கடந்த அரசாங்க காலத்தில் நிறைவேற்றப்பட்ட திவிநெகும சட்டம் மாகாண சபைகளுக்குரிய விடயங்களை உள்வாங்கியுள்ளது. எனவே இச்சட்டம் செயலிழக்குமாறு செய்யப்படல் வேண்டும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளருமாகிய துரைராசசிங்கம் தெரிவித்தார்.
திங்கட் கிழமை ஜனாதிபதி மாழிகையில் இடம்பெற்ற 2016 – 2018 ஆம் ஆண்டுக்கான உணவு உற்பத்தி தேசிய செயற்திட்டம் தொடர்பான 02 வது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன் போது அமைச்சர் ஜனாதிபதியிடம் பல வேண்டுகோள்களையும் முன்வைத்தார்.
இவை தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் கிழக்கு மாகாணம் 25 வருடங்கள் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. இந்த நிலையில் இவ்வாறான செயற்திட்டத்தை எமது மாகாணத்தில் வெற்றியளிக்கும் வகையில் நடைமுறைப் படுத்துவதெனில் பல்வேறு அடிப்படை அம்சங்கள் இங்கு பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
அதாவது அடிப்படை உள்ளீடுகளான விவசாயக் கிணறுகள், விவசாய உபகரணங்கள், விதை நெல் உற்பத்திக்கான ஏற்பாடுகள், நிலத்தினைச் சமப்படுத்தல், சிதைந்து கிடக்கும் குளங்களையும் வாய்க்கால்களையும் செப்பனிடுதல் போன்ற விடயங்கள் தொடர்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
அது மட்டுமல்லாது 13 வது திருத்தச் சட்டத்தின் படி விவசாயம் தொடர்பான விடயங்கள் மாகாணசபை நிரலினுள்ளே வருகின்றன. ஆராய்ச்சியும், அதனுடன் தொடர்பான விடயங்கள் மாத்திரமே மத்திய அரசிற்கு உட்படுகின்றன. எனினும் கடந்த ஆட்சிக் காலங்களில் மாகாணத்திற்குரிய விவசாயத்துறையின் பல்வேறு அம்சங்கள் மத்திய அரசிற்குள் உள்வாங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக கடந்த அரசாங்க காலத்தில் நிறைவேற்றப்பட்ட திவிநெகும சட்டம் மாகாண சபைகளுக்குரிய விடயங்களை உள்வாங்கியுள்ளது. எனவே இச்சட்டம் செயலிழக்குமாறு செய்யப்படல் வேண்டும். அத்துடன் மாகாணங்களுடையிலான அதிகாரி எனும் பதிவியும் தேவையற்றதொன்றாகும். விவசாய சேவைகள் துறை மாகாண சபைகளிடம் கையளிக்கப்படல் வேண்டும். கடற்பரப்புபகளில் கரையில் இருந்து 14 கிலோமீற்றர் தூரம் வரையுள்ள பிரதேசம் மாகாண சபைகளின் அதிகாரப் பரப்பெல்லைக்கு உட்பட்டது என்கின்ற நிலைமையை அங்கீகரித்து மாகாண சபைகள் இவ்வடயத்தில் செயற்பட வழிவகைகள் செய்ய வேண்டும்.
அத்துடன் விசேடமாக மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுருத்தமட்டில் 4000 ஹெக்டெயர் பரப்புள்ள காடுகள் அம்பாறை மாவட்டத்தில் இருந்து வருகின்ற சட்டவிரோத பயிர்ச்செய்கையாளர்களால் காடழிக்கப்பட்டு பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. இதனால் இப்பிரதேசத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய மேய்ச்சற்தரை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இவ்விடயம் பண்ணையாளர்களுக்கும் சட்டவிரோத பயிர்ச்செய்கையாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்படக்கூடிய நிலைமையை உருவாக்கியுள்ளது. இவை தொடர்பிலும் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் அங்கு தெரிவித்தார்.
மேலும் இவ்விடயங்களை அவதானத்துடன் கேட்டுக்கொண்டிருந்த ஜனாதிபதி அவர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குரிய தனித்துவமான பிரச்சினைகள் தொடர்பில் அவ்விடங்களுக்கு வருகை தந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனப் பதிலளித்ததாக அமைச்சர் தெரிவித்தர்.
0 Comments:
Post a Comment