(சக்தி)
“ஏன் மகள சவுதில இருந்து நாட்டுக்கு எடுக்குறத்துக்கு நான் என்னோட கணவர் ரெண்டு பேருமே பென்சன (ஊழியர் சேமலாப நிதிய) வாங்கிடோம்” என கவலை வெளியிடுகிறார் திருமதி ஜானகி பழனிமுத்து
வீட்டுப் பணிப்பெண்ணாக வெளிநாடு சென்ற தனது மகளை நாட்டிற்குத் திருப்பி அழைப்பதற்காக தங்களின் வாழ்வாதாரமாகவிருந்த தோட்டத் தொழிலை கைவிட்டதோடு குடும்பத்தின் ஒரேயொரு சேமிப்பாகவிருந்த ஊழியர் சேமலாப நிதியை முழுமையாக செலவிட்டுள்ளார் கிருஸ்ணவேணியின் தாயாரான ஜானகி.
சேரத்;து வைத்து பணத்தைச் செலவு செய்து தொழில் வாய்ப்பைத் தேடி வெளிநாடுகளுக்கு அனுப்புவதுதான் வழக்கம், ஆனால் இங்கு சேர்த்து வைத்த பணத்தை செலவு செய்து வெளிநாட்டுக்குச் சென்ற மகளை மீட்கப் பயன்படுத்தப்பட்டுள்ளமை எடுத்துக் காட்டத்தக்கதாகும்.
“எங்க மக சவுதில ஹொஸ்பிட்டல இருந்தப அவகிட்ட ஒரே ஒரு தடவ போண்ல பேசுறத்துக்காக கனகவத்தைல (ஹட்டன்) இருந்து கொழும்புல (145 கிலோமீற்றர்) உள்ள பீறோக்குப் போய்யிருக்கிறன்”; என குடும்ப வறுமை காரணமாக சவுதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப்பொண்ணாகச் சென்று கொடுமைகளை அனுபவித்ததோடு தனது எஜமானார்களால் மூன்று மாடிக் கட்டடத்திலிருந்து கீழே தள்ளி விடப்பட்டு முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ள தன் மகளின் வாழ்க்கை குறித்த சோகக்கதையை விவரித்தவாறே கண்ணீர் விடுகிறார்; கிருஸ்ணவேணியின் தாய் ஜானகி பழனிமுத்து.
மலையகத்தில் குறிப்பாக பெருந்தோட்டத்தை தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மக்கள் பொருளாதார ரீதியாக நலிவுற்ற நிலையில் வாழ்ந்து வருகிறார்கள் என்பது புதுமையான விடயம் அல்ல! அவ்வாறான சூழ்நிலையில் குடும்ப பொருளாதார நெருக்கடியை ஈடுசெய்யும் நோக்கில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில்வாய்ப்பைத் தேடிச் செல்லும் பெண்களின் கதையிலும் ஒரு புதுமையில்லை.
இவ்வாறு வீட்டுப்பணிப் பெண்களாகச் செல்லும் ஒரு சிலர் தமது கஷ்டங்களை மறைத்துக் கொண்டு குடும்பங்களை முன்னேற்றினாலும் பெரும்பாலனவர்கள் உடல் உள ரீதியாக பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகிறார்கள் என்பது கசக்கும் உண்மை.
“என்ன சவுதிக்கு ஹவுஸ்மேடா கூட்டிட்டு போய் அப்புறம் கொஞ்ச நாள்ளேயே ஜோர்தானுக்கு கூட்டிற்று போனாங்க. அங்க ரெண்டு நாள் எந்த பிரச்சனையும் இல்ல ஆனா அதுக்கு பிறகு நெறய வேல தந்தாங்க, செஞ்ச வேலய திரும்ப செய்ய சொன்னாங்க, நடுராத்திலயும் என்னோடு காலுக்கு எண்ண தேய் பிடிச்சிவிடு அப்பிடியிணு கொடும படுத்துவாங்க, தூங்கிறத்துக்கு கூட டைம் இல்ல இந்த கஷ்டத்த என்னால பொறுக்க முடியல. நான் காலைல எட்டு மணில இருந்து நைட் எட்டு மணி வரைக்கும்தா வேல செய்வே. எக்ரிமன்டுல அப்படிதான் சைன் பன்ணே அப்பிடின்னு எஜமானிக்கிட்ட சென்னே” என்கிறார் கிருஸ்ணவேணி.
தனக்குத் தெரிந்த ஒரு சில தொழிற் சட்டங்கள் தொடர்பாக வீட்டு எஜமானியிடம் விளக்க முற்படுகையில் கிருஸ்ணவேணிக்கு எதிராக மிகப்பெரிய கொடுமைகள் அங்கு கட்டவிழ்த்து விடப்பட்டன. கிருஸ்ணவேணி கனவிலும் நினைத்திராத கொடுமைகளை அனுபவித்ததாக கண்ணீருடன் பகிர்கிறார்.
“நான் உன்ன மூணு லட்சம் காசு கட்டிதான் இங்க வேலைக்கு எடுத்தேன் உன்ன கொண்டுபுடுவேன் அப்படியினு சொல்லிக்கிட்டு சூடான எண்ணய எம்மேல ஊத்துனா, ஏன் தலமுடிய வெட்டி கொடும செஞ்சா பொறுக்க முடியாம வீட்டுக்கு அனுப்புங்கணு சொன்னேன். ஆனா அவ நான் கட்டுன காச திருப்பித் தான்னு சொன்னா. நான் சொன்னேன் கஷ்டத்தாலதான் வேலைக்கு வந்தன் என்கிட்ட அவ்வளவு காசு இல்ல நீங்க குடுத்ததா சொல்ற மூணு லட்சம் பத்தி எனக்குத் தெரியாது ஏஜன்டுல எண்பதாயிரம் மட்டும் தான் குடுத்தாங்கணு சொன்னேன்”
இவ்வாறு பல்வேறு கொடுமைகள் கிருஸ்ணவேணியை தொடர்ந்த வண்ணம் அவர் மீண்டும் அவரது ஏஜமானர்கள் சவுதி அரேபியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும் அங்கும் அவருக்கு ஒர் ஆபத்து காத்திருப்பதை அறிந்திருக்க வில்லை. வீட்டில் மூன்றாம் மாடியில் வேலை செய்துகொண்டிருக்கும் போது எதிர்பாராத சமயத்தில் எஜமாயினால் யன்னல் வழியாக வெளியே தள்ளிவிடப்படுகிறார் கிருஸ்ணவேணி. இச்சம்பவத்தைக் கண்ட எதிர் வீட்டில் சாரதியாக பணியாற்றும் இலங்கையரொருவர் சவுதியிலுள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
சவுதி அரேபியாவில் உள்ள வைத்தியசாலையில் மூன்று மாதங்கள் சிகிச்;சை பெற்ற கிருஸ்ணவேணிக்கு முள்ளந்தண்டு முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஒரு கால் முழுமையாக செயலிழந்துள்ளது.
இரண்டு சகோதரிகள் ஒரு சகோதரன் மற்றும் அம்மா அப்பாவின் வறுமைப் போக்குவதற்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சவுதி அரேபியாவிற்குச் சென்ற கிருஸ்ணவேணி தற்போது தனது அன்றாட தேவைகளைக்கூட தானே செய்யமுடியாத நிலையில் பிறரின் உதவியை நாட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
தனது மகளை நாட்டிற்குத் திருப்பி அழைப்பதற்காக தங்களின் வாழ்வாதாரமாகவிருந்த தோட்டத் தொழிலை கைவிட்டதோடு குடும்பத்தின் ஒரேயொரு சேமிப்பாகவிருந்த ஊழியர் சேமலாப நிதியை முழுமையாக செலவிட்டுள்ளார் கிருஸ்ணவேணியின் தாயாரான ஜானகி பழனிமுத்து.
தலைநகரில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றினுடாக கிருஸ்ணவேணி வீட்டுப் பணிப்பெண்ணாக சவுதிஅரேபியா சென்றுள்ள போதிலும் இவர் கஷ்டங்களை அனுபவித்த போது குறித்த நிலையம் பாராமுகமாக நடந்து கொண்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்டதிட்டங்களுக்குட்பட்டே வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களை அனுப்ப முடியும். அவர்களது பாதுகாப்பு, சம்பளம் உட்பட அனைத்து விடயங்கள் தொடர்பிலும் உறுதிப்பட்ட பின்னரே அவர்கள் வேலைக்கு அனுப்பப்படுகிறார்கள். இந்நிலையில் கிருஸ்ணவேணியை சவுதி அரேபியாவிற்கு அனுப்பிவைத்த நிலையம் எவ்வாறு பொறுப்பற்ற தன்மையுடன் நடந்து கொண்டது சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
எனினும் வெளிநாட்டு வேலைவாய்ப்புச் சட்டங்களுக்கமையவும் தூதரகங்களின் அறிவுறுத்தல்களுக்கும் உட்பட்டே பணிபெண்களை வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புகளுக்கு அனுப்ப முடியும் என ஹட்டன் பிரதேசத்திலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையத்தை நடாத்திச் செல்லும் பெயர் குறிப்பிட விரும்பாத முகவரொருவர் தெரிவிக்கின்றார்.
அவ்வாறு பணிப்பெண்களுக்கு பாதுகாப்பு, வேலை நேரம், சம்பளம் உள்ளிட்ட அடிப்படை விடயங்களை உறுதிப்படுத்துவது முகவர் நிலையங்களின் கடமை என்பதோடு கிருஸ்ணவேணிக்கு நடந்தது போன்று கொடுமைகள் நடைபெறும் போது அவர்களை காப்பாற்றாது விடுவது சட்டவிரோதமான செயல் எனவும் அவர் குறிப்பிடுகிறார்.
இந்நிலையில் கிருஸ்ணவேணிக்கு நடைபெற்ற கொடுமைகள் தொடர்பில் குறித்த வேலைவாய்ப்பு முகவர் நிலையம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.
இவ்வாறு கொடுமைகள் அரங்கேறிய வண்ணமிருந்தாலும் ஒரு சில சுயநல பெற்றோர்கள் பொருளாதாரத்தை மாத்திரம் நோக்காகக் கொண்டு எடுக்கும் தீர்மானங்கள் அவர்களது பிள்ளைகளை பாதிக்கின்ற விடயத்தை அறியாமலிருக்கின்றார்களா? அல்லது அறிந்தும் அது தொடர்பில் கவனம் செலுத்தாது விடுகிறார்களா? என்பதும் ஆராயப்பட வேண்டியதாகவுள்ளது.
“எங்க அம்மா எங்ககூடவே இருக்கனும் எங்க அம்மா இலங்கைக்கு வந்துட்டு திரும்பி திரும்ப போறாங்கா எங்க அக்கா அதனாலதான் ஸ்கூழ் போகாம வீட்டில இருக்காங்க அம்மா எங்களோடதான் இருக்கனும்” என்று தனது எதிர்பார்ப்பை வேதனையுடன் வெளிப்படுத்தினார் தரம் ஐந்தில் கல்வி பயிலும் சென்கிலேயர் தோட்டத்தைச் சேர்ந்த உதயகாந்தன்.
“எங்க அம்மா வெளிநாடுக்கு போனதுனால வீட்டுல அப்பா மட்டும்தான் இருகிறாங்க வேல செய்றத்துக்கு யாருமே இல்ல அதால படிப்ப பாதியில நிப்பாட்டிடன் என கூறுகிறார் பாடசாலை பருவத்தை இடைநடுவே கைவிட்ட” சென்கிலேயர் தோட்டத்தைச் சேர்ந்த குமாரி.
வெளிநாடுகளுக்கு குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்பைத் தேடிச் செல்லும் பெண்களின் இன்றய நிலை தொடர்பில் கேட்டறிவதற்காக மட்டக்களப்பில் அமைந்தள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திடம் தொடர் கொண்டபோது அது பலனளிக்கவில்லை.
பொருளாதாரத்தை பெரிதாக கருதும் பெற்றோர்கள் அவ்வாறு தங்களது பிள்ளைகள் குறித்து கவனம் செலுத்தாது நடந்துகொள்வதால் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாவதோடு அவர்களது பகாதுகாப்பு, விருப்பு வெறுப்புகள் பூரணப்படுத்தப்படுகிறதா என்ற மற்றுமொரு கேள்வியும் எழுகிறது.
எனினும் “நானும் ஏன் வைபும் வேல செஞ்சா ஒராளுக்கு ஆயிரம் ரூபா நாள் சம்பளமாக கிடைச்சா ரெண்டு பேரும் சேர்ந்து மாசம் அறுபதாயிரம் சம்பாதிக்க முடியும் ஆனா எஸ்டேட்ல குடுக்கிற நாநூற்றி ஐம்பது ரூபாவ வச்சிகிட்டு குடும்ப நடத்துறது முடியாத விசயம் ஆகவேதான் ஏன் மனைவிய வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுபுனன்” என கணேசன் சகாதேவன் விளக்கம் தருகிறார்”
இந்நிலையில், பல வருடங்களாக நீடித்துவரும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையே மலையக தமிழ் பெண்கள் வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக செல்வதற்கான பிரதான காரணம் என்ற முடிவுக்கு வரமுடியாது.
முற்பணமாக பெருந்தொகையை முகவர் நிலையங்கள் வெளிநாடு செல்லும் பெண்களின் குடும்பத்திற்கு வழங்குவால் எந்தவொரு பின் விளைவுகள் குறித்து ஆராய்ந்து பார்க்காமல் குடும்ப தலைவர்கள் மனைவியர்களை வெளிநாடுகளுக்கு பணிப்பெண்ணாக அனுப்பி வைப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத ஹட்டன் நகரவாசியொருவர் கூறினார்.
அதே சந்தர்ப்பத்தில் “தோட்டங்களிலுள்ள சகல தொழிலாளர்களுக்கு ஒரே மாதிரியான வருமானம் கிடைகிறது. அதைத் திட்டமிட்டு செலவு செய்யாததாலதான் மலையகப் பெண்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படுது. குறிப்பாக இந்த பகுதியிலுள்ள ஆண்களில் அதிகமானவர்கள் மதுபானத்துக்கு அடிமையாகியுள்ளதால அதிக பணம் செலவிடுறாங்க இதை குறைச்சாங்கன்னா சேமிக்கிறத கூட்டலாம்” என்றார் கணணியப்பன் தோட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியின் இரண்டாம் வருட மாணவி கீதாலட்சுமி.
மலையக தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரை தங்களது பொருளாதார மேம்பாட்டிற்கான உபாயமாக பணிப்பொண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வதை வழமையாகக் கொண்டுள்ளனர். இது ஒரு சில குடும்பங்களின் வாழ்க்ககைத் தரத்தை உயர்த்தினாலும் அதன் தாக்கங்கள் சொல்லிலடங்காதவையாக காணப்படுகின்றன.
எத்தனையோ பல கிருஸ்ணவேணிகள் மத்திய கிழக்கு நாடுகளில் சொல்லொணாக் கொடுமைகளை அனுபவித்து குடும்பத்திற்காக உழைத்துக் கொண்டிருந்தாலும் எத்தனையோ குமாரிகள் தங்களது கனவுகளை உள்நாட்டில் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மையாகும்.
வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்வதால் ஏற்படும் பொருளாதார நன்மைகளை விட அந்த பெண்களும் அவர்கள் சார்ந்த குடும்பங்களும் எதிர் நோக்கும் உடல் உள ரீதியான பாதிப்புகள் எண்ணிலடங்காதவை. இவ்விடயம் தொடர்பாக விழிப்படைய வேண்டியது அந்த பெண்கள் மாத்திரமல்ல மலையக சமூகத்தினரே!
இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது யாருடைய பொறுப்பு சுயநலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல்வாதிகளா? அல்லது கல்விச் சமூகமா? மனைவின் வருமானத்தை எதிர்பார்க்கும் கணவன்மார்களா? அந்நிய செலாவானிகளை எதிர்பார்க்கும் அரசாங்கமா? ஏமாற்றிப் பிழைக்கும் முகவர் நிலையங்களா? தமது பெண் பிள்ளைகளின் வருமானத்தை எதிர்பார்க்கும் பெற்றோர்களா? அல்லது சமூக ஆர்வலர்களா? என சிந்திக்க வேண்டி தருணமே இது.
0 Comments:
Post a Comment