9 Nov 2015

தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் எதிர்வரும் வியாழக்கிழமை கவன ஈர்ப்பு சாத்வீக போராட்டம் ஆரம்பிக்கவுள்ளது.

SHARE
சிறைச்சாலைகளில் உண்ணாவிரதம் இருந்து போராடும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் எதிர்வரும் வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு கவன ஈர்ப்பு சாத்வீக போராட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அலுவலகத்தில் திங்கட்கிழமை (09) மாலை இடம்பெற்ற கூட்டத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், சா.வியாளேந்திரன், ஞா.ஸ்ரீநேசன், கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், கோ.கருணாகரம், ஞா.கிருஸ்ணபிள்ளை, எஸ்.இராஜேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.

வியாழக்கிழமை நடைபெறும் கவனஈர்ப்பு சாத்வீக போராட்டத்தின் போது ஜனாதிபதிக்கு கொடுப்பதற்காக அரசாங்க அதிபரிடம் மகஜர் வழங்கவுள்ளதாகவும், அதேவேளை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான உரிய நடவடிக்கை எடுக்காவிடின் தங்களது கவன ஈர்ப்பு போராட்டம் உண்ணாவிரத போராட்டமாக மாறும் எனவும் தெரிவித்தனர்.

அத்தோடு கடந்த 17ம் திகதி எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தனிடம் கூறிய வாக்குறுதியை இவ்வரசாங்கம் நிறைவேற்றவில்லை எனவும், கட்டம் கட்டமாக பிணை வழங்காமல் அனைவரையும் மனிதாபிமான அடிப்படையில் ஜனாதிபதி விடுதலை செய்ய முன்வருமாறும் வேண்டுவதாக இதன்போது கலந்து கொண்ட பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

எனவே வியாழக்கிழமை நடைபெறும் கவன ஈர்ப்பு சாத்வீக போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக உழைக்கும் தமிழ் உறவுகள், சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள், பொதுமக்கள், நலன்விரும்பிகள் அனைவரையும் தவறாது கலந்து கொண்டு தங்களுடைய ஆதரவை வழங்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.





SHARE

Author: verified_user

0 Comments: