13 Nov 2015

மட்டு வெபர் மைதானத்தை விரைவில் திறந்துவைக்க பிரதி அமைச்சர் ஹரீஸ் நடவடிக்கை

SHARE
மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற
உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசனின் அழைப்பின் பேரில் மட்டக்களப்பு
மாவட்டத்தின் விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் நேற்று (12) வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்தார்.
மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி சம்பந்தமான உயர்மட்ட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாநகர சபை கூட்ட மண்டபத்தில் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்றது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன், விளையாட்டு
அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே.டீ.எஸ். ருவான் சந்திர, பிரதி பணிப்பாளர் கொடமுன, அமைச்சின் பிரதம பொறியியலாளர் ரனசிங்க பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளரும், முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் உள்ளிட்ட மாநகர சபை உயர் அதிகாரிகள், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலில், மட்டக்களப்பு மாவட்டத்தின் விளையாட்டு
அபிவிருத்திற்காக மாவட்டத்தின் பல பிரதேசங்களில் 400 மீற்றர் மைதானங்களை அமைப்பதற்கு இணக்கம் காணப்பட்டதுடன் பாராளுமன்ற உறுப்பினரின் வேண்டுகோளுக்கினங்க திராய்மேடு பிரதேசத்தில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் ஒன்றினையும் எதிர்காலத்தில் நிர்மாணித்தல் தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டதாக பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

வெபர் மைதானத்தின் அபிவிருத்தி வேலைகளுக்கு ஏற்பட்டுள்ள நிதிப்பற்றாக் குறைகளை நீக்கி அதற்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு இவ்வருட டிசம்பர் மாதற்திற்குள் அபிவிருத்தி வேலைகளை பூர்த்தி செய்து இம்மைதானம் மக்களின் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் புகழ் பூர்த்த விளையாட்டு வீரர்களைக் கொண்ட
மாவட்டமாகும். எனது காலப்பகுதியில் இம்மாவட்ட வீரர்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய மைதானங்களையும், வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுத்து தலை சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கி இங்கிருந்து சர்வதேசத்திற்கு அவர்களை கொண்டு செல்வேன் எனவும் தெரிவித்தார்.




SHARE

Author: verified_user

0 Comments: