9 Jan 2016

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக உள்ள மீள்குடியேற்றப் பகுதிகளுக்கு விசேட திட்டம்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக உள்ள மீள்குடியேற்றப் பகுதிகளை விரைவாக அபிவிருத்தி செய்யும் விசேட திட்டம் ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன் அதற்கான நிதிகளைப் பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
வியாழக் கிழமை மாலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட திட்டமிடல் பிரிவின் 2015 ஆம் ஆண்டுக்கான இறுதித்திட்ட மீளாய்வுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் உரையாற்றிய அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு 2230 மில்லியன் ரூபா செலவில் 4334 அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட மக்கள் பயன்பாட்டக்காகக் கையளிக்கப்பட்டுள்ளன. இவற்றினை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு சகல விதத்திலும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து பிரதேச செயலக திட்டமிடல் பிரிவுகளுக்கும் விசேடமாக மாவட்ட திட்டமிடல் பிரிவு மற்றும் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதே போன்று 2016ஆம் ஆண்டில் நடைமுறைப் படுத்தப்படவுள்ள அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கி மக்களுக்கு மென்மேலும் சேவைகளை வழங்க முன்வரவேண்டும்.

அத்தோடு கடந்த வருடத்தில் நடைமுறைப் படுத்தப்பட்ட 100 நாள் வேலைத் திட்டத்தினை பூரணமாக மட்டக்களப்பு மாவட்ட நிறைவு செய்திருந்தது. இதனால் இலங்கையில் முதலாவது இடத்தினை பெற்றுக் கொண்டது. இதற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், கடந்த வருடத்தில் சிறப்பாக செயற்பட்ட பிரதேச செயலக திட்டமிடல் பிரிவுகளுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

இந்த மாவட்ட திட்டமிடல் பிரிவின் 2015 ஆம் ஆண்டுக்கான இறுதித்திட்ட மீளாய்வுக் கூட்டத்தில் கடந்த வருடத்தில் சிறப்பாகச் செயற்பட்ட கோறளைப்பற்று வடக்கு, மண்முனை வடக்கு, மண்முனை தென் எருவில் பற்று ஆகிய பிரதேச செயலக திட்டமிடல் பிரிவுகளுக்கு மடிக்கணனிகள் வழங்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், திட்டமிடல் பிரிவின் கணக்காளர் எம்.பசீர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், திட்டமிடல் பிரிவுகளின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.








SHARE

Author: verified_user

0 Comments: