29 Nov 2015

மட்டக்களப்பு தமிழ் தேசியமன்றத்தின் உருவாக்கம் கட்சிப் பிளவு இல்லை - அரியநேத்திரன்.

SHARE
(திலக்ஸ்) 

மட்டக்களப்பில் மாவீரர் நாளில் புதிய அமைப்பான மட்டக்களப்பு தமிழ் தேசிய மன்றம் உருவாக்கப்பட்டு அதனுடாக மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு 27.11.2015 அன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் தலைமையில் அவரின் அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், மற்றும் பொன்.செல்வராசா, தற்போதைய நடாளுமன்றஉறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கிழக்கு மாகாணபிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மற்றும் மாகாண சபை உறுப்பினர் மா.நடராஜா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். 
கடந்தகாலங்களில் மாவீரர் நாள் தமிழரசுகட்சியின் மட்டக்களப்பு நகரிலுள்ள அலுவலகத்தில் நடைபெறுவது வழக்கம். அதற்கு மாறாக இம்முறை நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் அலுவலகத்தில் இடம்பெற்றமையும், கூட்டமைப்பின், ஏனைய அரசியல் வாதிகள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளாமையும் மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தினை ஏற்படுத்தியிருந்தது மட்டுமல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இருக்கின்ற உட்பூசல்கள்தான் தமிழ் தேசியமன்றத்தின் உருவாக்கமோ? என்றபெரும் சர்ச்சையும் மக்களிடையே ஏற்பட்டிருந்தது. மக்களின் சந்தேகம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இத் தேசியமன்றத்தினை உருவாக்கியவருமான பா.அரியநேந்திரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது … அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு தமிழ் தேசியமன்றமானது எந்த விதமானகட்சி தொடர்பு மின்றி வெள்ளிக்கிமைதான் (27) உருவாக்கப்பட்டது. இதன் நோக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூலம் நினைவு கூறப்பட வேண்டிய நிகழ்வுகள் நடாத்தப்பட முடியாமல் போனால் இம்மன்றத்தினூடாக அந்நிகழ்வுகளை நிகழ்த்துவதற்காவே இது உருவாக்கப்பட்டது. எனத் தெரிவித்த அவர்…. 
மாவீரர் நாளானது தமிழ் மக்களுக்கு ஒருபுனிதநாளாகும். அதனை ஒவ்வொரு தமிழனும் உணர்வுடன் செய்ய வேண்டியது தலையாய கடமையாகும். ஆகவேதான் நான் ஒவ்வொரு வருடமும் இதனைநினைவு கூறுவது வழக்கம். அது இம்முறையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எந்தவொரு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களோ, அல்லது மாகாண சபை உறுப்பினர்களோ அதனை முன்னெடுத்து செயற்படுத்த முன்வரவில்லை. நான் வெள்ளிக்கிழமை (27) இறுதிநேரத்தில் பிற்பகல் 3.00 மணியளவில் நானே அதனை முன்னெடுக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றியபோது நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனிடம், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது இது பற்றி கலந்துரையாடினேன். அப்போது அவர் தனது அலுவலகத்தில் இந்நிகழ்வை செய்வோம் என்று கூறினார். 

அதன்படி நாங்கள் அந்நிகழ்வை முன்னெடுக்க இருந்தோம். அங்கு சமூகமளித்திருந்த அரசியல் வாதிகளுக்கு நான் அழைப்பு விடுக்கவில்லை. அவர்களே என்னை தொடர்பு கொண்டு மாவீரர் தினம் பற்றிக் கதைத்தபோது கேட்டபோது நான் இவ்வாறு இந்த மாவீரர் நினைவேந்தல் நிகழ்வினை ஒழுங்குசெய்துள்ளோம் என கூறியபோது அவர்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்களே தவிர நான் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. 
மாவீரர் நாள் நிகழ்வு வழமையாக தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நடைபெறுவதுதான் வழக்கம். அதனை இம்முறை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் முன்னெடுக்காத பட்சத்தில் தான்நான் மட்டக்களப்பு தமிழ் தேசிய மன்றம் எனும் இவ்வாறானதொரு அமைப்பினை உருவாக்கி அதன் மூலம் இந்நிகழ்வை செய்தேன். கட்சிசார்பாக இந்நினைவேந்தலை நான் முன்னெடுக்க முடியாது. காரணம், நான் அதற்கான அனுமதியினை தலைமைகளிடம் பெற்றபின்பே முன்னெடுக்கலாம். இது கட்சிபிளவோ அல்லது கட்சியின் உட்பூசலின் விம்பமோ இல்லை. இதன்மூலம் நான் எந்தவிதமான அரசியல் இலாபத்தினையும் பெறமுயற்சிக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: