சிறைச்சாலைகளில் உண்ணாவிரதம் இருந்து போராடும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் வியாழக்கிழமை காலை நடாத்தவிருந்த கவன ஈர்ப்பு போராட்டம் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கட்சி பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு இதற்குப் பதிலாக வெள்ளிக்கிழமை வட கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கவுள்ளதால் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை மட்டக்களப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை மாலை இடம்பெற்ற கூட்டத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்துடன், இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெள்ளிக்கிழமை வட கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளதால் வியாழக்கிழமை நடைபெறவிருந்த கவன ஈர்ப்பு போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எனவே தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து வெள்ளிக்கிழமை நடைபெறும் பூரண ஹர்த்தாலுக்கு இன, மத பேதங்கள் மற்றும் அரசியலுக்கு அப்பால் அனைத்து தமிழ் உறவுகளும் தங்களுடைய ஆதரவை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் வேண்டுகோள் விடுக்கின்றார்.
இக் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சா.வியாளேந்திரன், ஞா.ஸ்ரீநேசன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், ஞா.கிருஸ்ணபிள்ளை, மா.நடராசா, மு.இராஜேஸ்வரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment