2 Dec 2015

சென்னையில் கடும் மழை - பஸ் ரயில் பயணங்கள் நிறுத்தம்

SHARE
சென்னையில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக, பஸ் ரயில் பயணங்கள் என அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மேலும் 100 க்கும் மேற்பட்ட மக்களின் வசிப்பிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என இந்திய செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களை பாதுகாக்க இராணுவத்தினர் சேவையாற்றி வருகின்றனர். பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பதற்கும் மீட்புச் சேவையில் ஈடுபடுவதற்கு 10,000 க்கும் மேற்பட்ட பொலிஸார் மற்றும் நீச்சல் வீரர்கள் என பலரும் ஈடுபட்டுள்ளனர். 
சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமானத்தின் ஓடுபாதையில் மழை நீர் தேங்கியிருப்பதாலும், பெய்து வரும் மழை காரணமாக ஓடுபாதை தெளிவாகத் தெரியாத நிலை இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் நேற்று (01) அதிகாலை ஆரம்பித்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இன்னும் இரு நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழையின் காரணமாக 35 வாவிகளின் அணைக்கதவு திறக்கப்பட்டுள்ளன.

சென்னையைத் தென்மாவட்டங்களுடன் இணைக்கும் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் பல மணிநேரங்களாக நீடிக்கிறது. மழையின் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளிகளில் துவங்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் ஜனவரி முதல் வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: