16 Nov 2015

சீ - பிளேனின் வருகையும் மட்டக்களப்பின் அழிவும்

SHARE
(கலாநிதி ஓ.கே.குணநாதன்)
மட்டக்களப்பு நகரின் மத்தியில் லேடி மன்னிங் ட்ரைவில் (Lady Manning Drive) இயங்கும் சீ – பிளேன் கருத்திட்டத்தினால் மட்டக்களப்பு வாவியும் அதனோடு இணைந்த சுற்றாடலும் மிக மோசமாக பாதிப்படைந்து வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

சீ - பிளேனின் ஓடு தளம் லேடி மன்னிங் ட்ரைவ் பிரதான பாதையில் இருந்து சுமார் 25 மீற்றருக்குள்ளாக அமைந்துள்ளதுடன் அதன் இறங்கு தளம் லேடி மன்னிங் ட்ரைவ் பிரதான பாதையில் இருந்து சுமார் 10 மீற்றருக்குள்ளாக அமைந்துள்ளது.
பிரதான லேடி மன்னிங் ட்ரைவ் பாதையின் இருமருங்கும் சுமார் 15 மீற்றருக்கு உள்ளாகவே மக்கள் குடியிருப்புக்கள் அமைந்துள்ளதுடன் இந்த பாதையின் ஊடாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயணம் செய்கின்றனர்.
சீ - பிளேனில் இருந்து வரும் சத்தத்தினால் ஒலி மாசடைவதுடன் எரிபொருள் கழிவு நீரில் கலப்பதனால் மட்டக்களப்பு வாவி மாசடைகின்றது.
இதிலிருந்து வெளியாகும் வாயுவினால் சுற்றாடலில் வசிக்கும் மக்களுக்கு புற்றுநோய் ஏற்படுமா என்ற அச்சம் தோன்றியுள்ளது.
ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்டம் புற்றுநோயில் முன்னிலை வகிப்பதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
இதன் அதிர்வு சுற்றாடலில் வசிக்கும் பெண்களுக்கு இரத்தப் போக்கை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதுடன் சுற்றாடலில் வாழ்கின்ற கர்ப்பிணிப் பெண்கள் குறைப் பிரசவ குழந்தைகளைப் பிரசவிக்கும் அவலங்களும், கருச் சிதைவுகளும் ஏற்பட்டுள்ளன.
தினமும் கேட்கும் சீ - பிளேனின் அதிர்வோசையினால் கைக்குழந்தைகளின் செவிப்பறை பாதிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
சீ - பிளேன் ஏற்படுத்தும் அதிர்வும் சத்தமும் சுற்றாடலில் வாழும் முதியவர்களையும் இருதய நோயாளிகளையும் மாரடைப்பால் மரணிக்க வைத்து விடுமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது.
நேரகாலமற்று எதிர்பாராத வேளையில் வந்திறங்கும் சீ-பிளேனின் சத்தத்தினாலும் அதிர்வினாலும் பாதையினால் போகும் பொதுமக்கள் திடீர் அச்சத்துக்குள்ளாவதுடன் கர்ப்பிணிப்பெண்கள் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் கூட அதிர்ச்சியினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த சீ - பிளேன் வருகையின் திட்டமானது அரசினால் மக்களின் தேவை கருதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதல்ல. சுற்றுலா பயணிகளின் வருமானத்தைப் பொருட்டாகக் கொண்டு தனியார் நிறுவனங்களால் நிகழ்த்தப்படும் இலாபநோக்கு சேவையாகும்.
மட்டக்களப்பில் அமைதி பேண வேண்டிய கச்சேரி , பொது நூலகம் , நீதி மன்றம் காந்திப் பூங்கா , நீரூற்றுப் பூங்கா , வானிலை அவதான நிலையம் , ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் , மதுரை காமராசர் பல்கலைக்கழக இலங்கை வளாகம், சிரேஸ்ட  பொலிஸ்மா அதிபர் காரியாலயம் , பொலிஸ் அத்தியஸ்தகர் காரியாலயம் ஆகியவற்றுக்கு  நடுவிலே  சீ-பிளேன் தரையிறக்கப்படுவது எவருடைய கண்ணுக்கும் புலப்படவில்லை.
மட்டக்களப்பு வாவியில் சீ-பிளேன் இறங்குவதை சாதாரணமாக எண்ணி விட முடியாது. மட்டக்களப்பு மீனவர்களின் தலை மீது இறக்கப்படும் சீ-பிளேன்களாகவே கருத வேண்டும். மீனவ மக்களின் உரிமைகளையும், இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள சுற்றாடல் சட்டங்களையும் மீறிய செயலாகும்.
திருத்தப்பட்ட 1980ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் படி பிரகடனப்படுத்தப்பட்ட 1993 ஜீன் 24 ஆம் திகதி 772ஃ 22 ஆம் இலக்க வர்த்த மானியின் அறிவித்தலின் படி விமான ஓடு பாதைகளை நிர்மாணிப்பதற்கு முன்னர் சுற்றாடல் தாக்க  மதிப்பீட்டு செயன்முறைக்குட்பட்டு முன் கூட்டியே எழுத்தாலான சுற்றாடல் சார் அனுமதியைப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
அப்படியானால் மட்டக்களப்பு வாவியின் சீ-பிளேன் இறங்கு தளத்திற்கு அனுமதி வழங்கியது யார்?


SHARE

Author: verified_user

0 Comments: