10 Nov 2015

தீபாவளித் திருநாளானது அனைத்து இந்து தமிழ் மக்களின் வாழ்வில் சந்தோஷ ஒளி வீசும் நன்னாளாக மலரட்டும்.

SHARE
இவ்வாண்டின் தீபாவளித் திருநாளானது அனைத்து இந்து தமிழ் மக்களின் வாழ்வில் சந்தோஷ ஒளி வீசும் நன்னாளாக மலர இறைவனை பிரார்த்தித்து மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை சார்பிலும், எனது சார்பிலும் நல்வாழ்த்து கூறுவதாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 அவர் விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில்!

துவாபர யுகத்தில் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்ட வந்த வைகுந்த வாசனான ஸ்ரீமத் நாராயணன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மனிதர்களுக்கும், தர்மவான்களுக்கும் தொடர்ந்து துன்பத்தை விளைவித்து வந்த பூமாதேவியின் புதல்வனான நரகாசூரனை வதைத்து அவனின் ஆணவ இருளை நீக்கி, நல்லொளியை அவனுக்கு ஏற்படுத்திய இப்புனித தீபாவளி திருநாளில் எம்மிடையே உள்ள ஆணவ இருளை நீக்கியும், மனிதப் பிறவியின் உண்மை நோக்கத்தை உணர்ந்தும், இப்புவியில் வாழும் காலம் வரை தூயவர்களாகவும், தர்மவான்களாகவும் வாழ நாங்கள் ஒவ்வொருவரும் இறையருளுடன் திடசங்கற்பம் கொள்வோமாக!

எமது தாய் மண்ணில் எம் தமிழ் இனத்தையும், எங்கள் சமயத்தையும் அழித்து ஒழிக்க உறுதி பூண்டு செயற்பட்டு வரும் மனித அரக்கர்களுக்கு இறைவன் தகுந்த தண்டனை வழங்கி அவர்களை நல்வர்களாக மாற்றும் நந்நாளாகவும், எம் நாட்டின் நிலவும் சர்வாதிகார செயற்பாடுகள் ஒழிந்து மனித நேயமும், மனித உரிமை பேணலும் மேலோங்கி உண்மையான ஜனநாயகம் ஏற்பட்டு எம் தமிழ் இந்து மக்களுக்கு இந்நாட்டில் நியாயமான அரசியல் உரிமை கிடைக்கவும், அதன் மூலம் அவர்கள் நிம்மதியாக வாழவும் வழிவகுக்கும் நந்நாளாக இந்நாள் உதயமாக பிராத்திப்போம்.

எமது தமிழ் இந்துக்களில் பூர்வீக பூமியான இம்மண்ணில் எம் இனம், மதம் என்பவற்றுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அனைத்து அதர்ம செயல்களுக்கும் தகுந்த நடவடிக்கையை சர்வதேசம் வழங்கக் கூடிய வகையில் அவர்களுக்கு இறைவனின் ஆசீர்வாதம் உருவாகும் நாளான இந்நாள் அமையட்டும்.

இவ்வேளை இத்தூய நன்நாளில் (தீபாவளித் திருநாளில்) உண்மையான இந்துக்களான எமது மக்கள் பிற உயிர்களை வதைத்து அவற்றின் ஊணை உண்டு இன்பம் காணும் இந்துவாக வாழாது “ஹிம்சை”செய்யா உணர்வு கொண்ட இந்துவாக சைவ உணவு உண்டு. கேலிக்கை நிகழ்வுகளை தவிர்த்து  வறியவர்கள், இடைத்தங்கல் முகாமிலும், மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளிலும் துன்புறும் எமது மக்கள், அங்கவீனர்கள், விதவைகள், தபுதாரர்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகள், சிறைக்கூடங்களில் வாடும் உறவுகள் மற்றும் பிள்ளைகள், கணவன், மனைவி, பெற்றோர் போன்றோரை இழந்தும், காணாமல் பறிகொடுத்து ஏங்கிக் கொண்டிருக்கும் எமது உறவுகளின் துன்பம் தீர இறைவனை பிரார்;த்தித்தும் இயன்றளவு இத்துன்புறும் மக்களுக்கு நிதி, பொருள் போன்ற உதவிகளை வழங்கியும், அவர்களின் முகங்களிலும், அகத்திலும் மலரும் இன்பத்தை கண்டு மகிழ்வுறும் ஒரு இந்துவாக வாழ உருவாக்கும் நாளாக இந்நாளை நாம் பயன்படுத்த எல்லோரும் முனைவோமாக என மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE

Author: verified_user

0 Comments: