திருகோணமலை, வெருகல் வைத்தியசாலையில் நிலவுகின்ற வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரியும் நாதன் ஓடை அணைக்கட்டை புனரமைக்குமாறு கோரியும் வெருகல் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை பொதுமக்களும் விவசாயிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெருகல் வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவரே சேவையாற்றுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதேவேளை நாதன் ஓடை அணைக்கட்டு புனரமைக்கப்படாமையினால், அதிலிருந்து வடிந்தோடும் நீர் ஊருக்குள்; புகுவதனால், விவசாயிகளுக்கு போதுமான நீரை சேமிக்க முடியாதுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கி.துரைரெட்ணசிங்கமும் ஆர்;ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்கு வருகைதந்து மக்களுடன் கலந்துரையாடினர்.
இந்நிலையில், தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களையும் மேற்படி இருவரிடமும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கையளித்தனர். இதன்போது, உடனடியாக வெருகல் வைத்தியசாலைக்கு வைத்தியர் ஒருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் உறுதியளித்தார்.
நாதன் ஓடை அணைக்கட்டை புனரமைத்துத் தருவதற்கான நடவடிக்கை தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கலந்துரையாடுவதாக விவசாயிகளிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கி.துரைரெட்ணசிங்கம் உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
0 Comments:
Post a Comment