16 Oct 2015

மக்களுடைய விருப்பப்படி இன்று ஒரு ஆட்சி அமைக்கப்பட்ட போதிலும் நிர்வாகக் கட்டமைப்பு ஏற்கனவே இருந்த அமைப்பு தான் இருக்கின்றது.

SHARE
மக்களுடைய விருப்பப்படி இன்று ஒரு ஆட்சி அமைக்கப்பட்ட போதிலும் நிர்வாகக் கட்டமைப்பு ஏற்கனவே இருந்த அமைப்பு தான் இருக்கின்றது. அதன் காரணமாகத் தான் இந்த நல்லாட்சி என்பது நினைத்த அளவு வேகத்திலே செல்ல முடியாமல் இருக்கின்றது என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.
திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், எப்போது மனிதன் இயற்கைக்கு மாறாகச் செயற்படத் தொடங்கினானோ அப்போதே தன்னைத் தானே அழித்துக் கொள்ளத் தொடங்கி விட்டான். இந்த விவசாயத்தில் எல்லா இடங்களிலும் வியாபாரம் என்கின்ற ஒன்று நுழைந்தமையால் மக்கள் ஏமாற்றப்படுகின்றார்கள். மக்கள் நாளுக்கு நாள் செத்துக் கொண்டிருக்கக் கூடிய வகையில் நவீன முறைகள் இத்துறைக்குள் வந்து விட்டன.
நவீனத்துவம் விவசாயத்தில் வந்தமையால் உற்பத்தி பெருகியது ஆனால் நவீனத்துவதிற்கு ஒரு கட்டப்பாடு இல்லை என்பதன் காரணமாக மக்கள் இருந்தாலும் சரி இறந்தாலும் சரி என்று இந்த முதலாளித்துவம் வியாபர நோக்கம் காரணமாக அதிகூடிய நவீனத்துவத்தினைப் பயன்படுத்துகின்றது.
ஆனால் தற்போது ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளமையை உணர முடிகின்றது. இயற்கை விவசாய உற்பத்திகள் அதிகரித்தக் கொண்டு இருக்கின்றன. இதனைப் பெறுவதற்கு மக்கள் அதிகம் நாட்டம் காட்டுகின்றார்கள். எனவே தற்போது நாங்கள் ஆரம்பத்தில் செய்தது போன்று இயற்கையோடு சேர்ந்து விவசாயம் செய்வதற்கு நெறிவுறுத்தப்பட்டிருக்கின்றோம்.
நாம் கொண்ட அங்கலாய்ப்பின் காரணமாக கூடுதலான காடுகளை அழித்து விட்டோம். ஒரு நாட்டில் சாராரணமாக 25 வீதத்திற்கும் மேலதிகமாக காடுகள் இருக்க வேண்டும். ஆனால் அபிவிருத்தி என்ற கோட்பாட்டில் சரியாகத் திட்டமிடாது மிகப்பெரிய லாபத்தினை அடைய வேண்டும் என்பதன் காரணமாக நாங்கள் பலரும் இயற்கையைச் சேதப்படுத்தி விட்டோம்.
மகாவலி அபிவிருத்தித் திட்டம் நமது நாட்டிற்குத் தேவையானது ஆனால் அந்த மகாவலி அபிவிருத்தித் திட்டம் தான் நம்முடைய நாட்டில் மிகவும் பெரும்பாலான காடுகளை அழிப்பதற்குக் காரணமாகியிருக்கின்றது.
இவ்வாறு காடுகளுக்குள் நாம் செல்ல காட்டினுள் இருக்கும் யானைகள் இன்று ஊருக்குள்ளே வந்து அட்காசம் செய்கின்றது. நாம் காடுகளுக்குள் சென்றால் யானைகள் வீடுகளுக்குள்ளே வரும் என்கின்ற ஒன்றுக்கொன்று எதிர்த்தாக்க நிலைமை தற்போது நிகழ்கின்றது.
சரியாகத் திட்டமிடாமடல் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளால் தான் இன்று எமது மாகாணத்தில் மேய்ச்சற் தரைப் பிரச்சினை காடழிக்கின்ற பிரச்சினைகள் என்பன ஒன்றோடு ஒன்று முட்டி மோதிக் கொண்டிருக்கின்றது. இப்போது இருக்கின்ற நவீன இயந்திரங்களைப் பயன்படுத்திக் கொண்டு கூடுதலான நிலங்களில் காடுகளை அழித்து அங்கு விவசாயம் மேற்கொள்ள முற்படுகின்றார்கள் இதன் காரணமாக நாங்கள் கால் நடைகளைச் சரியான முறையில் பாதுகாக்க முடியாமல் இருக்கின்றது.
கால்நடைகள் வெறுமனே பால் தருபவையாக மட்டுமல்லாமல் விவசாயிகளை பாதுகாப்பவையாகவும் இருக்கின்றன. எனவே தான் விவசாயம் கால்நடைகள் என்பன சமமாக நடந்து கொள்ள வேண்டும்.
இங்கு விவசாயம் கால்நடைகளுக்கு மாத்திரம் அல்ல மீன்பிடி தொடர்பான பிரச்சினைகளும் இருக்கின்றன. தடுக்கப்பட்ட வலைகளைப் பாவித்து மீன்களைக் குஞ்சோடு அள்ளிக் கொண்டு போய் விடுகின்றார்கள். இதனால் இன்னும் கொஞ்ச காலங்களில் மீன் வளமும் இல்லாமல் போய்விடுமோ என்கின்ற அபாய எச்சரிக்கையும் நம்முன்னே இருக்கின்றது.
எனவே சரியான முறையில் திட்டமிடாததன் காரணமாகவும், தான் தான் வாழ வேண்டும் என்பதன் காரணமாகவும் பல்வேறு விதமான பிரச்சினைகளை நாமே உருவாக்கிக் கொள்கின்றோம்.
நெல் சந்தைப்படுத்தல் தொடர்பான பிரச்சினை நாடு பூராகவும் இருக்கின்றது. இத்திட்டம் ஏழை விவசாயிகளுக்கு என கொண்டு வரப்பட்டது. குறைந்தளவு பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் ஏழை விவசாயிகளின் நண்மை கருதி கொண்டு வரப்பட்ட இத்திட்டம் பாரிய பயிர்ச் செய்கையாளர்களின் உள்வருகையால் சிக்கல் நிலையில் உள்ளது. இது தொடர்பில் ஏழை விவசாயிகள் விழிப்பாக இருக்க வேண்டும். நாமும் வெறுமனே வாக்குக் கேட்பவர்களாக இல்லாமல் எப்போதும் எமது மக்களுடன் ஏழை விவசாயிகளுடன் கைகோர்த்து நிற்போம்.
கடந்த காலங்களில் நிதி மோசடி போன்ற பல்வேறு விடயங்கள் பல்வேறு தரப்புகளின் நடைபெற்றன. நிதி தொடர்பான சட்ட திட்டங்கள் பேணப்படாமையால் இந்த நிலை ஏற்பட்டது. இப்போது நிலை மாறியிருக்கின்றது. இப்போது மக்களால் சுட்டிக்காட்டப்படுகின்ற விடயங்களைச் சுட்டிக்காட்டுவதற்கு அரசு ஆயத்தமாக இருக்கின்றது.
ஆனால் மக்களுடைய விருப்பப்படி இன்று ஒரு ஆட்சி அமைக்கப்பட்ட போதிலும் நிர்வாகக் கட்டமைப்பு ஏற்கனவே இருந்த அமைப்பு தான் இருக்கின்றது. அவர்கள் தாங்கள் இதுவரையில் அனுபவித்து வந்த சலுகைகளை தொடர்ந்து அனுபவிப்பதற்கு விரும்புகின்றார்கள் அதன் காரணமாகத் தான் இந்த நல்லாட்சி என்பது நினைத்த அளவு வேகத்திலே செல்ல முடியாமல் இருக்கின்றது. அந்த நிலைமைகளை மாற்றியமைக்கக் கூடிய சூழலும் விரைவில் உருவாகும், உருவாகியிருக்கின்றது.
எமது பிரதேசங்கபை; பொருத்தவரையில் காடழிப்பு, காணி அபகரிப்பு சட்டவிரோத மண் அகழ்வு என்பன பாரிய அளவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன அவற்றை முறியடிப்பதற்கு நாம் பாரிய முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கின்றோம். ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்கள் வெவ்வேறு வழிகளில் அதனை மேற்கொள்கின்றார்கள். இதற்கு சில அதிகாரிகளின் ஒத்துழைப்புகளும் அவர்களுக்கு கிடைப்பதாக மக்கள் எம்மிடம் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு ஏற்கனவே பழகிவிட்ட விடயங்கள் மழைவிட்டாலும் தூவானம் விடவில்லை என்பது போல் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. எனவே இவ்வாறான நிலைமைகளை வெகுவிரைவில் மாற்றியமைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: