23 Nov 2015

மரத்துக்கு உரிமை கோரும் குருவிச்சைகளுமல்ல, வேர்களுக்கு சவால் விடுபவர்களுமல்ல! – ஜனா

SHARE
யுத்தம் ஒன்றில் முதலில் பலியாவது உண்மை என்பார்கள், யுத்;த விமர்சகர்கள். அதாவது எவ்வாறாவது யுத்தம் வெல்லப்பட வேண்டும் என்பதே இதன் பொருளாகும். அதே போல மட்டக்களப்பு மாவட்டத்தில் சிலரது அரசியல் உயிர் வாழ்வுக்கு கோவிந்தன் கருணாகரம் (ஜனா ) பலியாக வேண்டும். இது இன்று அரசியலில் பிரகாசித்தவர்களுக்கோ அல்லது அரசியலில் ஒளி மங்கியவர்களுக்கோ, அவர்களது அடிவருடிகளுக்கோ அனைவருக்கும் பொருந்தும்.

என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) இன்று திங்கட் கிழமை (23) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது…..

ஜனாவை பலியாக்குவதன் மூலம் தமது அரசியல் வாழ்வை வளப்படுத்த, ஸ்திரப்படுத்த வேண்டிய வங்குரோத்து நிலை இன்னும் இவர்களுக்கு!.
மாகாண அரசியலில் நான் புகுந்த நாள் முதல் எனக்கு எதிராக எத்தனை கணைகள்! அபிமன்யுவுக்கோ சக்கர வியூகம் மட்டும் அர்ச்சுனனுக்கோ நாகாஸ்திரம் மட்டும் இராவணனுக்கோ ராமபாணம் மட்டும், ஜனாவுக்கு மட்டும் இவற்றோடு பிரம்மாஸ்திரமும் கூட.

ஊடக தர்மத்துக்கு ஒவ்வாத தாக்குதல்கள், முகத்தை மறைத்து முகவரியை மறைத்து, பிரபலத்துக்காக தமிழ் தேசியத்தையே மறுக்கும் அடுத்தவர்கள் பெயரில் இணையத்தளம் அமைத்து, யாரோ ஒருவரின் பிள்ளைக்கு சொந்தங் கொண்டாடும் இணையத்தளங்கள் நேரடியாக விமர்சிக்கத் திராணியற்ற இணையத்தளங்கள், மஞ்சள் பத்திரிகையையொத்த இணையத்தளங்கள் யாவும், ஜனா என்கிற தனி மனிதனைக் குறி வைத்துத் தாக்கி தம் சுய வக்கிரத்தைச் சுவைத்து மகிழ்வதில்  பேருவகையடைகின்றனர். 
இவர்கள் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை அறியாதவர்கள். போராட்டத்தில் பங்கு பற்றாதவர்கள், குறைந்த பட்சம் போராட்டத்திற்கு தார்மீக உதவி நல்கியவர்கள் கூட இல்லை. இவர்கள்தான் தமது தனிப்பட்ட குரோத, விரோதங்களைத் தீர்ப்பதற்காக  என்னைப்பற்றி கீழ்த்தர விமர்சனங்களை மேற்கொள்கின்றார்கள். இந்த மேதாவிகளுக்கு எனது போராட்ட வரலாறு பற்றி என்ன தெரியும். இலங்கைப் பாதுகாப்புப் படைகளுடன் நேரடியாகக் களத்தில் பல தாக்குதல்களில் பங்குபற்றிப் போராடியவன், படுகாயமடைந்தவன். எம் தமிழ் மக்களின் உதவி, ஆதரவோடு உயிர் காப்பாற்றப்பட்டவன். இன்றும் உயிர் வாழ்பவன்.

இவ்வேளையில் தமிழர் தேசியப் போராட்டம் சார் சில மறந்த, மறைக்கப்பட்ட உண்மைகளைச் சொல்லியாகவேண்டும். யாழ்ப்பாணம் அச்சுவேலி தோப்புக்குள், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நன்கு அறியப்பட்ட விடுதலைப்புலிகளின் தளபதி பண்டிதரின் முகாம் 1985 ஆரம்பப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால் சுற்றிவளைப்புக்குட்பட்ட வேளை அதனைத்தகர்த்து பல விடுதலைப் புலிப் போராளிகளைக் காப்பாற்ற மேற்கொண்ட தாக்குதலுக்கு தலைமை தாங்கியவன் நான் என்பதனை இந்த ஈனர்கள் அறிவார்களா?

அதே போல் 85 நடுப்பகுதியில் சுதுமலை மானிப்பாயில் விடுதலைப்புலிகளின் தளபதி கிட்டு உள்ளிட்ட பல தளபதிகள் தங்கியிருந்த முகாம் இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டபோது, விடுதலைப்புலிகள் யாருக்கும் எந்த உயிர்ச் சேதமும் இன்றி  மூன்று முனைகளில் தாக்கித் தகர்த்த ரெலோவின் அணிகளில் ஒன்றில் முக்கிய போராளியாகச் செயற்பட்டவன் நான். இதற்காக மறுநாள் விடுதலைப்புலிகள் ரெலோவுக்கு நன்றி தெரிவித்து துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டதெல்லாம் இந்த விமர்சகர்கள் அறிவார்களா?
இவையெல்லாம் இயக்கங்கள் ஒற்றுமையாக இருந்த காலத்தில் நடைபெற்ற நான் சம்பந்தப்பட்ட ஒரு சில உதாரணங்களே.

துரதிஸ்டவசமாக 86ல் இயக்க முரண்பாடுகள் ஏற்பட்டதும் அதன் விளைவாக சகோதரப் படுகொலைகள் நிகழ்ந்ததும் கடந்த கால வரலாற்று நிகழ்வுகளேயாகும். இந்த விமர்சகர்கள், என்னோடு தொடர்புபடுத்திக் குறிப்பிடும் பெயர் கொண்ட நபர்கள்: இயக்க முரண்பாட்டுக் காலத்தில் கொல்லப்பட்டிருக்கலாம். இவற்றுக்கு தனிமனிதப் பகையோ, தனிமனித விரோதங்களோ காரணமாக இருக்க முடியாது. இக்கால இயக்க மோதல்களில் ரெலோ இயக்கத்தின் தலைவர், தளபதிகள், பிரதேச சபைத் தலைவர்கள், பிரதித் தலைவர்கள், போராளிகள், எம் ஆதரவாளர்கள், என பலர் கொல்லப்பட்டதற்கு மேலாக எத்தனையோ மிதவாத அரசியல் தலைவர்கள், அப்பாவிகள், மற்றும் புத்திஜீவிகள் என்று பலர் அச்சுறுத்தப்பட்டமையும், கொல்லப்பட்டமையும் வரலாறுகளேயாகும். இந்தப் பெயர்களைப் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது.

இந்த வரலாற்றுப்பின்னணி அறிந்து, புரிந்து, காலத்தின் தேவையுணர்ந்து 2002ல் தேசியத் தலைவர் எனப் புகழப்படும் பிரபாகரன் கடந்த கால கசப்புணர்வுகள், கசப்பான சம்பவங்கள், இயக்க முரண்பாடுகள் யாவற்றையும் மறந்து ஒன்றிணைந்து எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும்.

அனைத்துக் கட்சித் தலைவர்களும் தத்தமது கட்சி சார்பாக விட்ட தவறுகள், உணர்ந்து அதன் மூலம் கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்து உருவாக்கப்பட்தே அது.
வரலாறு இவ்வாறிருக்க, யாழ்ப்பாணத்தில், வன்னியில், திருமலையில், அண்மைய நகரம் அம்பாறையில் ஏன் வடகிழக்கில் இல்லாத, தனிமனித கீழ்த்தரமான விமர்சனங்களை மட்டக்களப்பில் மாத்திரம்: அதுவும் ஜனாவைக் குறிவைத்து மாத்திரம் தாக்குவதன் நோக்கம் என்ன?
ஜனா தமிழ் தேசிய ஜனநாயக அரசியலில் தடம் பதித்தது. இன்று நேற்றல்ல 1989ல் பாராளுமன்றப் பிரவேசம் மூலம் அது தொடங்கிவிட்டது. அன்றிருந்து இன்றுவரை ஜனா தமிழ்த் தேசியத்தின் வளர்ச்சிக்கும் வலுவுக்கும் உரம் ஊட்டினானேயொழிய சுயலாபத்துக்கும், சுயநலனுக்கும், சொந்தப் பொருளாதார நலன் கருதியும், குடும்ப உயர்வுக்காகவும் தமிழ்த் தேசிய அரசியலைப் பாவித்தவனல்ல.

அத்தோடு எவரையும் எவர்மூலம் அழித்தோ, அழிக்க நினைத்தோ, அரசியலுக்கு வந்தவனல்ல. எவரது குருதி வெள்ளத்தையும் கடந்து பாராளுமன்றத்துக்குப் புகுந்தவனுமல்ல. இதனை மனந்திறந்து எம் மக்களிடம் கூறுவதில் பெருமையடைகிறேன்.

இந்த உண்மைகள், இந்த உன்மத்தர்களுக்கு எப்படிப் புரியும். இனியும் இது போன்ற வக்கிர விமர்சனங்களை முன்வைக்க முனைபவர்கள் தமிழ்த் தேசியத்தை புரிந்தவர்களோ, அக்கறையுடையவர்களோ, வரித்தவர்களோ அல்ல என்பதுடன் தனிப்பட்ட நலன்களை தனிப்பட்ட நபர்களை சார்ந்தவர்களே என்பதை எம் தமிழ் மக்கள் அனைவரும் உணர்வார்கள்.
ஒன்றை மட்டும் உறுதியாகக் கூறுகின்றேன். நாங்கள் குருவிச்சைகளும் அல்ல, சொந்தமல்லாத மரத்துக்கு உரிமை கோருபவர்களுமல்ல, வேர்களுக்குச் சவால் விடும் விழுதுகளும் அல்ல.  தமிழர் தேசிய விடுதலைக்காக ஆணிவேர் கொண்ட விருட்சம் என்பதை இந்த அனாமதேயங்கள் புரிந்து கொண்டால் சரி. என அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: