தேவநாயகம் ஐயாவின் தீர்க்கதரிசனமான செயற்பாடே இந்தப் பிரதேசத்தில் மூன்று நிறுவனங்கள் அமைக்கப்படுவதற்கான காரணமாக இருந்தது. கும்புறுமூலை அரசாங்க அச்சகம், தேவாபுரம் அரிசி ஆலை களுவாஞ்சிக்குடியில் ஐஸ்கட்டி தொழிற்சாலை ஆகியன உருவாவதற்கு காரணமாகும் என கிராமிய பொருளாதார அலுவல்களுக்கான பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார்.
வியாழக்கிழமை (07) தேவாபுரம் கோயிலில் வைத்து அந்தப் பிரதேசத்தில் வாழுகின்ற மக்களைச் சந்தித்து உரை நிகழ்த்தும்போதே பிரதியமைச்சர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…
மேற்படி அந்த மூன்று நிறுவனங்களும் இயங்கியிருந்திருந்தால் இந்தப் பிரதேசத்தில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும். இதனை கருத்திற் கொண்டே தேவநாயகம் ஐயா அவர்கள் செயற்பட்டிருக்கின்றார் என்பது புலப்படுகின்றது.
அதுமட்டுமல்லாமல் அரசாங்க அச்சகம் இயங்கியிருக்குமேயானால் பெரும்வாரியான இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பானது நிரப்பப்பட்டிருக்கும். ஆனால் இந்த நிறுவனங்கள் ஏதோ ஒரு அடிப்படையில் திட்டமிடப்பட்ட நடவடிக்கைக்கூடாக செயலிழக்கச் செய்யப்பட்டிருக்கின்றன. இதன் மூலமே இந்தப் பிரதேசத்தில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதில் கடினமும் சிரமமும் ஏற்பட்டிருக்கின்றது.
முறக்கொட்டாஞ்சேனை பாதை திறப்பு விடயம் பற்றி அண்மையில் நான் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன். யாரும் என்னிடம் வந்து இதுபற்றி கதைக்கவோ அல்லது முறையிடவோ இல்லை. இருந்தும் நான் இந்தப் பகுதிக்கூடாகச் செல்லுகின்றபோதிலெல்லாம் இந்த தேவாபுரத்து மக்களும் அதைச் சூழவுள்ள பிரதேசத்தில் வாழுகின்ற மக்களும் மூடப்பட்டிருக்கின்ற இந்தப் பாதையினால் அனுபவிக்கின்ற அவஸ்தைகளையும் அசௌகரியங்களையும் கண்ணுற்றுள்ளேன்.
கடந்த தேர்தல் காலங்களில் இந்தப் பிரதேசத்திற்கு வந்து நான் வாக்கு கேட்டது கிடையாது. நீங்கள் யாருக்கு எப்படி எதை நினைத்து வாக்களித்தீர்கள் என்ற கேள்வியையும் நான் கேட்க விரும்பவில்லை. இருந்தாலும் ஒரு சந்தர்ப்பம் எங்களுக்குக் கிடைத்துள்ளது. இச்சந்தர்ப்பத்திலே அபிவிருத்தியின்பால் ஒரு பிரதேசத்தை கொண்டு செல்லுகின்ற முயற்சியில்தான் சகல அரசியல் தலைமைகளும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமே தவிர இனவாதக் கருத்துக்களை அப்பாவிப் பொதுமக்களின் மனதிலே விதைத்து இனதுவேசத்தை ஊட்டி அவர்களின் வாக்குகளை கபளீகரம் செய்துவிட்டு கண்டு கொள்ளாமல் போகின்ற நிலையானது மிகவும் வருந்தத்தக்க விடயமாகவே நான் கருதுகிறேன்.
வெற்றுக்கோசங்களால் மக்களை பிளவுபடுத்தி காலம் கடத்துகின்ற அரசியல் போக்கினை செய்வதற்கு நான் தயாராக இல்லை. உண்மைக்கு உண்மையாகவே என்னால் முடியுமானவற்றை மாத்திரமே செய்கின்ற ஒருவனாகவே நான் இருக்கிறேன். இப்போது நீங்கள் எங்களுக்கு வீதி செப்பனிடப்பட வேண்டுமென்று கேட்கிறீர்கள் கோவில் புனருத்தாபனம் செய்யப்பட வேண்டுமென்று கேட்கிறீர்கள் தொழில்வாய்ப்பை கேட்கிறீர்கள் கல்வி அபிவிருத்திக்கான கோரிக்கைகளை முன்வைக்கின்றீர்கள் இவைகள் அனைத்தையும்தான் முஸ்லிம் சமூகம் தேர்தலுக்கு முற்பட்ட காலங்களில் எம்மிடம் முன்வைக்கின்ற கோரிக்கைகளாகும். அரசியல் அதிகாரங்களைப் பயன்படுத்தி தமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்கின்ற போக்கை முஸ்லிம் மக்கள் கொண்டிருக்கிறார்கள்.
மாறாக தமிழ்ப் பிரதேசங்களில் இந்த நிலை இல்லையென்றே கூறலாம். தேர்தல் காலங்களில் வருகின்ற பொட்டணி வியாபாரிபோல் ஒருசிலர் வந்து முறுக்கேற்றும் வசனங்களால் உங்களை உசுப்பேத்தி இலாவகமாக உங்கள் வாக்குகளை அள்ளிக்கொண்டு போய்விடுகிறார்கள். பின்னர் அடுத்த தேர்தல் மட்டுக்கும் உங்களைக் கண்டுகொள்ளவோ அல்லது உங்கள் குறைகளை நிவர்த்தி செய்யவோ அல்லது உங்களது பிரதேசங்களை அபிவிருத்தி செய்யவோ அவர்கள் நினைப்பதும் இல்லை இந்தப் பிரதேசத்துக்கு வருவதும் இல்லை.
போடப்பட்டது சிங்களப் புள்ளடியா? தமிழ் புள்ளடியா? முஸ்லிம் புள்ளடியா? என்கின்ற ஆராய்ச்சியெல்லாம் அவனுக்கு தேவைப்படாது. இதையேதான் தேவநாயகம் ஐயாவும் இனமத பேதங்களைக் கடந்து தமது அபிவிருத்திப் பணிகளையும் செய்தார்கள். தேவநாயகம் ஐயாவின் வெற்றிக்காக ஓட்டமாவடி மீராவோடை வாழைச்சேனை என முஸ்லிம் பிரதேசத்து வாக்காளர்கள் தமது வாக்குகளை கணிசமான அளவு அள்ளி வழங்கினார்கள். அப்போது அந்த முஸ்லிம் வாக்காளர்கள் இவரொரு தமிழன் என்றோ இவருக்கு வாக்களிக்கக்கூடாது என்றோ துவேச மனப்பான்மையோடு நடக்கவில்லை.
எனவேதான் நாம் வாழுகின்ற குறுகிய காலத்திற்குள் எமது பரம்பரைக்காவது இந்த அபிவிருத்தியின் வாசனை நுகரக்கிடைக்கக்கூடிய வகையில் நாம் செயற்பட வேண்டும். இனமத கட்சி பேதங்களுக்கப்பால் நமக்குரிய ஒரு நல்ல தலைவனை நாம் தெரிவு செய்வதில் உறுதியாக இருப்போம் என அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment