தமிழ் அரசியல் கைதிகள் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கோ நாட்டின் பாதுகாப்புக்கோ, அல்லது நாட்டின் அரசியலமைப்புக்கோ முரணானதோ எதிரானதோ அல்லவே. தமிழ் அரசியல் கைதிகள் தான் முதன் முதலாக பொது மன்னிப்புக் கோரிக்கையை முன்மொழிந்தவர்களும் அல்லவே என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய கிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு செவ்வாய் கிழமை (17) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த கடித்தில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதாவது…
உங்களது வேலைப்பழு உங்களது உட்கட்சிப்பிரச்சினைகள் உங்களால் தோர்க்கடிக்கப்பட்ட மஹிந்த மற்றும் அவரது இனவாத அணியினர் உங்களுக்குத் தரும் குடைச்சல்கள் உங்களுக்குள் இருக்கும் கறுப்பாடுகளால் நீங்கள் படும் துயரம் இத்தனை அவஸ்த்தைகளின் மத்தியில் இக்கடிதம் வாசிக்க உங்களுக்கு நேரம் ஏது.
இக்கடிதம் வழமையான அரசியல் அநாமதேயங்கள் எழுதும் பத்தோடு பதினொன்றல்லஇ வடகிழக்கு தமிழ் மக்களின் இதயத்துடிப்பின் பிரதிபலிப்பு. எழுதும் நான்கூட முகவரியற்றவனல்ல ஈழத்தை வரித்து ஆயுதம் ஏந்தி இந்திய இலங்கை ஒப்பந்தத்தோடு தேசிய அரசியலில் கலந்து இளவயதில் பாராளுமன்றத்தில் உங்களுடனும் இருந்தவன். பல தடவைகள் உங்களுடன் உரையாடியவனும் கூட.
நாட்டின் யுத்த அகோரம் என்னையும் நாடு கடத்தியது. என் தமிழ் மக்களின் விடியலுக்கான தாகம் மட்டும் என்னிடமிருந்து தணியவில்லை. மீண்டும் நாடு வந்தேன். மக்கள் விருப்பத்துடன் இன்றுஇ அதிகாரமற்ற கிழக்கு மாகாண சபையின் பேரளவு உறுப்பினர். இப்போது புரிவீர்கள் எனது கடிதத்தின் பெறுமதியை.
இலங்கை அரசியல் வரலாற்றில் நீங்கள் இமாலய சாதனை படைத்தவர். இதனை நீங்கள் உணர்வீர்களோ தெரியாது நாங்கள் உணர்ந்தவர்கள். சொந்தக் கட்சியின் ஆதரவின்றி எதிர்க்கட்சியின் ஆதரவோடு ஜனாதிபதியானவர். இது இதுவரை இலங்கையில் நிகழாத அரசியல் அதிசயம். காரணம் மஹிந்த ஆட்சியில் மக்கள் கொண்ட விரக்தி. இந்த நிலைமையில் மாற்றத்துக்கான தலைவனாக வாராது வந்த மாமணி போல உங்கள் கட்சியினைத் துணிவுடன் உதறி வந்தீர்கள். உங்களை சிங்கள மக்களின் அரைவாசியினரும் தமிழ் மக்கள் அனைவரும் மனமுவந்து வாக்களித்து ஜனநாயக மகுடம் சூட்டினர். முதன் முறையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட வட கிழக்கில் உங்களது வெற்றிக்காக வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்து வாக்குக் கேட்டது. இதுவும் கூட இலங்கை அரசியலில் நிகழாத புதுமையே.
ஜனவரி 8 மக்கள் எதிர்பார்த்த மாற்றம் வந்தது. இதன் பெரும் பங்கு வட கிழக்கு தான் என்பதை மனச்சாட்சியுள்ள நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் ஜனாதிபதியானபின் நீங்கள் அளித்த நேர்காணல் ஒன்று எனக்கு ஞாபகம் வருகிறது. ஜனவரி 8ஆம் திகதியப் புரட்சியில் நான் தோல்வியுற்றிருந்தால் இன் நேரம் ஆறடிக் குழிக்குள் இருப்பேனென்று நீங்கள் கூறியது. இதனது மறு கருத்துஇ இன்று நீங்கள் உயிர் வாழ்வதற்கு அந்த வெற்றிதான் காரணம் என்பதே. அதன் உட்கருத்து இன்று நீங்கள் உயிர் வாழ்வது வட கிழக்கு மக்களின் ஒருங்கிணைந்த ஆதரவென்பதே. இதனை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நினைகிறேன்.
உங்களால் தோர்க்கடிக்கப்பட்ட மஹிந்த கூட அப்போது பெரும்பான்மையோரின் சிறுபான்மையாலும் சிறிபான்மையோரின் பெரும்பான்மையாலும் நீங்கள் வெற்றி பெற்றதாக பெரும்பான்மையினரிடம் கூறியதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.
ஒட்டு மொத்த வட கிழக்கு மக்களும் ஏன் உங்களுக்காக ஒன்றாகத் திரண்டார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏன் உங்களுக்காகக் களத்தில் இறங்கியது. காரணம் மஹிந்தவின் பத்தாண்டு ஆட்சியில் வட கிழக்கு மண்ணும் வட கிழக்கு மக்களும் பட்ட துயரங்களேயாகும். மஹிந்த வட கிழக்கினை திறந்தவெளிச் சிறைச்சாலையாகவும் வட கிழக்கு மக்களை திறந்தவெளிச் சிறைக் கைதிகளாகவுமே நடத்தினார். நிறைவேற்று அதிகாரத்தையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் உச்ச அளவில் பயன்படுத்தினார் இந்தக் கொடுமையிலிருந்து சமத்துவமாக எம்மை வாழ வைக்கும் மீட்பர் நீங்கள் என எம் மக்கள் கருதியதாலேயே உங்களுக்காக நாம் அனைவரும் ஒன்று திரண்டோம்.
ஆனால் இன்று என் மனதில் அந்த நம்பிக்கை நம்பிக்கையீனமாக மாறிக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் இல்லாமலுமில்லை. கடந்த காலங்களில் அரசு அமைப்பதற்கும் ஆட்சியில் அமர்வதற்கும் எம் தமிழ் தலைமைகள் உதவியதும்இ ஒப்பந்தங்கள் செய்ததும் பின்னர் சிங்களத் தலைமைகள் பின்வாங்குவதும் ஒப்பந்தங்கள் கிழித் தெறியப்படுவதும் புதியதல்லவே. அந்த வரிசையில் நீங்களுமா என இன்னும் நான் நம்பவில்லை.
அண்மைய தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தை எடுப்போம். அவர்களது கோரிக்கைகள் ஒன்றும் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கோ நாட்டின் பாதுகாப்புக்கோஇ அல்லது நாட்டின் அரசியலமைப்புக்கோ முரணானதோ எதிரானதோ அல்லவே. தமிழ் அரசியல் கைதிகள் தான் முதன் முதலாக பொது மன்னிப்புக் கோரிக்கையை முன்மொழிந்தவர்களும் அல்லவே. அரசுக்கு எதிராகப் போராடிய பலருக்கு இருதடவைகள் கிளர்ச்சி செய்து அரசை மாற்றத் துடித்த மக்கள் விடுதலை முன்னணியினருக்கு ஏன் அரசியல் சாராத குற்றவியல் வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகளுக்குஇ அரச ஆதரவாளர்களுக்கு அரசும் நிறைவேற்று அதிகாரமும் பொது மன்னிப்பளித்தமையும் இவர்கள் சிங்கள இனம் என்ற ஒரே காரணத்துக்காக தென்னிலங்கை அரசியல்வாதிகள் இவற்றை அங்கீகரித்தமையும் போன்ற எத்தனையோ முன்னுதாரணங்கள் உங்கள் முன் உள்ளன என்பதை நீங்கள் அறியவில்லையா? அல்லது அறிய மறுக்கின்றீர்களா? என்பதைக் கூட என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லையே.
