(இ.சுதா)
கிழக்கு மாகாணத்தில் முதலாவது சிறந்த தபால் சேவகருக்கான விருது கல்முனை தபாலகத்தில் சேவையாற்றும் நற்பிட்டிமுனைச் சேர்ந்த வேலுப்பிள்ளை தியாகமூர்த்திக்கு கிடைத்துள்ளது
இலங்கை அஞ்சல் சேவை வரலாற்றில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை தபால் அலுவலகத்தில் கடமையாற்றும் நற்பிட்டிமுனை விவேகானந்தர் வீதியினை வதிவிடமாகக் கொண்ட ஐந்து பிள்ளைகளின் தந்தையான வேலுப்பிள்ளை தியாகமூர்த்தி கிழக்கு மாகாணத்தில் முதலாவது சிறந்த தபால் உத்தியோகத்தராக தெரிவு செய்யப்பட்டு கல்முனை தபால் அலுவலகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
அண்மையில் அக்கரைப்பற்று அதாவுல்லா கலையரங்கில் நடைபெற்ற 141வது உலக அஞ்சல் தின நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதி அஞ்சல்மா அதிபர் எஸ்.விவேகானந்தலிங்கத்தினால் சிறந்த தபால் சேவைக்கான நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
வேலுப்பிள்ளை கனகம்மா தம்பதியினருக்கு மகனாக ஓன்பது சகோதரர்களைக் கொண்ட குடும்பத்தில் ஐந்தாவது பிள்ளையாக 15.06.1957 இல் பிறந்த இவர் ஆரம்பக் கல்வியினை நற்பிட்டிமுனை சிவசக்தி மகாவித்தியாலயத்திலும் உயர் கல்வியினை கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் கற்று 11.09.1985 ஆம் ஆண்டு கல்முனை தபாலகத்தில் இணைந்து கொண்டார். இவர் ஆரம்பத்தில் தந்தி சேவகராக தனது சேவையினை ஆரம்பித்தார். பின்னர் சேவை மூப்பு அனுபவ அடிப்படையில் தபால் சேவகராக பதவி உயர்வு பெற்று சுமார் முப்பது வருட சேவையில் பல அனுபவங்களை பெற்ற சிறந்த தபால் உத்தியோகத்தராகத் திகழ்கின்றார்.
சிறந்த சமூக சேவையாளராகவும் மும் மொழிகளிலும் தேர்ச்சி பெற்றுள்ள இவர் சமாதான நீதவான், அகில இலங்கை தபால் தந்தி தொடர்புகள் சங்க கல்முனைக் கிளையின் செயலாளராகவும், பல வருடங்களாக சேவையாற்றி வருகின்றார்.
இன மத மொழி பேதங்களுக்கு அப்பால் மூவின மக்களுடனும் இணைந்த வகையில் மகத்தான சேவையாற்றி வருகின்றமையினால் கிழக்கு மாகாணத்தில் சிறந்த தபால் சேவருக்கான விருது இவருக்கு கிடைத்துள்ளது. தனது பெருமைக்கு வித்திட்ட அஞ்சல் குடும்பத்தினருக்கும் பிரதேச மக்களுக்கும் நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment