காத்திருந்து காய் நகர்த்துவதில் வல்லவர்களே! சுக்கிரன் வலுவாக இருக்கும்
நேரத்தில் இந்த வருடம் பிறப்பதால் குடும்ப வருமானம் உயரும், சோர்வு
நீங்கும், கணவன் மனைவிக்குள் இடைவெளி குறையும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு
கிடைக்கும். பதவி உயர்வுகள் உண்டு. அலுவலகம் வழியாகவே அயல்நாடு செல்ல
வாய்ப்பு கிடைக்கும். இந்த வருடம் முழுக்க சனி உங்களுடைய ராசிக்கு 5-ம்
வீட்டிலேயே நிற்பதால் பிள்ளைகளின் பிடிவாத குணம் அதிகமாகும். அவர்களைப்
பாதை மாறாமல் பார்த்துக்கொள்வது நல்லது. பிள்ளைகளுடன் இயல்பாகப் பேசிப்
பழகுவதற்கு நீங்கள் அதிக நேரம் ஒதுக்குவது நல்லது. அவர்களின் குறைகளை
மட்டுமே சுட்டிக் காட்டாமல் அவர்களின் திறமைகளையும் நீங்கள் பாராட்டிப்
பேசுவது நல்லது.
புத்தாண்டின் தொடக்கம் முதல் 07.02.2016 வரை குருபகவான் அதிசாரத்தில்
ராசிக்கு 3-ம் வீட்டில் மறைந்திருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று
நினைத்தாலும், அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். பழைய கடனை நினைத்து
அவ்வப்போது பயம் வரும். திட்டமிட்ட காரியங்களை இரண்டு மூன்று முறை அலைந்து
முடிக்க வேண்டிவரும். உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.
ஆனால் 08.02.2016 முதல் 01.08.2016 வரை குரு உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில்
அமர்வதால் எதிர்பார்த்த வகையில் பணம் வந்து எல்லாவற்றையும்
சமாளிப்பீர்கள். செவ்வாய் கேந்திர பலம் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில்
புத்தாண்டு பிறப்பதால் உங்களின் புகழ், கவுரவம் ஒரு படி உயரும். புதிய
பதவிகள் தேடி வரும். சகோதரர்களுக்குள் நிலவிவந்த போட்டி பூசல்கள் விலகும்.
விலை உயர்ந்த மின்சார, மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். புது மனை வாங்கும்
யோகம் உண்டு. நல்ல நிறுவனத்திலிருந்து வேலைக்கு அழைப்பு வரும். 08.01.2016
முதல் ராகு பகவான் 2-ம் வீட்டிலும், கேது 8-ம் வீட்டிலும் அமர்வதால் கண்
பார்வையைப் பரிசோதித்துக்கொள்ளுங்கள். பல் ஈறு வீக்கம், கணுக்கால், காது,
மூக்கு வலி வந்து போகும். அநாவசியப் பேச்சைக் குறைத்துக் கொள்வது நல்லது.
பரிச்சயமில்லாதவர்களிடம் பேச்சுக் கொடுக்க வேண்டாம். இரு சக்கர வாகனத்தில்
செல்லும்போது மறவாமல் தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள். மற்றவர்களைச்
சார்ந்து இருக்க வேண்டாம்.
தானே முயன்று முன்னுக்கு வரப்பாருங்கள். வியாபாரத்தில்
நம்பிக்கைக்குரியவரைக் கலந்தாலோசித்துப் புது இடத்திற்குக் கடையை
மாற்றுவீர்கள். மார்ச், ஏப்ரல், ஜூன் மாதங்களில் லாபம் அதிகரிக்கும். பழைய
பங்குதாரர் விலகுவார். சந்தைக்கு வரும் புதிய பொருட்களை விற்று லாபம்
காண்பீர்கள். கணவன் மனைவி உறவில் அன்னியோன்யம் பிறக்கும். உத்யோகத்தில்
சம்பள உயர்வுடன், வேலைச் சுமையும் கூடும். இடம் மாற்றம் கிடைக்கும்.
இருப்பதை வைத்து நிம்மதி அடையும் மனதால் மற்றவர்களைக் கவரும் வருடமிது.
0 Comments:
Post a Comment