காட்டாட்சி நடத்திய மனிதாபிமானத்துக்கு எதிரான மனிதாபிமான யுத்தம் நடத்திய மஹிந்த கூட முள்ளிவாய்க்கால் மௌனத்தின் பின் சரணடைந்த போராளிகள் களத்தில் நேரடியாக நின்ற கடும் போராளிகள், தடுப்பு முகாம்களில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களில் அவரால் இல்லாமல் செய்யப்பட்டவர்கள் போக 12ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்களுக்கு புனர்வாழ்வளித்து சமூக மயப்படுத்தி, அவர்களில் பலருக்கு வாழ்வாதார உதவிகளையும் வழங்கியது கூட உங்களுக்கு முன்னுதாரணமாகத் தெரியவில்லையே. இது கூட ஏனென்பது எனக்குத் புரியவில்லையே.
விடுதலைப்புலிகளின் கடும் நிலைவாதிகள் கே.பி. கருணா, பிள்ளையான், தயா மாஸ்ரர், ஜோர்ச் மாஸ்ரர், போன்றவர்கள் தொடர்பாக அப்போதைய மஹிந்த அரசும் சட்டமா அதிபர் திணைக்களமும் நடந்து கொண்ட வழிமுறையும் கூட உங்களுக்கு ஏன் முன்னுதாரணமாக விளங்கவில்லை. இவை யாவும் நாட்டின் சட்ட திட்டங்கள் நீதி நெறிமுறைகள், நாட்டின் அரசியலமைப்பு என்பவற்றுக்கு முரணாக நடைபெற்றதாக நீங்கள் கருது கின்றீர்களா?.
இவ்வளவுக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் ஆதரவாக உள்ளவர்கள் யார், எதிராகக் குரல் கொடுப்பவர்கள் யார் என்பதைக் கூட நீங்கள் அறியவில்லையா?. உங்கள் நல்லாட்சி அரசின் நல்ல, மனிதாபிமான அமைச்சர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மலையகத் தமிழ் அரசியல் கட்சிகள், பாராளுமன்றம் சாராத அரசியல் கட்சிகள், மறைந்த சோபித தேரர் உட்பட நாட்டின் சிவில் சமூக மனித உரிமை அமைப்புக்கள், போராளிகளின் தாக்குதலில் சிக்கித் தப்பிய பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, ஏன் அண்மைய சில நாட்களாக டக்ளஸ் தேவானந்தா கூட, இதற்கு ஆதரவு நல்குகின்ற நிலையில் நீங்கள் ஏன் தயங்குகின்றீர்கள் யாருக்குப் பயப்படுகின்றீர்கள். சட்டம் நீதி என்பவற்றுக்குப் பயப்படுகின்றீர்களா. அல்லது மக்களால் தூக்கியெறியப்பட்ட மஹிந்த உட்பட அவரது இனவாதக் குழுவினருக்குப் பயப்படுகின்றீர்களா?. அப்படியாயின் உங்களை ஆறடிக்குள் புதைக்க நினைத்த அந்த இனவாதிகளுக்காக உங்களை ஆட்சியில் அமர்த்திய எம்மக்களை தண்டிக்கின்றீர்களா புறக்கணிக்கின்றீர்களா. இவ்வாறு நான் ஐயப்படுவதில் ஐயம் இருப்பதாக எண்ணவில்லை.
217 தமிழ் அரசியல் கைதிகள் இவர்களில் அனேகர் களத்தில் நேரடியாகச் செயற்பட்டவர்கள் அல்ல. விடுதலைப்புலிகளைக் கண்டவர்கள் அவர்களுடன் நின்றவர்கள். உணவு கொடுத்து உபசரித்தவர்கள் என்பதாகவே உள்ளது. இவர்களது வாக்குமூலம் கூட பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் அடிப்படையில் சித்திரவதையின் மூலம் பெறப்பட்டவையே. இவர்களது விடுதலையும் பொது மன்னிப்பும் நாட்டைத் தலைகீழாக புரட்டிவிடும் என்ற மஹிந்த குழுவினரின் பரப்புரைகளை நீங்களுமா நம்புகின்றீர்கள். நீதியமைச்சரின் கூற்று இதனை ஒப்புவிக்கின்றது. தமிழ்க் கைதிகளின் விடுதலை பொது மன்னிப்பின் கீழ் அல்ல என்று அவர் கூறுவது யாரைத் திருப்திப்படுத்த மஹிந்த தனது காலத்தில் பேரினவாதிகளுக்காக உரையாற்ற தனது அமைச்சர்கள் சிலரையும், சில குழுவினரையும் உருவாக்கியதற்கும் உங்களது நீதியமைச்சர் கூறுவதற்கும் வேறுபாடு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. இந்த 217பேர் விடயத்தில் இத்தனை குழறுபடியென்றால் எமது அரசியல் தீர்வு பற்றிச் சிந்திக்கக் கூட முடியாதுள்ளதே.
ஜனாபதிபதித் தேர்தலின் போதும் பாராளுமன்றத் தேர்தலின் போதும் நீங்கள் எதிர்பார்த்த தென்னிலங்கை வாக்குகளுக்காக இனப்பிரச்சினை விடயத்தைப் பூதாகாரமாக்கி உங்களையும் உங்களது வெற்றியையும் நாம் சங்கடப்படுத்த விரும்பவில்லை. ஆனால் இரண்டிலும் நீங்கள் வெற்றிபெற்றீர்கள். வெற்றி பெற்ற பின்னர் எமது பிரச்சினை தொடர்பாக நீங்கள் இதுவரை மூச்சுக்கூட விடவில்லை. இனிக் கூறுவீர்கள் எதிர்காலத்தில் உள்ளுராட்சித் தேர்தல்கள் வருகின்றன. அடுத்து மாகாண சபைத் தேர்தல் வரும். தென்னிலங்கை வாக்குகளுக்காக மீண்டும் தள்ளிப் போடுவோம் என்று கூறி, தென்னிலங்கை வாக்குகளுக்காக எமது அரசியல் தீர்வினை சமரசம் செய்யும் உங்களது நோக்கத்தினை எனக்குப் புரிந்து கொள்ள முடியவில்லை.
இறுதியாக மீண்டும் நாம் ஏமாந்து விட்டோமோ, எமது மக்களை பிழையாக வழிநடத்தி விட்டோமோ என்று ஐயுறுகிறேன். ஒன்றை மட்டும் உங்களுக்கு அழுத்தமாக ஞாபகப்படுத்துகிறேன். ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் ஆயுதப் போராட்டம் பற்றி கனவிலும் நினையாத மிதவாதத் தலைமையே தமிழரிடமிருந்தது. அவர்களது அரசியல் போராட்டம் அஹிம்சைஇ ஹர்த்தால் கடையடைப்பு பகிஸகரிப்பு என்று வன்முறை சாராததாகவே இருந்தது. மிதவாதத் தலைமை இளைஞர்களிடம் கைமாறியபோது நாட்டில் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டது. அது முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்தது. மீண்டும் மிதவாதத் தலைமை இன்று தமிழர் தம் அரசியலை வழி நடத்துகிறது.. ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் நடந்தது போல வட கிழக்கில் மீண்டும் ஹர்த்தால் கடயடைப்பு பகிஸ்கரிப்பு துளிர்விட ஆரம்பித்துள்ளது. இது நாட்டுக்கு நல்ல சகுனம் அல்ல என்றே நான் கருதுகின்றேன்.
இதை நான் கூறுவது முன்னாள் ஈழ விடுதலைப் போராளி களத்தில் நின்றவன் விழுப்புண் கண்டவன் யுத்தத்தில் போராளிகளதும் மக்களதும் வலிகள் துயரங்கள் உணர்ந்தவன். எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத்திரு நாட்டை இன்றும் உணர்வு பூர்வமாக நேசிப்பவன் இந்த உணர்வுகள் தான். உங்களுக்கு இந்த நீண்ட பகிரங்க மடலை வரைய என்னைத் தூண்டியது. எம்மக்களது இந்த இதயத்துடிப்பை நீங்கள் புரிவீர்களா? புரிவீர்கள் என்ற நம்பிக்கை இன்னும் முற்றாக நீங்கிவிடவில்லை. அதே போல இனியொரு பகிரங்க மடல் எழுதும் நிலை வேண்டாம் எனக்கு. என அதில் மேலும் தெரிவித்து ள்ளார்
0 Comments:
Post a Comment