக்குச் சென்ற சுகிர்தராஜன், 5 மாணவர்களும் மிக அருகில் வைத்து தலையில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டார்.

இந்தப் புகைப்படங்கள் உலகத்தை அதிரவைத்து. உண்மையையும் அம்பலப்படுத்தியது. மாணவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்ற அதிர்விலிருந்து மக்கள் மீள்வதற்கு முன்னதாகவே அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. இந்த உண்மைகளை அம்பலப்படுத்திய சுகிர்தராஜனும் கொல்லப்பட்டார். தான் சார்ந்த சமூகத்துக்காக, அந்த சமூகத்துக்கு நடைபெற்ற ஒரு கொடூரத்தை அம்பலப்படுத்தியதற்காக தன்னுடைய உயிரையே அவர் விலையாகக்கொடுத்தார். சமூகப்பொறுப்புடன் செயற்படும் ஊடகவியலாளர்கள் எந்தளவுக்கு ஆபத்தான சூழ்நிலையில் செயற்பட்டார்கள் என்பதற்கு சுகிர்தராஜனின் மரணம் ஒரு சிறந்த உதாரணம். இவ்வாறானவர்கள் நினைவுகூரப்பட வேண்டும். அவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் என்பதில் கேள்விக்கு இடமில்லை.


சில வருடங்களுக்கு முன்னர் இலங்கை வந்திருந்த ஊடக சுதந்திரத்துக்காகக் குரல் கொடுக்கும் சர்வதேச அமைப்பு ஒன்றின் பிரதிநிதிகள் இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள். இலங்கையில் ஊடக சுதந்திரம் எவ்வாறுள்ளது. ஊடகவியலாளர்களுடைய பாதுகாப்பு எவ்வாறுள்ளது என்பதையிட்டு அவர்கள் விரிவான ஆய்வை மேற்கொண்டிருந்தார்கள். அதன்போது இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் என்ற முறையில் எம்மையும் சந்தித்தார்கள். 

எம்மைப்போன்ற பல அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து தகவல்களைப் பெற்றுக்கொண்டார்கள். இதன் இறுதியில் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ~~உலகில் ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடுகளின் வரிசையில் இலங்கை முன்னணியில் உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. உண்மைதான். அவ்வாறான ஆபத்தான சூழ்நிலைக்குள் இருந்துகொண்டுதான் நாம் ஒரு காலத்தில் பணியாற்றியிருக்கின்றோம். இதில் தமிழ் ஊடகவியலாளர்கள் பலர் மட்டுமன்றி சிங்கள ஊடகவியலாளர்களும் பலியெடுக்கப்பட்டிருக்கின்றார்கள்.

ஆட்சிமாற்றத்துடன் இந்த நிலை பெருமளவுக்கு மாற்றமடைந்துவிட்டது என்பது உண்மைதான். ஆனால், இந்த இடத்தில் நாம் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டவேண்டியவர்களாகவுள்ளோம். இது தொடர்பில் நாம் ஏற்கனவே தெரிவித்திருந்த போதிலும், சுகிர்தராஜனின் 10ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்விலும் இதனை மீண்டும் வலியுறுத்துவது பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கின்றேன். கடந்த காலத்தில் கொல்லப்பட்ட சிங்கள ஊடகவியலாளர்கள் கொலை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் என்னெலியகொட ஆகிய ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதன் பின்னணி விசாரணைக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றது. இதில் பெருமளவு முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதனை நாம் வரவேற்கின்றோம். கொலைகளின் பின்னணியில் செயற்பட்டவர்கள் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடு.
நிமலராஜன், சிவராம், நடேசன், சுகிர்தராஜன் உட்பட பல ஊடகவியலாளர்கள் கடந்த காலங்களில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். 

இந்தக்கொலைகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் எவருமே சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவில்லை. கடந்த காலங்களில் நம்பகத்தன்மையான விசாரணை ஒன்று நடத்தப்படும் என்பதில் நாம் நம்பிக்கை வைத்திருக்கவுமில்லை. இப்போது உருவாக்கப்பட்டுள்ள நல்லாட்சியில் இந்தக்கொலைகள் தொடர்பிலான விசாரணைகள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாம் முன்வைத்திருக்கின்றோம். இந்தக்கொலைகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் சுதந்திரமாக நடமாடும் நிலையில், முழுஅளவிலான ஒரு சுதந்திரத்தை ஊடகவியலாளர்களால் அனுபவிக்க முடியாது என்பதே எமது கருத்து. அதேவேளையில் அச்சம் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறிய ஊடகவியலாளர்களை எவ்வாறு திருப்பி அழைப்பது? சுகிர்தராஜன், நடேசனின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் எந்த நம்பிக்கையுடன் நாடு திரும்புவார்கள்?  அதனால், ஊடக சுதந்திரமும், ஊடகவியலாளர்களுடைய பாதுகாப்பும் உண்மையாகவே உறுதிப்படுத்தப்பட வேண்டுமானால், தமிழ் ஊடகவியலாளர்களுடைய படுகொலைகளுடன் சம்பந்தப்பட்டவர்களும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும் என்பதே இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் நிலைப்பாடு. இதனை சுகிர்தராஜன் நினைவு கூரப்படும் இந்த சந்தர்ப்பத்தில் இதனை வலியுறுத்திக்கூற விரும்புகின்றேன்.

அதனைவிட கடந்த காலத்தில் ஊடக நிறுவனங்கள் பல தாக்கப்பட்டிருக்கின்றன. ஊடகவியலாளர்கள் மட்டுமன்றி ஊடக நிறுவனங்களில் பணியாற்றிய பலர் கூட கொல்லப்பட்டிருக்கின்றார்கள். உதாரணமாக, யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டது. அந்த நேரம் கடமையிலிருந்த பணியாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். சன்டே லீடர், மகாராஜா நிறுவனம், சுடரொளி பத்திரிகை அலுவலகம் என்பனவும் தாக்குதலுக்குள்ளாகின. இவற்றின் சூத்திரதாரிகளை ஏன் சட்டத்தின் முன்பாக நிறுத்தவில்லை? இது தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும். அல்லது இது குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதற்கு தனியான விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் சார்பில் முன்வைக்கவிருக்கின்றோம்.


ஊடகவியலாளர்களுக்கு சமூகப் பொறுப்பு இருக்கின்றது. அவர்கள் சமூகத்தில் மதிக்கப்படுவது அதனால்தான். சமூகம் அவர்களுக்கு ஒரு கௌரவத்தைக் கொடுக்கின்றது. அந்தக் கௌரவமும் மதிப்பும் அவர்கள் ஆற்றுகின்ற பணிக்காகவே தரப்படுகின்றது. எனவே, அவர்கள் மீது சமூகம் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றியாக வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உள்ளது. அந்தப் பொறுப்பை மறந்து செயற்படுவது சமூகத்துக்கு செய்யப்படும் ஒரு துரோகம் என்பதே என்னுடைய கருத்து.

ஜனநாயகச் செயற்பாட்டிலும், அபிவிருத்திப் பணியிலும் ஊடகத்துறையின் பங்கு பிரதானமானது. கடந்த மூன்று தசாப்தங்களாகத் தொடர்ந்த போரும், அதன்பின்னர் தொடர்ந்த கெடுபிடிகளும் சமூகத்தில் மட்டுமன்றி ஊடகத்துறையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில் ஊடகத்துறையால் சுயாதீனமாகச் செயற்பட முடியவில்லை. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின்படி ஊடகத்துறை பெருமளவுக்கு அரசியல் பயப்படுத்தப்பட்டதாக, பக்கச்சார்பான செய்திகளைத் தருவதாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஊடகவியலாளர்கள் மக்களுக்கு உண்மையைத் தெரியப்படுத்த வேண்டும். இதன்மூலம் தம்மைச்சுற்றி என்ன நடைபெறுகின்றது என்பதை பொதுமக்களால் சரியாக அறிந்துகொள்ள முடியும். தாம் வெளியிடும் தகவலுக்கான நம்பகத் தன்மையை அதிகரிப்பதற்கு தேவையான ஆதாரங்களை தேடி எடுத்து வெளியிடுவதும் ஊடகவியலாளர்களின் பணியில் முக்கியமானது. ஊடகவியலாளர்களின் பிரதான சமூகப் பொறுப்பும் பணியும் இதுதான். அதனால்தான் ஒரு சமூகத்தில் ஊடகத்துறையின் பங்கு பிரதானமாக இருக்கின்றது. இவ்வாறான சமூகப்பொறுப்பை நிறைவேற்ற முற்படும் போது எந்தளவுக்கு ஆபத்தை ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது என்பதற்கு சுகிர்தராஜனின் வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணம்.

யாழ்ப்பாணத்தில் ஈழநாடு பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட போது யோகர் சுவாமிகள் சொன்ன ஒரு வாசகத்தை இங்கு நினைவுகூருவது பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கின்றேன்.

ஏசுவார்கள் எரிப்பார்கள்உண்மையை எழுது உண்மையாகவே எழுது" என யோகர் சுவாமிகள் அப்போது சொன்னார்கள். ஒரு பத்திரிகையாளரின் பணியென்ன அதில் என்னென்ன இடர்பாடுகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டிவரும் என்பது பற்றித் தெளிவாகத் தெரிந்த நிலையில் சுவாமிகள் கூறிய கருத்து அது. அவர் கூறியது போலவே நடந்தது.

சமூகப்பொறுப்புடன் செயற்படும் ஒரு பத்திரிகையாளனுக்கு எதிர்ப்புக்கள் உருவாவது இயல்பானதே. அவற்றைத் தடுத்துவிட முடியாது. வேறு வகையில் கூறுவதானால் அத்தகைய எதிர்ப்புக்களே பத்திரிகையாளன் சரியான திசையில் பயணிக்கிறான் என்பதை உறுதிப்படுத்துவதாகவும் கொள்ள முடியும். சமூகப் பொறுப்பு ஊடகங்களுக்கு மிக அதிகம். அதன் செயல்பாடுகள் சமூகத்தில் பெரும்மாற்றங்களை உண்டாக்கும். அதனை உணர்ந்து ஊடகவியலாளர்கள் செயல்பட்டாலே சமூகம் சரியான பாதையில் பயணிக்கும்.

பெரும்பாலான ஊடகங்கள் சமுகத்தின் அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளை பிரதிப்பலிப்பதில்லை என்றும், பெரும் பகுதி விளம்பரங்களை அரசிடம் இருந்தும், வணிக நிறுவனங்களிடம் இருந்தும் பெறுவதால் அவர்கள் செய்யும் தவறுகளை பற்றி பெறுமளவில் பத்திரிக்கைகள் பேசுவதில்லை எனவும் ஊடகங்கள் மீது ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இந்தக் குற்றச்சாட்டை ஒரேயடியாக ஏற்றுக்கொள்ளவும் முடியாது, மறுதலித்துவிடவும் முடியாது. ஊடகங்கள் இந்த நூற்றாண்டில் மிகப் பெரும் தகவல் சொல்லும் சக்கி வாய்ந்த சாதனம். அவற்றில் பிரதிப்பலிக்கப்படும் விசயங்களே மக்களிடையே முக்கியத்துவம் பெறுகிறது. அதனால், ஊடகவியலாளர்களின் பொறுப்பும் அதிகரிக்கின்றது.

ஊடகங்கள் சமூகத்தில் கருத்துருவாக்கத்தில் முக்கிய பங்களிப்பைச் செய்வதால் ஊடகவியலாளர்களுக்கும் மிகப்பெரிய சமுதாய பொறுப்பு இருக்கிறது. இந்த சமூகப் பொறுப்பை முன்னெடுக்கும் போது எதிர்கொள்ளப்படும் ஆபத்துக்கள் தொடர்பில் முன்னரே சுட்டிக்காட்டியிருந்தேன். இந்த அச்சுறுத்தல்களிலிருந்து ஊடகவியலாளர்கள் விடுபட்டு சுயாதீனமாகச் செயற்படும் போதுதான் ஒரு உயிர்த்துடிப்பு மிக்க ஜனநாயகத்தை நாம் ஏற்படுத்த முடியும். அவ்வாறான ஒரு நிலையை அரசாங்கம் உருவாக்க வேண்டும். அதற்கான பொறுப்பு அரசாங்கத்துக்குள்ளது. மறுபுறத்தில் ஆற்றல், துணிச்சல் மற்றும் சமூகப் பொறுப்புடனும் செயற்படக்கூடிய இளம் ஊடகவியலாளர்கள் பலரை உருவாக்கும் பணியில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனம் முக்கிய பொறுப்பை வகிக்க வேண்டும். இந்தப் பணியில் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியமும் இணைந்துகொள்ளும் என உறுதியளித்து என்னுடைய இந்த உரையை முடித்துக்கொள்கிறேன்.

இந்த சந்தர்ப்பத்தை எனக்குத் தந்தமைக்காக கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனம், ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டுக்குழு மற்றும் யாழ் ஊடக அமையத்துக்கும், எனது உரையை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தமைக்காக உங்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். 


கிழக்கிலங்கையில் மிகவும் ஆபத்தான ஒரு காலத்தில் துணிச்சலாக ஊடகப்பணியை மேற்கொண்டு, தன்னுடைய உயிரை அதற்கு விலையாகக் கொடுத்த சுகிர்தராஜனை நினைவு கூர்ந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்காக கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனம், ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டுக் குழு, யாழ் ஊடக மையம் ஆகியவற்றுக்கு என்னுடைய பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

தென்னிலங்கையிலிருந்தும் முக்கியமான சிங்கள ஊடகவியலாளர்கள் சிலர் இந்த நிகழ்வுக்கு வந்திருக்கின்றார்கள். இன, மொழி என்பதற்கு அப்பால் ஊடகவியலாளர்களின் குரல்வளை நெரிக்கப்படும் போது அனைத்துத் தரப்பினருமே ஒன்றாகத் திரள்வார்கள் என்பதன் மற்றொரு வெளிப்பாடுதான் இது. இந்த நிலை இனியும் தொடவேண்டும். இதற்கான பிணைப்பை இந்த சந்தர்ப்பத்தில் நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். கடந்த காலங்களிலும் தமிழ் ஊடகவியலாளர்கள் நெருக்கடிகளை எதிர்கொண்ட போது சிங்கள ஊடகவியலாளர்கள் எமக்காகக் குரல் கொடுத்திருக்கின்றார்கள். இந்த ஆரோக்கியமான நிலை தொடர வேண்டும். என அவர்  தெரிவித்தார்.
 

SHARE

Author: verified_user

0 Comments: