4 Jan 2016

இலக்கியப்பாதையில் தடம் பதித்த கூட்டுறவாளர் மா.திருநாவுக்கரசு வித்தகர் விருது பெற்று கௌரவிக்கப்பட்டார்

SHARE
(வ.சக்திவேல்)

மட்டக்களப்பு மாநிலத்தில் “குருவூரான்” புனை நாமத்தில் உலாவரும் மாசிலாமணி - திருநாவுக்கரசு அவர்களைத் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது வேதப்பிட்டியெனும் பழம்பெருமை கொண்ட குருக்கள்மடப் பேரூரே இவர் வாழும் இடம்.
இவர் 1945.01.28.ம் திகதி ஞாயிறு விநாயக சதுர்த்தி அன்று சின்னப்பிள்ளைக்கும் மாசிலாமணி தோம்புதோருக்கும் மகனாகப் புவியில் அவதரித்தார். இவர் இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்னுமாப்போல் தமிழிலும் ஆங்கிலத்திலும் பாண்டித்தியம் உடையவராகத் திகழ்கிறார்.

ஆரம்பக் கல்வியை குருக்கள்மடத்திலும் உயர்கல்வியை மட்.சிவானந்த வித்தியாலயத்திலும் பெற்றார். ஸ்ரீ இராம கிருஸ்ண மிசன் துறவி சுவாமி நடராஜானந்தஜீயின் ஆன்மீகப் பாசறையில் வளர்ந்த பெருமையும் இவருக்கு உண்டு. ஆன்மீகப் பாதையில் அடியெடுத்து வைத்த இவர் பட்டிருப்புத் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் சி.மூ.இராசமாணிக்கனாரின் மனவெளிப்பாடுகளுள்ளும் மதிப்புற்று வாழலானார்.
பட்டிருப்புத் தொகுதி வீரகேசரி நிருபராக சமூகநிலையில் தன்னை அறிமுகப்படுத்திய திருநாவுக்கரசன் தனது துறைபோந்த பணிக்கு கூட்டுறவுத்துறையை சிறப்பெனத் தேர்ந்தெடுத்து அத்துறையில் பிரகாசிக்கலானார். முண்முனை தென் எருவில் பற்று பிரதேச பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பொது முகாமையாளராக நீண்ட ஆண்டுகள் கடமையாற்றி ஓய்வு பெற்றுள்றுள்ளார். இலங்கை கூட்டுறவு முகாமை சேவை நிலையத்தினால் நடாத்தப்பட்ட வியாபார முகாமைத்துவ டிப்ளோமா கற்கை நெறிப் பரீட்சையில் முதலாம் தரத்தில் சித்தி பெற்றார். கலாநிதி புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை அவர்களின் நட்பும் இறுக்கமான உறவும் இயல் தமிழ் வளர்ச்சிக்கு இவரை இட்டுச்சென்றது. இவர் மரபு ரீதியாக கவிதை எழுதத் தொடங்கினார்.
இவரது எழுத்தியலுக்கு அழகு சேர்ப்பது இவர் வெளியிட்ட “மட்டக்களப்பின் மாண்புறு குருக்கள்மடம் எனும் பேருர்” நூலே யாம் இவ்வகையில் சிறப்புற்ற திருநாவுக்கரசுக்கு  “தமிழ்வளவன்” எனும் விருதை வழங்கிக் கௌரவித்தது மட்டக்களப்பு மாவட்ட பாரம்பரிய கலாச்சார மேம்பாட்டுமையமான “களரி” அமைப்பு இலங்கை அரசாங்கத்தின் உயர் விருதாக மதிக்கப்படும்  ‘கலாபுஷணம்” விருதையும் 2013ம் ஆண்டு பெற்றுக் கொண்டார். 2015ம் ஆண்டு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் வழங்கப்பட்ட ‘வித்தகர்”; விருதையும் தனதாக்கிக்கொண்hர். நகைச்சுவை ததும்பப் பேசும் திருநாவுக்கரசனார் பழகுவதற்கு இனியவர் பண்பானவர்பணிவோடு பழகும் பக்குவம் மிக்கவர். குருபக்தியுடையவர். நாடகத்துறையிலும் இவரது பங்கு கணிசமானதொன்றே கூறல் வேண்டும். இயக்குனராக நடிகராக மட்டுமன்றி ஒப்பனையாளனாகவும் தேர்ச்சி பெற்றவர். இலக்கியத்துறையில் களம் பல கண்ட ‘கீரன்” என்றே இவரை அழைப்பதுண்டு. அறிவியல் சார் கட்டுரைகள் பல எழுதி பாராட்டப்பட்டவர். இவர் சமூக வலையமைப்பின் மாண்பியலில் இருந்து பிரிக்கப்பட முடியாதவராகவும் காணப்படுகிறார். இவர்
தலைவராக மட்.மாவட்ட விவசாய பெறியியல் 
கூட்டுறவு சேவைகள் சமாசத்தில் பலகாலம் திறம்பட சேவையாற்றியவர்.
சமாதான நீதவான்
மனிதாபிமானத்திற்கான செயற்பாட்டாளன் சீ.எச்.ஏ. நிறுவகம்
பணிப்பாளர் - மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவுச்சபை
பணிப்பாளர் - மண்முனைதென் எருவில் ப.நோ.கூ.சங்கம்பணிப்பாளர் - திருஞானசம்பந்தர் குருகுலம்
உறுப்பினர் - ஆதார வைத்தியசாலை கமிட்டி களுவாஞ்சிகுடி
மத்தியஸ்தர் - ம.தெ.எ.ப.பிரதேச செயலாளர் பிரிவு
இணைப்பாளர் - மட்.கூட்டுறவு அவை
பணிப்பாளர்  - மட்.மாவட்ட சிக்கன கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்
இணைப்பாளர் - மட்.சமாதான மக்கள் நலன்புரி அமைப்பு
இணைப்பாளர் - மட்.மாவட்ட சமாதான நீதவானகள் மேம்பாட்டு மையம் போன்ற அமைப்புக்களில் அங்கத்துவம் பெறுகின்றார்.

இவை தவிர குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலய (வண்ணக்குமார்) பரிபாலன சபையின் செயலாளராகவும் குருக்கள்மடம் முதியோர் சங்கத்தின் தலைவராகவும் மட்டக்களப்பு குருக்கள்மடம் பேராளர் அவையின் இணைப்பாளராகவும்.

குருக்கள்மடம் தன்மன் செட்டிகுடி மக்களின் வண்ணக்கராகவும் செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலை கமிட்டி உறுப்பினராகவும் “களரி” அமைப்பின் உறுப்பினராகவும் தேச கீர்த்தி கீர்த்தி ஸ்ரீ போன்ற பல விருதுகளைப்பெற்று பெருமைக்குரியவராகவும் பேருரான் நாவுக்கரசன் விளங்குகின்றார்.
மட்டக்களப்பு மாநில மக்கள் அனைவராலும் நேசிக்கப்படுகின்ற நாவுக்கரசன் தமிழ் மொழியில் மகவும் ஈடுபாடு கொண்டவர். சமூகசேவை விளையாட்டு பொழுதுபோக்கு கலை இலக்கியம் கவித்துவம் என பல்வேறு பரிமாணங்களையும் தன்னுள் அடக்கிக்கொண்டவராகவும் சமூக எழுச்சிக்கு பாடுபடுபவராகவும் காணப்படுகின்றார். ஈழத்தின் தமிழ் அறிஞர் பரம்பரையில் இவரும் இணைக்கப்பட வேண்டியவர்.மிகப்பெரிய அறிஞர் முதல் பாமரர்கள் வரை எல்லோரிடமும் இனிமையான உறவுகளைப் பேணுபவர்.அரசியலவாதிகள் அரச அதிகாரிகள் எல்லோரினதும் அன்பினையும் நட்பினையும் கொண்டிருப்பவர்.இன்னும் சொல்லப்போனால் மட்டக்களப்பு மானிலத்தை மாத்திரமன்றி தமிழ் கூறும் நல்லுலகத்தை வெகுவாக நேசிப்பவர்.
விசேட திறன்
மத்தயஸ்த சபைக்கு வரும் பிணக்குகளை அறிவுபுர்வமாக சிந்தித்து அணுகுவதோடு அதனை தீர்த்துவைத்து மக்களால் மதிக்கப்படும் சிறப்பும் இவருக்குரியது. இனிய செந்தமிழ் வீட்டிலும் ஏட்டிலும் கமழ கலைத் துறையையும் அறிவியல் துறையையும் தனதாக்கிக்கொண்ட நல்லவர்.இவ் வித்தகர் கலாபுஷணம் மாசிலாமணி – திருநாவுக்கரசு.

SHARE

Author: verified_user

0 Comments: