23 Jan 2016

நோய்கள் ஏற்படாமலிருக்க உடற்பயிற்சி அவசியமாகின்றது

SHARE
தொற்றா நோய்கள் ஏற்படாமல் இருப்பதற்கு சீரான உடற்பயிற்சிப் பழக்கம் அவசியம் அதை ஊக்குவிக்கும் நோக்கோடு மட்டக்களப்பு நகரில் பொழுது போக்குப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் எம். உதயகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகர சபையின் ஆளணியினரின் முயற்சியினால் பாலம் அதனுடன் இணைந்த நடைபாதை மற்றும் சிறுவர் பொழுது போக்கும் பூங்கா என்பன பாட்டாளிபுரம் விளையாட்டு மைதான வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று முந்தினம் (20) மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு அவர் மேலும் உரையாற்றுகையில்,

மட்டக்களப்பில் கல்வி மற்றும் நிர்வாக சேவைகளில் சிறந்த சேவையாற்றிய துறைசார் விற்பனர்களை கௌரவிக்கும் நோக்கோடு இலங்கையில் சிறந்த நிர்வாக சேவை அதிகாரியாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருமான அமரர் ஏ.கே. பத்மநாதன் மற்றும் சர்வதேச மட்டத்தில் சிறந்த கல்வியியலாளர்களை உருவாக்கிய மட்டக்களப்பு மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் பிரின்ஸ் காசிநாதர் ஆகியோரின் சேவைகளை நினைவு கூர்ந்து இருவரினதும் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது.

இயற்கைக் காற்றோட்டமுள்ள மட்டக்களப்பு வாவியின் அருகே சிறார்களின் நலன் கருதி நடைபாதையுடன் இணைந்த சிறுவர் பூங்கா ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரதேசத்தில் உள்ள சொத்துக்களை அதனைப் பாவிப்போர் பொதுச் சொத்து எனக் கருதாது தங்களின் சொத்து எனும் மன நிலையை உருவாக்கி அவற்றைப் பாதுகாக்க உதவ வேண்டும் என்றார்.
SHARE

Author: verified_user

0 Comments: