4 Nov 2015

பிள்ளையானின் கைதானது ஜக்கிய தேசிய கட்சியின் ஒரு காய்நகர்த்தலாகும். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியம். (நேர்காணல்)

SHARE

                                             (RTX)

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேந்திரனுடன் ஒரு நேர்காணல்.

கேள்வி:- பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை   சம்பந்தமாக முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இக்கைது குறித்து நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?

பதில்:- உண்மையிலே இச்சம்பவமானது இவ் அரசாங்கத்தின் ஒரு கண்துடைப்பு செயலாகும். எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலை மையமாகக் கொண்டு ஐக்கிய தேசிய கட்சி அதிக ஆசனங்களை பெற வேண்டுமாக இருந்தால் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது தென்பகுதி மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இழக்க செய்ய வேண்டுமாக இருந்தால் முன்னாள் ஜனாதிபதியின் ஊழல்கள் மற்றும் ஏனைய குற்றங்களை   வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். அதற்காகத்தான் பிள்ளையான் போன்றவர்கள் மூலம் செய்த கொலைகள் மற்றும் ஊழல்களை வெளியில் கொண்டு வந்து அவர்களின் வாக்கு வங்கியினை இல்லாமல் செய்வற்கான ஒரு காய்நகர்த்தலாகும். 

கேள்வி:- முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளிதரன் அண்மையில் ஊடகங்களுக்கு தன்னை யாருமே கைது செய்ய முடியாது என்று கூறியுள்ளமை தொடர்பாக நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

பதில் :- அவர் சொல்வதிலும் நியாயம் உள்ளது. ஏனென்றால் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் படுகொலை நடைபெற்ற காலத்தில் தான்       (வி.முரளிதரன்) இந்தியாவில் இருந்ததாக கூறினார். 2004ம் ஆண்டு காலப்பகுதியில் நாங்களும் கூட மட்டக்களப்புக்கு வர முடியாத நிலைமை. இந்திய அரசாங்கம் கருணா அம்மானை பயன்படுத்தியுள்ளது. இந்தியாவின் வழிநடத்தலில் தான் எந்தவொரு இலங்கை அரசாங்கமும்; இருந்தது. ஆகவே இந்தியாவுக்கு எதிரான சில நடவடிக்கைகளை, உண்மைகளை இவர் வெளிக்கொண்டு வரும் நிலைப்பாடும் உள்ளது. ஆகவே எழுந்தமானமாக இவர் கைது செய்யப்படமாட்டார். ஆனால் 700 பொலிஸ் உத்தியோகஸ்தர் படுகொலை சம்பந்தமான வழக்கில் கைது செய்யப்படலாம். 

கேள்வி:- முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளிதரன் பாராளுமன்ற  உறுப்பினர் கிங்ஸிலி இராசநாயகம் படுகொலை தொடர்பில் தங்களுக்கும்(பா.அரியம்) தொடர்பு உள்ளது. ஆகவே தங்களையும் விசாரஷை செய்ய வேண்டும் என்று கூறுகின்றார். இது உண்மையா?

பதில் :- இது ஒரு பொய்ப்பிரச்சாரம். உண்மையிலே கிங்ஸிலி இராசநாயகம் அவர்கள் உயிருடன் இருக்கும் போதே நான் பாராளுமன்ற உறுப்பினராகி விட்டேன். அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமா பண்ணியதன் பின்னரே நான் அப்பதவிக்கு வந்தனே தவிர அவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர் நான் அப்பதவிக்கு வரவில்லை. இது பற்றி என்னை விசாரணை செய்ய வேண்டிய தேவைப்பாடும்  இருக்காது.

கேள்வி :- கிங்ஸிலி இரசநாயகம் அவர்களின் படுகொலைக்கு யார் காரணமாக இருக்கலாம் என நீங்கள் நினைக்கின்றீர்கள்?

பதில் :- உண்மையிலே அது பற்றி எனக்குத் தெரியாது. நான் அந்த காலகட்டத்தில் கொழும்பிலே இருந்தேன். விடுதலைப்புலிகள் செய்தார்களா? ,அல்லது அதே காலகட்டத்தில் தான் கருணா பிளவு இடம்பெற்றிருந்தது. அவர்கள் செய்தார்களா? என்பது குறித்து தெரியாது. ஆனால் இது குறித்து கட்டாயம் ஒரு விசாரணை தேவை.

கேள்வி:- கருணா அம்மான் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைவதாக கூறி இருந்தால் நீங்கள் அதனை ஏற்றுக் கொள்வீர்களா?

பதில்:- அதுபற்றி பரிசீலனை செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல் அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏதாவதொரு கட்சியில் இணைய வேண்டும். ஆனால் இங்குள்ள கட்சிகள் அனைத்திற்கும் கொள்கைகள் உள்ளன. அதாவது வடக்கு கிழக்கு இணைந்த ஆட்சி, மற்றும் காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்க வேண்டும். ஆனால் முன்னர் விடுதலைப் போராட்டத்தின் போது இக்கொள்கையில் இருந்தவர். பின்னர் கொள்கையினை கைவிட்டுவிட்டார். பொலிஸ் அதிகாரம் தேவையில்லை காணி அதிகாரம் தேவை என்னும் கருத்தை அண்மைய ஊடகங்களுக்கு தெரிவித்தார். இவ்வாறு முரண்பட்ட கொள்கைகளை உள்ளவரை இணைத்தால் கூட்டமைப்பினுடைய செல்வாக்கு அடிமட்டத்தினோடு குறைந்து விடும். ஆகவே இவரை நான் மட்டுமல்ல யாருமே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

கேள்வி:- கருணா அம்மான் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைவதனை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?

பதில்:- கருணா அம்மான் இணையமலே தமிழர் விடுலைக் கூட்டணியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு பல உதாரணம் உள்ளது. 2006ம் ஆண்டு யாழில் இடம்பெற்ற மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு 322 வாக்குகளைப் பெற்றார். மீண்டும் கூட்டமைப்புடன் இணைந்து வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட போது 2906 வாக்குகளைப் பெற்று சொந்த மாவட்டமான கிளிநொச்சியில் தோற்கடிக்கப்பட்டார். கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் கூட கொழும்பிலே போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதை விட அவர் தமிழ் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பினை ஒன்றையும் ஆரம்பித்தார். அவர் தன்னிச்சையாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார். தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்ட போதும் தனித்து போட்டியிட்ட  போதும் அனைத்து இடங்களிலும் இவர் சார்ந்த கட்சி மக்களால் நிராகரிக்கப்பட்டது.

கேள்வி:- 2012ம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே மட்டக்களப்பு மாவட்டத்திலே மக்கள் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியை ஆதரித்தவர்கள் தானே? 

பதில்:- ஆம். தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்டமையினால் வெள்ளிமலை அவர்கள் வெற்றியடைந்தாரே தவிர ஆனந்த சங்கரியின் ஆதரவினாலோ அல்லது தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சி என்பதனாலோ அல்ல. அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சி எதில் கேட்டிருந்தாலும் வெற்றி அடைந்திருப்பார். அதேவேளை 2010ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தனித்து தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்ட போது வெற்றியடையவில்லை.

SHARE

Author: verified_user

0 Comments: