1 Jan 2016

சிம்மம்

SHARE
ஆளும் குணமும், ஆன்மிக பலமும் அதிகமுள்ளவர்களே! சுக்ரனும் புதனும் சாதகமாக இருப்பதால் விலை உயர்ந்த வாகனங்கள், மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். கைமாற்றாகவும் கடனாகவும் வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். உங்கள் ராசியிலேயே இந்த ஆண்டு பிறப்பதால் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். அடிக்கடி உடல் நிலை பாதிக்கும். மெடிகிளைம் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது. 08.01.2016 முதல் ஜென்ம ராசிக்குள் ராகுவும், 7-ம் வீட்டில் கேதுவும் அமர்வதால் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் செரிமானமாகும் உணவுகளை உட்கொள்ளுங்கள். இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வெற்றுத் தாளில் கையொப்பமிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். புதிய நண்பர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம்.
கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்சினையால் பிரிவுகள் வரக்கூடும். எனவே பரஸ்பரம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. அரசாங்க விஷயம் தாமதமாகி முடியும். இந்த வருடம் முழுக்க அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் கைபேசியில் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். செவ்வாயும், சனியும் 27.02.2016 முதல் 9.9.2016 வரை 4-ல் தொடர்வதால் தாயாரின் உடல்நிலை பாதிக்கும், சேமிப்பு கரையும், உங்களின் அடிப்படை குணம் மாறும். வீண் விவாதங்கள் வேண்டாம். வழக்கிலும் அவசரம் வேண்டாம். வழக்கறிஞரைக் கலந்தாலோசிப்பது நல்லது. புத்தாண்டின் தொடக்கம் முதல் 07.02.2016 வரை மற்றும் 02.08.2016 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்வதால் சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பெரிய மனிதர்கள், பிரபலங்களின் நட்பு கிடைக்கும். விலை உயர்ந்த தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். அறிவுபூர்வமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள்.
குழந்தை பாக்கியம் உண்டு. ஆனால் பிப்ரவரி முதல் ஜூலை மாதம் வரை குரு உங்கள் ராசிக்குள் ஜென்ம குருவாக அமர்வதால் பொறுப்புகளும், வேலைச் சுமையும் அதிகரிக்கும். ஒரு தேடலும், நிம்மதியற்ற போக்கும் அதிகரிக்கும். டிசம்பரில் வாகன விபத்துகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் குறைந்த லாபம் வைத்து விற்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் கூட்டுத் தொழிலை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் புதிய பொறுப்புகளால் திணறுவீர்கள். கண்டும் காணாமல் சென்றுகொண்டிருந்த சக ஊழியர்களும் மதிக்கத் தொடங்குவார்கள். உழைப்புக்கேற்ற அந்தஸ்தைப் பெறுவீர்கள். சமய சந்தர்ப்பத்திற்குத் தகுந்தாற்போல் பேசி ராஜதந்திரத்தால் சாதிக்கும் வருடமிது.
SHARE

Author: verified_user

0 Comments: