மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பிரதேசத்திற்குட்டப்பட குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்திற்குள் வெள்ளிக்கிழமை இரவு (23) புகுந்த இனந்தெரியாத நபர்கள் ஆலய விக்கிரகங்கள், மற்றும் சிலைகளை உடைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
இந்த விடையம் குறித்து ஆலய நிருவாகத்தினரும், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளரும் தமது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இனந்தெரியாத சில தீய சக்திகள் எமது ஆலயத்திலுள்ள மிக முக்கியமாக விக்கிரகங்களை உடைத்து அவர்களது விசமத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். இதனால் நவக்கிரகங்கள் ஒன்பதும், கருடவாகனம், ஆஞ்சனேயர்சிலை, மற்றும் பலிபீடம் என்பன முற்றாக உடைக்கப்பட்டு வீதி ஓரங்களில் வீசப்பட்டுள்ளன.
இவ்வாலயப் பக்தர்களை மிகவும் துயரப்படுத்துவதற்கு இச்செயற்பாடு மேற்கொள்ளப் பட்டுள்ளதாகக் கருதுகின்றேன். இதனால் கிருஷ்ண பக்தர்கள் அனைவரும் ஆலயத்தினைச் சூழ்ந்து துயரத்துடன் இருக்கின்றார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமய நிகழ்வுகள் மாத்திரமின்றி பல சமூக மேம்பாடுகளையும் முன்னெடுத்துச் செல்கின்ற ஆலயமாக இவ்வாலயம், திகழ்கின்றது. இந்த ஆலயத்தின் வளர்ச்சியை விரும்பாத சில தீய சக்திகள் ஆலய பக்தர்களுக்கு, உளவியல் ரீதியான பிரச்சனையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் திட்டமிட்ட முறையில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப் பட்டுள்ளது. என்பதை நான் வேதனையுடன் தெரிவித்துனக் கொள்கின்றேன்.
நாம் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளோம், பொலிசாரும் அவர்களது தீவிர விசாரணைகளை முன்நெடுத்துள்ளனர். இருந்த போதிலும், இவ்வாலயத்தில் கிருஷ்ண பக்தர்களாகிய நாங்கள், மிகவிரைவில் இவ்வாலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை பொதுமக்களும், துறைசாந்தவர்களும், ஏற்படுத்தித்தர வேண்டும், இந்த ஈனச் செயலில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன்நிறுத்தி அவர்களுக்குத் தகுந்த தண்டனை பெற்றுக் கொடுக்க பொதுமக்களும், சமய நிறுவனங்களும், தமது ஒத்துழைப்புக்களை நல்க வேண்டும் என குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலய சமூக மேம்பாட்டு மையத் தலைவர் கே.ஞானராசா தெரிவித்தார்.
இந்நிலையில் குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலய பரிபாலனசபைத் தலைவர் எம்.உலககேஸ்பரம் தெரிவிக்கையில்…
எமது ஆலயம் சில விசமிகளால் உடைக்கப் பட்டுள்ளமையானது எமக்கு மிகுந்த வேதனையைத் தருகின்றது. இவ்வாறான சம்பவங்கள், மனவிரேதத்தை ஏற்படுத்தும் செயலாகவேயுள்ளது. இச்சம்பவம் எமது ஆலயத்தில் களவு எடுக்க வேண்டும், என்றநோக்குடன் இடம்பெற்றதாகத் தெரியவில்லை. எமது ஆலயத்தை உடைத்தவர்கள் ஆலயத்திலிருந்த ஆவணங்கள் எதையும் கொண்டு செல்லவில்லை, ஏனோ தானோ என்ற நிலையில், விக்கிரகங்களை உடைத்தெறிந்துவிட்டுச் சென்றுள்ளார்கள். இச்செயற்பாடானது, அரசியல் பின்னணி என்று கூறமுடியாது, எமது ஆலய நிருவாகத்தினரின் முன்னேற்றகரமான செயற்பாடுகளைப் பொறுத்துக்கொள்ளாதா தீய சக்திகளே இவற்றைப் புரிந்துள்ளார்கள்.
இலங்கையில் நல்லாட்சி நடைபெறுகின்றது எனக் கூறிக்கொள்ளும் இவ்வாறான சூழலில் இச்செயற்பாடானது மிகவும் வேதனையைத் தருகின்றது. என அவர் தெரிவித்தார்…
இருந்த போதிலும், குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலய உடைப்புச் சம்பவத்தை சனிக்கிழமை மாலை ஆலயத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டுவிட்டு கருத்துத் தெரிவித்த மண்முனை தென் எருவிப் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம்.
இவ்வாலத்தில் தற்போது நடந்துள்ள விடையம் ஒரு அரக்கத்தனமானதாகும், இது இந்து மதத்தை இழிவுபடுத்தும் செயற்பாடாகும். இச்செயற்பாட்டை இப்பிரதேசத்திற்குப் பொறுப்பான பிரதேச செயலாளர் என்ற வகையில் நான் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
இச்சம்பவத்தோடு தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்கு பொலிசாருடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு எனக்கும், இக்கிராம மக்களுக்கும், இருக்கின்றது என்பதை எடுத்துக் கூறுகின்றேன்.
மிகவும் பழங்காலத்திலிருந்து இவ்வாலயத்தில், வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பிரதேச்திலே இருக்கின்ற ஒரே ஒரு கிருஷ்ணன் ஆலயம் இதுமாத்திரமே எனவே இப்படிப்பட்ட ஆலயத்தின் மீது கைவைத்தவர்களுக்கு கிருஷ்ணபகவானும் தக்கதண்டனை வழங்குவார் என அவர் மேலும் தெரிவித்தார்.
எது எவ்வாறு அமைந்தாலும், குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலய உடைப்புச் சம்பவம் தொடர்பில் அதன் சூத்திரதாரிகளைக் கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் நிறுத்துவதும், அவர்கள் என்ன தேவைகளுக்காக இவ்வாறான ஈனச் செயலில் ஈடுபட்டார்கள் என மக்களுக்குத் தெழிவுபடுத்த வேண்டியதும் சம்மந்தப்பட்டவர்களின் தலையாய கடமையாகும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
0 Comments:
Post a Comment